லண்டன், ஆக.20- மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரரான போல் போக்பாவுக்கு ஐந்து வருட ஒப்பந்த த்தில், 467 மில்லியன் ரிங்கிட் விலை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வாரத்திற்குச் சம்பளம் 15 லட்சத்து 22 ஆயிரம் ரிங்கிட்..., ஆனாலும் ஆட்டநேரத்தில் கொஞ்சம் அசந்தாலும் இப்படி நடுவரின் தலையில் கைவைத்துக் கொண்டு ஜாலியாக இருக்க லாமோ...!

நேற்று சவுத்தாம்ப்டன் குழுவுக்கு எதிரான பிரிமியர் லீக் ஆட்டத்தின் போது இடம்பெற்ற இப்படியொரு காட்சி, பிரிட்டிஷ் பத்திரி கைகளை ஆக்கிரமித்து ஏகப்பட்ட விமர்சனத்திற்கும் வேடிக்கைக் கிண்டல்களுக்கும் இலக்காகியது.

முதன் முறையாக களத்தில் இறங்கிய மத்தியதிடல் வீரர் போக்பா, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, தொடர்ந்து சில தவறுகளைச் செய்த போது ரசிகர்கள் தலையில் கைவைத்துக் கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தனர். 

அதேவேளையில், கோடிக் கணக்கில் கொட்டிக் குவித்தது இதற்குத்தானா? என்று மன்.யுனை. கிளப் நிர்வாகத்தினரும் தலையில் கைவைத்துக் கொண்டு கவலையுடன் இருந்த நேரம்.., ஆனால், போக்பா மட்டும் கவலையில்லாமல் நடுவரின் தலை மீதே கைவத்து விட்டார் என்பது வித்தியாசமான விஷயம் தானே..,

இருப்பினும், 20 நிமிட நேரத்திற்குப் பின்னர் போக்பாவின் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. கடைசி வரையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஆக.20- ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் பெருமைக்குரிய அரிய வாய்ப்பை மலேசியாவின் பேட்மிண்டன் இரட்டையர்களான கோ ஷெம்- டான் வீ கியோங் ஜோடி, கடைசி வினாடிகளில் நழுவ விட்டது மலேசியர்களுக்கு சோகத்தை அளித்தது என்றாலும் அரையிறுதி ஆட்டத்தில் சீன வீரர் லின் டானை வென்று மலேசியாவின் லீ சோங் வெய் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது ஆறுதலாக அமைந்திருக்கிறது.

நேற்று தொடக்க ஆட்டமாக லீ சோங் வெய் - லின் டான் ஆட்டம் அமைந்த போது நாடு தழுவிய அளவில் வீடுகளிலும் பொது வர்த்தக வளாகங்களிலும் உணவகங்களிலும் மக்கள் திரளாகக் கண்டுகளித்தனர்.

கோலாலம்பூரில் நடந்த யாயாசான் கஜானாவின் 10ஆவது ஆண்டு நிறைவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், இதர அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுடன் லீ சோங் வெய்- லின் டான் ஆட்டத்தை உற்சாகத்துடன் கண்டு களித்தார். லின் டானுக்கு எதிராக ஒவ்வொரு புள்ளியையும் லீ சோங் வெய் வென்றெடுக்கும் போதேல்லாம் பிரதமர் உற்சாகக் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அதைவிட உற்சாகமாக அமைந்தது லீ சோங் வெய்யின் வெற்றி என்று பிரதமர் தமது சிறப்புரையில் சுட்டிக்காட்டினார். 

இதனிடையே தங்கப் பதக்கத்திற்கான இரட்டையர் ஆட்டத்தில் மலேசியாவின் கோ ஷெம்- டான் வீ கியோங் ஜோடி, சீன ஜோடியிடம் கடுமையாகப் போராடித் தோற்றது குறித்து தமது டுவிட்டரில் கருத்து கூறியிருக்கும் பிரதமர் நஜிப், இவர்களின் போராட்டம் மலேசியர்களுக்கு பெருமிதத்தை அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் மலேசியாவுக்கு மூன்றாவது வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்திருப்பது நாட்டை பெருமைக்கு உள்ளாக்கி இருக்கிறது எனப் பிரதமர் சொன்னார்.

தங்களால் முடிந்தவரை அவர்கள் போராடினர். அவர்களின் வெள்ளிப் பதக்க சாதனைக்காக பெருமை கொள்வோம். இதில் வெட்கப்பட எதுவுமில்லை. நமது பையன்கள் நமக்குப் பெருமையைத் தந்துள்ளார்கள் என்று இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஆக.20- மலேசியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்லும் முயற்சியில் வீரப் போராட்டம் நடத்திய பேட்மிண்டன் இரட்டையர்களான கோ ஷெம்-டான் வீ கியோங் ஜோடி, முடிவில் நூலிழையில் தங்கத்தைப் பறிகொடுத்து வெள்ளிப் பதக்கத்தையே பெற்றனர்.

முதல் தங்கத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்த மலேசியர்கள் சோகத்தில் மூழ்கினர். சீனாவின் ஃபூ ஹய் பெங் - ஷாங் நன் ஜோடி     21-16, 11-21, 23-21 என்ற புள்ளிகளில் வென்று தங்கப் பதக்கத்தை பெற்றது, ரியோ ஒலிம்பிக்கில் மலேசியாவுக்கு கிடைத்த 3ஆவது வெள்ளியாகும்.

இறுதியாட்டம் தொடங்கிய நிறிது நேரத்தில் 7-3 என்ற புள்ளிகளில் மலேசிய வீரர்கள் பின்தங்கினர். எனினும், புதிய உத்வேகம் பெற்று திறம்பட ஆடத் தொடங்கி கோ ஷெம்-டான் வீ கியோங் ஜோடி 13-8 என்ற நிலையில் முன்னணி வகித்தனர்  அடுத்து  அவர்கள் கடைசி வரையில் முன்னிலை கைவிடாமல் முதல் செட்டை 21-16 என்ற புள்ளிகளில் வெற்றிகரமாக முடித்தனர்.

இரண்டாவது செட்டில் அதிகமான தாக்குதல்களில் இறங்கிய சீன வீரர்கள் மிக எளிதாக புள்ளிகளை ஈட்டினர். மலேசிய ஜோடி தவறுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இறுதியில் சீனா ஜோடி 21-11 என்ற புள்ளி இரண்டாவது செட்டைக் கைப்பற்றி ஆட்டத்தை சமமாக்கியது.

மூன்றாவது செட்டில இருதரப்புக்களும் கடுமையாகப் போராடின. பின்தங்கிய நிலையில் இருந்த மலேசியா, ஆகக் கடைசியாக இரண்டு முறை வெற்றியின் விளிம்பை எட்டியது. தங்கப் பதக்கத்திற்கு ஒரேயொரு புள்ளி மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அந்த இருமுறையும் சர்வீஸ் செய்வதில் மலேசிய வீரர்கள் செய்த தவறே தோல்விக்கு வித்திட்டது. 

கோலாலம்பூர், ஆக. 19- மலேசியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்க நம்பிக்கை நட்சத்திரமான லீ சோங்  வெய் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தார். இன்று மிகவும் பரபரப்பாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் தனது பரம வைரியான சீனாவின் லின் டானை கடுமையான போராட்டத்திற்குப் பின்னர்  லீ சோங் வெய் வீழ்த்தினார்.

முதல் செட்டில் 21-15 என்ற புள்ளிகளில் லீ சோங் வெய் எளிதாக வீழ்ந்த போது கோடிக்கணக்கான மலேசியப் பேட்மிண்டன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். எனினும், இரண்டாவது செட்டில் அபாரமாக ஆடி பதிலடி கொடுத்தார் லீ சோங் வெய். 

இந்த செட்டில் அவர் 21-11 என்ற புள்ளிகளில் வென்றார். வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய மூன்றாவது  செட் ஆட்டத்தில்அனல் பறந்தது. இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்த வண்ணம் இருந்தனர். இறுதிக் கட்டத்தில் லீ சோங் வெய் பதட்டமின்றி ஆடி 22-20 என்ற புள்ளிகளில் வெற்றியைத் தட்டிப் பறித்தார்.

இருமுறை லின் டானிடம் ஒலிம்பிக் தங்கத்தை பறிகொடுத்து வெள்ளியைப் பெற்ற லீ சோங் வெய், இம்முறை லின் டானை அரையிறுதியில் வென்று இறுதியாட்டத்திற்குள் நுழைந்தார்.

கோலாலம்பூர், ஆக.19- ரியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் போட்டியாளர்களுக்கு நாடு திரும்பியவுடன் பரிசு மழை காத்திருக்கிறது. பதக்கத்தோடு நாடு திரும்பும் வீரர்களுக்கு பரிசாக கார் வழங்கப்படும் என புரோட்டோன் இன்று அறிவித்தது.

முன்னமே, பதக்கம் வெல்லும் போட்டியாளர்களுக்கு சன்மானங்கள் வழங்க மாநில அரசாங்கங்கள் அறிவிப்பு செய்துள்ள நிலையில், இன்று புரோட்டோன் தலைவரும் இயக்குனருமான டத்தோ ஶ்ரீ சைட் ஃபைஷால் அல்பார் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதாவது, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு புரோட்டோன் பெர்டானா 2.0 ரக பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு புரோட்டோன் சுப்ரிமா எஸ் ரக காரும் வெண்கலம் பெறும் வீரர்கள் புரோட்டோன் ஐரிஸ் ரக காரையும் பரிசாக பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, முக்குளிப்பில் பண்டலீலா ரினோங் மற்றும் சியோங் ஜூன் ஹூங், கலப்பு இரட்டையர் பிரிவில் சான் பெங் சூன் மற்றும் கோ லியூ யிங் ஆகிய நால்வரும் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர். 

அதேநேரத்தில் நாட்டிற்கு முதல் பதக்கம் பெற்று தந்த அஸிசுல்ஹஸ்னி அவாங் சைக்கிளோட்டப் பிரிவில் வெண்கலம் பெற்றுள்ளார். 

கோலாலம்பூர், ஆக.19- இன்று நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் தனது பரம வைரியான சீனாவைச் சேர்ந்த லின் டானைச் சந்திக்கவிருக்கிறார் மலேசியாவின் நம்பிக்கை நட்சத்திரம் லீ சோங் வெய். இதில் லின் டானின் உளவியல் விளையாட்டில் கவனம் தேவை என லீ சோங்விற்கு அறிவுரை கூறியுள்ளார் முன்னாள் தேசிய பயிற்றுனர் ரஷிட் சீடேக்.

இன்று நடக்கவிருக்கும் போட்டியில் லீயின் தற்போதுள்ள விளையாட்டு ஆற்றல் அளவுகோளாக இருந்தால் லின் டானை வெல்லும் வாய்ப்பு அதிகம் என அவர் மேலும் கூறினார். 

அதே நேரத்தில் உலகின் முதல் நிலை விளையாட்டாளராக இருக்கும் லீ சோங், தனது எதிரியான லின் டானின் விளையாட்டு யுத்திகளில் கவனம் செலுத்தவேண்டும். இருவரின் விளையாட்டு தரமும் ஒன்று தான். ஆனால் விளையாட்டின் போது பயன்படுத்தப்படும் உளவியல் யுத்திகள் தான் போட்டியை நிர்ணயிக்கும் என அவர் மேலும் கூறினார்.

1996ம் ஆண்டு நடந்த அட்லாண்ட ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் முன்னாள் தேசிய வீரர் ரஷிட் சீடேக் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோர்ஜ் டவுன், ஆக.19- ரியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இரட்டையர்களில் ஒருவரான சான் பெங் சூனுக்கு பரிசாக ரிம150,000 வழங்கப்படவிருக்கிறது. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த பெங் சூனுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் ரிம100,000 ரிங்கிட்டும் பினாங்கிலுள்ள பேரங்காடி ஒன்று ரிம50,000 வழங்கவுள்ளன. 

பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் தனது முகநூலில் இதனைத் தெரிவித்தார். வெற்றி பெற்ற வீரர்களில் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சபெங் சூனோடு சேர்ந்து விளையாடிய கோ லியூ யாங் என்பவருக்கு பினாங்கு அரசு ரிம25,000 வழங்கவுள்ளது. மலாக்கா அரசு இரு ஜோடிகளுக்கும் தலா ரிம50,000 பரிசுத்தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மலேசியர்களில் கனவாக இருந்த ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்று வரை சென்று போராடி வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களை நாம் அங்கீகரிப்பது அவசியம் என லிம் தெரிவித்தார்.

More Articles ...