என்னைப் பிடிக்கவில்லையா? வேறு ஒருவரைத் தேடுங்கள்- ஜொகூர் இளவரசர்

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 17- மலேசிய கால்பந்து சம்மேளனத்தின் (எப்.ஏ.எம்) தலைவராக ஜொகூர் இளவரசர் (டிஎம்ஜே) பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் அவர் மீது எழும் விமர்சனங்கள் பல. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அவர் எப்.ஏ.எம் முகநூல் பக்கத்தில் தமது கருத்தைப் பதிவேற்றம் செய்தார். 

“என்னையோ என் வழிமுறைகளையோ பிடிக்கவில்லை என்றால், புதிய தலைவரை நியமித்துக் கொள்ளுங்கள்” என்ற தம்முடைய கருத்தை முகநூலில் அவர் வளியுறுத்தியுள்ளார்.

எப்.ஏ.எம் தலைவரான அவரது வழிமுறைகள் தக்க முறையில் இல்லையென்றும் அவரின் சொந்தக் குழுவான ஜொகூர் டாருல் தக்சீம் (ஜேடிடி) மீதே அவர் அதீத பாசம் காட்டுவதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

மலேசியாவின் கால்பந்து தரத்தை உயர்த்தவே தான் இந்தப் பதவிக்கு வந்ததாகவும், அதற்கு உண்டான முடிவுகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். 

“எனது சொந்தக் குழு என்பதால் ஜேடிடிக்கு சாதகமாக நான் எதுவும் செய்வதில்லை. நான் எப்.ஏ.எம் தலைவராகும் முன்பே அந்த அணி பல வெற்றிகளை அடைந்தது. அப்போழுதும் நான் அவர்களின் விளையாட்டிலோ முடிவிலோ பங்கெடுத்ததில்லை, இனியும் எடுக்கமாட்டேன். அதேபோல் அந்த அணி போட்டிகளில் வெல்ல வேண்டும் என கருதி நான் மற்ற அணிகளை புறக்கணிக்க மாட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.

கால்பந்து நடுவர்கள் சிலர் தங்கள் விருப்ப அணிக்கு சாதகமாக செயல்புரிவதைத் தடுப்பது, மாநில அணிகளின் கடன்களை அடைப்பது, கால்பந்து வீரர்களின் சம்பளத்தை கடனில்லாமல் முழுவதுமாகச் செலுத்துவது, கால்பந்து ஊழலைத் தடுப்பது என்று தமக்கு பல இலட்சியங்கள் இருப்பதாகவும் அவற்றை எல்லாம் சரிகட்ட போவதாகவும் டிஎம்ஜே உறுதியளித்தார்.

மேலும் கால்பந்து விளையாட்டை வளர்க்கும் வகையிலான செய்திகளை மக்களுக்கு சேர்க்க வேண்டும் என்று டிஎம்ஜே ஊடகத் துறையைக் கேட்டுக் கொண்டார். அவரைப் பற்றியோ அல்லது எப்.ஏ.எம் பற்றியோ அவதூறு பரப்ப வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS