ஷா ஆலம், ஆக.28- "நாளை நடக்கவிருக்கும் இறுதியாட்டத்தில் நான் அதிக கோல்களை அடிப்பதை விட நம் மலேசிய அணி தங்கம் வெல்வதே மிக முக்கியமானது" என மலேசியர்களின் கால்பந்து ஹீரோவாக விளங்கும் கோல்மன்னன் ந.தனபாலன் கூறியுள்ளார்.

நாளை இரவு மலேசியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான மாபெரும் இறுதியாட்டம் ஷா ஆலம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் மலேசிய கோல்மன்னன் தனபாலன் அதிக கோல்களை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். 

இதனைப் பற்றி கருத்துரைத்த தனபாலன், தனக்கு அதிக கோல்களை அடிக்க வேண்டும் என்ற ஆசையை விட நம் நாடு தங்கத்தை வெல்ல வேண்டும் என்ற ஆசையே அதிகம் என்று கூறியுள்ளார்.

"நான் அதிக கோல்களை அடிக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. எனது பயிற்றுனர் எனக்கு வழங்கிய வேலையைச் சரியாக செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். திடலில் என் குழுவிற்கு உதவுவதே முக்கியம். என்னுடன் விளையாடும் மற்ற விளையாட்டாளர்களும் கோல் அடிக்க வாய்ப்புண்டு" என்று தனபாலன் கூறியுள்ளார். 

முன்னதாக, சீ விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தின்போது மலேசிய அணி வெல்வதற்கு தனபாலன் முக்கிய பங்காற்றிய வேளை, மியன்மாருக்கு எதிரான ஆட்டத்தில் மலேசிய அடித்த 3 கோல்களில் இரண்டு கோல்கள் தனபாலனால் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷா ஆலம், ஆக.28- நாளை நடைபெறவிருக்கும் சீ விளையாட்டின் மலேசியா மற்றும் தாய்லாந்து இடையிலான கால்பந்து இறுதியாட்டத்திற்கான டிக்கெட்டுகளை வாங்க காலையிலேயே ரசிகர்கள் அரங்கத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

நாளை இரவு 8.45 மணிக்கு மலேசியர்கள் ஆவலோடு காத்திருந்த கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் ஷா ஆலம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் மலேசிய அணி தாய்லாந்து அணியைச் சந்திக்கும் நிலையில், இதற்கான டிக்கெட்டுகள் இம்முறை ஆன்லைன் வழி விற்கப்படவில்லை. மாறாக, ரசிகர்கள் நேரடியாக அரங்கத்திலேயே டிக்கெட்டுகளை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மேல் டிக்கெட்டுகள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று வேலை நாளாக இருந்தாலும் அதிகாலை முதலே ரசிகர்கள் அரங்கத்தின் வெளியே குழும தொடங்கி விட்டனர். காலை 10.30 மணி வரை ஆயிரக்கணக்கோனோர் அங்கு திரண்டிருந்தது பலரை ஆச்சரியப்படுத்தியது.

நாளை நடைபெறவிருக்கும் இறுதியாட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோல்மன்னன் தனபாலன் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கோலாலம்பூர், ஆக.26- சீ கேம்ஸ் கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா 1-0 என்ற கோல்கணக்கில் இந்தோனிசியாவை வென்று இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றது.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு குழுக்களுமே மாறி தாக்குதல் நடத்தின என்றாலும் ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் மலேசியாவின் முன்னணி வீரர் என்.தனபாலன் ஒரு கோலை அடித்து புக்கிட் ஜாலில் அரங்கத்தில் திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மேற்பட்ட ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 

இந்தக் கோலினால் அதிர்ச்சி அடைந்த இந்தோனிசியா, ஆட்டத்தைச் சமமாக்க கடைசி நேரத்தில் மிகக் கடுமையாகப் போராடியது என்றாலும் வெற்றியை மலேசியா நிலைநிறுத்திக் கொண்டது.

கோலாலம்பூர், ஆக.26- சீ விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் மலேசிய வீரர் நவ்ராஜ்சிங் மீண்டும் தங்க சாதனைப் படைத்தார். சீ போட்டிகளில் ஏற்கெனவே இரண்டு முறை தங்கம் வென்றுள்ள நவ்ராஜ், மூன்றாவது முறையாகவும் தங்கம் வென்று மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இந்தப் போட்டியில் நவ்ராஜும் மற்றொரு மலேசிய வீரரான லீ ஹுப் வெய்யும் 2 புள்ளி 24 மீட்டர் உயரம் தாண்டி சமநிலையில் இருந்தனர் என்றாலும் மறு மதிப்பீட்டின் போது தங்கம் பெறும் வாய்ப்பு நவ்ராஜ் சிங்கிற்கே கிடைத்தது. லீ ஹுப் வெய் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் மியன்மாரில் நடந்த சீ விளையாட்டுப் போட்டியிலும் 2015-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த போட்டியிலும் நவ்ராஜ் சிங் உயரம் தாண்டும் பிரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோலாலம்பூர், ஆக.24 – நச்சு உணவினால் பாதிக்கப்பட்ட 16 மலேசிய விளையாட்டு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவகாரம் குறித்து மலேசிய ஒலிம்பிக் மன்றம் (எம்.ஓ.எம்) விசாரணை செய்து வருகின்றது.

இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு தகவலை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரபூர்வ அறிக்கைக்காக காத்திருப்பதாக அதன் செயலாளர் டத்தோ லோ பெங் சோ தெரிவித்தார்.

போட்டிகள் வெவ்வேறான இடங்களில் நடப்பதினாலும் போட்டியாளர்களுக்கு வெவ்வேறான இடங்களிலிருந்து உணவுகள் சுலபமாக கிடைப்பதனாலும் இந்த சம்பவம் எங்கு எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும் என்று அறிவதற்குச் சற்று கடினமாகவே உள்ளது என்று அவர் சொன்னார். 

இருப்பினும், 16 பேரை உட்படுத்திய இந்த நச்சு உணவு விவகாரத்தை அலட்சியப்படுத்தாமல் இன்னும் தீவிரமாக ஆராய்வோம் என அவர் கூறினார். 

இரும்பு சங்கிலியில் குண்டு எரிதல் மற்றும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள இருந்த 16 விளையாட்டு வீரர்கள் இந்த நச்சு உணவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஒரு விளையாட்டு வீரரால் போட்டியில் கலந்து கொள்ள இயலாத நிலையும் உண்டானது.  

இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்கவும் அதற்கான பாதுகாப்பு திட்டத்தையும் கண்டறிய பேச்சுவார்த்தைகள் நடக்கவுள்ளன. இந்த பிரச்சனையைக் களைய கூடிய விரைவில் சிறந்த வழியைக் கொண்டு வருவோம் என செயலாளர் டத்தோ லோ பெங் சோ தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஆக.24- கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி  பிரமாண்ட திறப்பு விழாயைத் தொடர்ந்து இன்றோடு சீ விளையாட்டு போட்டியில் 5 நாட்கள் கடந்து விட்டன. இதனிடையே, முதல் நாள் தொடங்கியே தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தி மலேசிய அணி முன்னிலையில் இருக்கிறது.

இன்று காலை வரையில் உள்ள நிலவரப்படி மலேசிய அணி 51 தங்கம் 38 வெள்ளி 32 வெண்கலம் என்று மொத்தம் 121 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை வகிக்கிறது.  இரண்டாவது இடத்தில் 27 தங்கப் பதங்கங்களுடன் சிங்கப்பூரும் அதே எண்ணிக்கையில் வியட்நாம் மூன்றாம் இடத்திலும் கடும் போட்டியில் உள்ளன.

இம்முறை 111 தங்கப் பதக்கங்களைப் பெற வேண்டும் என்ற மலேசியாவின் இலக்கை அடைய போட்டியாளர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நேற்று நடந்த 'ஃப்ரீ ஸ்டைல்' நீச்சல் போட்டியில் வில்சன் சிம் நாட்டிற்கு தங்கம் பெற்று தந்தார். 'ட்ரிப்பல் ஜம்ப் ' போட்டியில் முகமட் ஹகிமி தனது சொந்த சாதனையையே முறியடித்து தங்கம் வென்றார்.

இன்றைய 'ஸ்குவாஷ் மிக்ஸ் டபல்' ஆட்டத்தில் சிவசங்கரியும் சஞ்சை சிங்கும் தங்கத்தை வென்றனர். இதனை அடுத்து, மூவர் கொண்ட கராத்தே போட்டியிலும் மலேசியாவிற்கு தங்கம் கிடைத்தது.மேலும், நேற்று நடந்த ஏ- பிரிவினர்  காற்பந்து போட்டியில் லாவோஸை வீழ்த்தி 3-1 என்ற கோல்கணக்கில் மலேசியா வெற்றி கண்டது.

இதுவரையில் தனது அபார ஆட்டங்களை வெளிப்படுத்திய மலேசிய வீரர்கள் வரும் போட்டிகளிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று ரசிகர் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது. மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருந்தாலும் அதனை தொடர்ந்து தக்க வைக்க மலேசியா அணி தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 கிளாஸ்கோ, ஆக.23- ஸ்காட்லாந்தில் நடைபெறும் உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில், சாம்பியனாக வாகைசூடும் நம்பிக்கையோடு பங்கேற்ற மலேசியாவின் தலைசிறந்த பேட்மிண்டன் வீரர் டத்தோ லீ சோங் வெய், முதல் சுற்றிலேயே தோல்விக் கண்டு வெளியேற நேர்ந்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். 

அனைத்துலக பேட்மிண்டன் போட்டிகள் பலவற்றில் லீ சோங் வெய் சாம்பியனாக வாகை சூடியுள்ள போதிலும், அவர் இதுவரை உலகச் சாம்பியன் பட்டத்தை மட்டும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

34 வயதுடைய லீ சோங் வெய் இம்முறை எப்படியாவது உலகச் சாம்பியனாக ஆகிவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் போட்டியில் கலந்து கொண்டார். 

எனினும், பிரான்சைச் சேர்ந்த இளம் வீரரான பிரிஸ் லிவர்டெஸ் என்பவரிடம் 19-21, 24-22, 17-21 என்ற புள்ளிகளில் தோல்வியுற்று லீ சோங் வெய் மிகுந்த ஏமாற்றத்துடன் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.  முதல் செட்டில் லிவர்டெஸிடம் 19-21 என்ற புள்ளிகளில் வீழ்ச்சி கண்ட போதிலும், இரண்டாவது செட்டை 24-22 என்ற புள்ளிகளில் லீ சோங் வெய் கைப்பற்றினார்.  

இரண்டாவது செட்டில் ஒரு கட்டத்தில் 16-9 என்ற புள்ளிகளில் லிவர்டெஸ் முன்னணி வகித்தார் என்ற நிலையிலும் நம்பிக்கையுடன் கடுமையாக போராடி 24-22 என்ற புள்ளிகளில்  லீ சோங் வெய் வெற்றிப் பெற்றார். மூன்றாவது செட்டில் 14-9 என்ற புள்ளிகளில் முன்னணி வகித்த லீ சோங் வெய், வெற்றி பெற்றுவிடுவார் என்ற எதிர்ப்பு நிலவியது.

ஆனால், அதன் பின்னர் தொடர்ச்சியாக புள்ளிகளை இழந்த அவர், 19-21 என்ற புள்ளிகளில் லிவர்டெஸிடம் தோல்வி கண்டார். இந்த அதிர்ச்சித் தோல்வி குறித்து தம்முடைய டுவிட்டர் செய்தியில், தெரிவித்துள்ள லீ சோங் வெய், இந்தத் தோல்விக்காக மலேசியர்களிடம் தம்முடைய வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். “உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி விட்டதற்காக வருந்துகிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.

 

 

 

 

More Articles ...