புத்ராஜெயா, ஆக.29- இன்று நீர் விளையாட்டு அரங்கத்தில் நடந்த சீ விளையாட்டு ‘வூமன் ஜம்ப்’ போட்டியில் தேசிய இளையோர் சறுக்கல் வீராங்கனையான ஆலியா யூங் ஹனிபா தங்கத்தை வென்றுள்ளார்.

தனக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தோனிசியாவைச் சேர்ந்த ரோசி அமீருடன் போட்டியிட்டு ஆலியா இறுதியாக வெற்றி வாகை சூடியுள்ளார். திங்கட்கிழமை நடைபெற்ற தொடக்க சுற்றுகளில் 14 வயதான ஆலியா 32.8 மீட்டர் குதித்து புதிய தேசிய சாதனைப் படைத்துள்ளார். 

முதல் சுற்றில் 30.7 மீட்டர் பதிவு செய்த ஆலியா இரண்டாம் சுற்றில் 32.6 மீட்டர் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இது ஆலியாவிற்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும். முன்னதாக நடந்த ‘வூமன்ஸ் ஸ்லாலோம்’ போட்டியில் ஆலியா வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கோலாலம்பூர், ஆக.29– கோலாலம்பூர் சீ விளையாட்டுப் போட்டியில் 111 தங்கப் பதக்கங்களை வெல்லும் தனது வெற்றி இலக்கை மலேசியா கடந்து இருப்பது நாட்டைப் பெருமிதம் கொள்ளச் செய்திருக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார். 

இந்த விளையாட்டுப் போட்டியினால் மலேசிய மக்களிடையே ஆக்கக்கரமான உணர்வுகள் எழுச்சி பெற்றுள்ளன. மலேசியக் குழுவினரின் வெற்றியையும் உறுதிப்பாட்டினையும் மலேசியர்கள் முழுமையாக பாராட்டுகின்றனர். தாம் சந்தித்த மக்கள் அனைவருமே மிகச் சிறந்த உணர்வுகளையே வெளிப்படுத்தியுள்ளனர் என்றார் அவர்.

மதம், இனம், நிறம், கலாசாரம் என்ற பாகுபாடுகளுக்கெல்லாம் அப்பால், நாட்டு மக்களின் மன உணர்வுகளை மாற்றியமைத்த பெருமை சீ கேம்ஸ் விளையாட்டாளர்களையே சாரும் என்றார் அவர். 

மலேசியாவின் 111ஆவது தங்கப் பதக்கத்தை முன்னணி சைக்கிள் வீரரும், 'கெரின்' சைக்கிளோட்டப் பிரிவில் உலகச் சாம்பியனுமான முகம்மட் அஸீசுல்ஹஸ்னி நேற்று வென்றார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நமது விளையாட்டாளர் தங்கியிருக்கும் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நஜீப் மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றிக்காக தேசிய விடுமுறையை அறிவிப்பீர்களா? என நிருபர்கள் கேட்ட போது “கொஞ்சம் பொறுங்கள். சீ கேம்ஸ் விளையாட்டு இன்னும் முழுமை பெறவில்லையே” என்று பிரதமர் நஜீப் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர், ஆக.28– சீ விளையாட்டுப் போட்டியில் ரசிகர்களால் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் மலேசியா–தாய்லாந்துக்கு இடையிலான இறுதியாட்டத்தின் போது, மலேசிய ஆட்டக்காரர்கள் நிதானப் போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டத்தோ ஓங் கிம் சுவீ வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான வெற்றிகளால் உற்சாக அலைகளில் மூழ்கி விடாதீர்கள். மிதப்பான போக்கு இருக்கக் கூடாது என்று ஆட்டக்காரர்களை அவர் எச்சரித்தார். 

தாய்லாந்து மிகச் சிறந்த குழு என்பதை மறந்து விடக்கூடாது. அரையிறுதியில் இந்தோனேசியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருப்பதை வைத்து அலட்சியம் காட்டிவிடக் கூடாது என்றார் அவர். 

இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தின் 87ஆவது இடத்தில் மலேசியாவின் முன்னணி வீரர் என்.தனபாலன் வெற்றிக் கோலை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு ஷா அலாம் அரங்கத்தில் நடக்கும் இறுதியாட்டத்தில் மலேசியாவும் தாய்லாந்தும் மோதவுள்ளன. புருணை, சிங்கப்பூர், மியன்மார், லாவோஸ் மற்றும் இந்தோனிசியா ஆகிய நாடுகளை வென்று மலேசியா இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றுள்ளது.

“நமது குழு தற்போது உச்சக்கட்ட ஆற்றலுடன் விளங்குகிறது. ஆட்டக்காரர்கள் மிகுந்த உற்சாகத்தோடு தாய்லாந்துடன் மோதத் தயார் நிலையில் உள்ளனர் என்று குழுவின் கேப்டன் முகம்மட் அடிப் ஜைனுதீன் கூறினார்.  

 

கோலாலம்பூர், ஆக.28- சீ விளயாட்டுப் போட்டியில் அபார வெற்றிகளைக் குவித்துவரும் மலேசியாவின் 100ஆவது தங்கத்தை இசை ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அமி குவான் டிக் வெங் வென்றார்.

இம்முறை 111 தங்கங்களை தனது இலக்காகக் கொண்டிருக்கும் மலேசியா, அந்த இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டு வரும் நிலையில், 100ஆவது தங்கத்தை இன்று காலை 12 மணியளவில் 'ஜிம்னாஸ்டிக் ரிப்பன்' பிரிவில் அமி குவான் வாகை சூடினார். 22 வயதுடைய அமிக்கு இது இரண்டாவது சீ கேம்ஸ் தங்கமாகும்.

அதேவேளையில் மற்றொரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான கூய் சீ யான் மேலும் இரு தங்கங்களை வென்று சாதனைப் படைத்தார். இவர் ஏற்கெனவே ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இரண்டு தங்கங்களை வென்றுள்ளார். இவர் மட்டும் மொத்தம் 4 தங்கங்களை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷா ஆலம், ஆக.28- "நாளை நடக்கவிருக்கும் இறுதியாட்டத்தில் நான் அதிக கோல்களை அடிப்பதை விட நம் மலேசிய அணி தங்கம் வெல்வதே மிக முக்கியமானது" என மலேசியர்களின் கால்பந்து ஹீரோவாக விளங்கும் கோல்மன்னன் ந.தனபாலன் கூறியுள்ளார்.

நாளை இரவு மலேசியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான மாபெரும் இறுதியாட்டம் ஷா ஆலம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் மலேசிய கோல்மன்னன் தனபாலன் அதிக கோல்களை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். 

இதனைப் பற்றி கருத்துரைத்த தனபாலன், தனக்கு அதிக கோல்களை அடிக்க வேண்டும் என்ற ஆசையை விட நம் நாடு தங்கத்தை வெல்ல வேண்டும் என்ற ஆசையே அதிகம் என்று கூறியுள்ளார்.

"நான் அதிக கோல்களை அடிக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. எனது பயிற்றுனர் எனக்கு வழங்கிய வேலையைச் சரியாக செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். திடலில் என் குழுவிற்கு உதவுவதே முக்கியம். என்னுடன் விளையாடும் மற்ற விளையாட்டாளர்களும் கோல் அடிக்க வாய்ப்புண்டு" என்று தனபாலன் கூறியுள்ளார். 

முன்னதாக, சீ விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தின்போது மலேசிய அணி வெல்வதற்கு தனபாலன் முக்கிய பங்காற்றிய வேளை, மியன்மாருக்கு எதிரான ஆட்டத்தில் மலேசிய அடித்த 3 கோல்களில் இரண்டு கோல்கள் தனபாலனால் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷா ஆலம், ஆக.28- நாளை நடைபெறவிருக்கும் சீ விளையாட்டின் மலேசியா மற்றும் தாய்லாந்து இடையிலான கால்பந்து இறுதியாட்டத்திற்கான டிக்கெட்டுகளை வாங்க காலையிலேயே ரசிகர்கள் அரங்கத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

நாளை இரவு 8.45 மணிக்கு மலேசியர்கள் ஆவலோடு காத்திருந்த கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் ஷா ஆலம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் மலேசிய அணி தாய்லாந்து அணியைச் சந்திக்கும் நிலையில், இதற்கான டிக்கெட்டுகள் இம்முறை ஆன்லைன் வழி விற்கப்படவில்லை. மாறாக, ரசிகர்கள் நேரடியாக அரங்கத்திலேயே டிக்கெட்டுகளை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மேல் டிக்கெட்டுகள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று வேலை நாளாக இருந்தாலும் அதிகாலை முதலே ரசிகர்கள் அரங்கத்தின் வெளியே குழும தொடங்கி விட்டனர். காலை 10.30 மணி வரை ஆயிரக்கணக்கோனோர் அங்கு திரண்டிருந்தது பலரை ஆச்சரியப்படுத்தியது.

நாளை நடைபெறவிருக்கும் இறுதியாட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோல்மன்னன் தனபாலன் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கோலாலம்பூர், ஆக.26- சீ கேம்ஸ் கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா 1-0 என்ற கோல்கணக்கில் இந்தோனிசியாவை வென்று இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றது.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு குழுக்களுமே மாறி தாக்குதல் நடத்தின என்றாலும் ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் மலேசியாவின் முன்னணி வீரர் என்.தனபாலன் ஒரு கோலை அடித்து புக்கிட் ஜாலில் அரங்கத்தில் திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மேற்பட்ட ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 

இந்தக் கோலினால் அதிர்ச்சி அடைந்த இந்தோனிசியா, ஆட்டத்தைச் சமமாக்க கடைசி நேரத்தில் மிகக் கடுமையாகப் போராடியது என்றாலும் வெற்றியை மலேசியா நிலைநிறுத்திக் கொண்டது.

More Articles ...