கோலாலம்பூர், ஆக.9- மலேசியாவின் 60-ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தை முன்னிட்டு ஆசியப் பசிபிக் பல்கலைக்கழகம் மாபெரும் மெர்டெக்கா கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கொண்டாட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தின் ஐகோனிக் கேம்பஸ்சில் மதியம் மணி 12 தொடங்கி இரவு 10.30 மணியளவில் நடைபெறவிருக்கின்றது.

கடந்தாண்டு மெர்டெக்கா கொண்டாட்டத்தில் சுமார் 3,000 பேர் திரண்டு ஆதரவு தந்ததால் இவ்வாண்டு பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட சுமார் 8,000 மக்கள் கலந்து சிறப்பிப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்தக் கொண்டாட்டத்தைப் பிரதமர் துறை அமைச்சர் டான்ஸ்ரீ  பங்லிமா ஜோசம் குருப் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார். இந்தக் கொண்டாட்டத்தில் ஒற்றுமைக் கலைவிழா, ஒற்றுமை ஓட்டம், உணவு விழா, பாரம்பரிய விளையாட்டு, கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. 

இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் ‘யுனிட்டி ரன்’ என்ற 5 கிலோமீட்டர் ஒற்றுமை ஓட்டத்தில் இடைநிலைப்பள்ளி மாணவர்களும் பொது மக்களும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் பங்குப்பெற 50 ரிங்கிட்டையும்  பொது மக்களுக்கான பிரிவில் பங்குப்பெற 60 ரிங்கிட்டையும் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த ஓட்டத்தில் கலந்துக் கொள்ள இணையம் வழி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

 

இந்த ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தின் மெர்டெக்கா கொண்டாட்டத்தைப் பற்றிய மேல் விபரங்களுக்கு, சுரேஷ் (017-8886634), ஷேரன் (017-2841388) ஆகியோருடன் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 

கோலாலம்பூர், ஆக.9- இன்னும் 10 தினங்களில் தொடங்கவிருக்கும் சீ விளையாட்டு போட்டியில் மலேசியாவின் பெண்களுக்கான 4x100 தொடர் ஓட்டக் குழுவிலிருந்து ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.கோமளம் ஷால்லி நீக்கப்பட்டார்.

நாட்டின் சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனைகளில் ஒருவரான கோமளம் சில கட்டொழுங்கு பிரச்சனை காரணமாக சீ விளையாட்டிலிருந்து கைவிடப்பட்டதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனம், தேசிய விளையாட்டு மன்றம் மற்றும் மலேசிய ஒலிம்பிக் மன்றம் ஆகியவை சுட்டிக்காட்டிய அடிப்படையில், நியாயமான காரணங்கள் மற்றும் முறையான வழிமுறையின் பேரில்தான் கோமளம் தொடர் ஓட்டக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் கைரி சொன்னார்.

கோமளம் இல்லாதது தேசிய தொடர் ஓட்ட அணிக்கு பாதிப்பு எதனையும் ஏற்படுத்துமா? என்பது தான் தம்முடைய முதல் கேள்வியாக இருந்தது என்று குறிப்பிட்ட அமைச்சர் கைரி,   கோமளத்திற்கு ஈடான போட்டியாளர்கள் கைவசம் இருப்பதால் கவலை தேவையில்லை என்று குழு நிர்வாகம் தமிடம் கூறியதாக அவர் விளக்கினார்.

நான்கு பேர் அடங்கிய இந்த ஓட்டப்பந்தயத்தில் குழு ஒற்றுமையும் விட்டுக் கொடுக்கும் மனப்பன்மையும் தான் மிக முக்கியம். ஆனால். குழுவின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் தான் கோமளம் நீக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. 

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து பொது ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு தேசிய சாதனை படைத்த  மலேசிய தொடர் ஓட்டக்குழுவில் கோமளமும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஆக.9- பெண்களுக்கான 250 மீட்டர் வேகப் பனிச் சறுக்கு ஓட்டப் பிரிவில் இன்று மலேசிய நேரப்படி மாலை 3.10க்கு ஐந்து வயது ஶ்ரீஅபிராமி தனது இறுதி போட்டிக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்.

இந்தோனிசியாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய பனிச் சறுக்குப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஶ்ரீஅபிராமி சந்திரன் போட்டியிடுகிறார். ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் பனிச் சறுக்குப் போட்டியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளார்கள். ஶ்ரீஅபிராமி 6 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான தனிநபர் பிரிவில் 4 போட்டியில் பங்கேற்றார்.

வெற்றிகரமாக இந்த நான்கு போட்டியிலும் அவர் இறுதி சுற்றுக்குத் தேர்வாகி மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.மூன்று போட்டிகளிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி மலேசியாவிற்குப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 

அதேவேளையில், சிறுமி ஶ்ரீஅபிராமி, ஆசிய பனிச் சறுக்கு நடனப் போட்டியில் முதன் முறையாக தமிழ்ப் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வரலாறு படைத்தார்தமிழ்ப் பாடலான 'செந்தூரா.., செந்தூரா...' பாடலுக்கு அவர் பனிச் சறுக்கு அரங்கில் அபாரமாக நடனமாடி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று நடைபெறவிருக்கும் 250 மீட்டர் வேகப் பனிச்சறுக்குப் இறுதிப் போட்டியிலும் அவர் சிறப்பான திறனை வெளிப்படுத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

கோலாலம்பூர், ஆக.4- கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியின் ஏற்பட்டாளர்கள் இதுவரை 300-க்கும் மேற்பட்ட உபசரிப்பு நிறுவனங்களிடமிருந்து சுமார் 10 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி தொகையைப் பெற்றுள்ளனர் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் கைரி ஜாமாலுடின் தெரிவித்தார்.
சீ விளையாட்டுப் போட்டிற்குத் தேவையான சுமார் 8 கோடி ரிங்கிட்டை விட அதிகமாக பணம் வசூல் ஆகியிருப்பதற்கு மலேசியர்களின் ஒட்டுமொத்த முயற்சியும், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் ஆதரவும்தான் முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
நமது நாடு சீ விளையாட்டுப் போட்டியில் நிறைய பதக்கங்கள் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது என தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) நிறுவனத்தின் சீ விளையாட்டிற்கான நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனம் தங்கத்திற்கான நிதியாக 30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரிங்கிட் வரை கொடுத்து உதவியதாக அவர் சொன்னார்.
அது மட்டுமல்லாமல், இவ்வாண்டு சீ விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற தங்களாலான உதவியை செய்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நிதியுதவியைத் தவிர இப்போட்டி முழுமைக்கும் மின்சார விநியோகம் செய்து உதவப்போவதாக டிஎன்பி நிறுவன தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ரோஸ்லான் அப்துல் ரஹ்மான் கூறினார். 
மேலும், 2017-ஆம் ஆண்டின் சீ விளையாட்டுப் போட்டிக்கு  அஜினாமோட்டோ-கோ, ஃபூட்பால் தாய் பேக்டரி ஸ்போர்ட்டிங் கூட்ஸ்  கோ லிமிடெட், நாசா குழும நிறுவனம், பெட்ரோனாஸ், ரேபிட் கேஎல் மற்றும் டிஎம் ஆகிய நிறுவனங்கள் 'பிளாட்டின' அந்தஸ்து கொண்ட
உபசரிப்பு நிறுவனங்களாக திகழ்கின்றன. 
ஏர் ஆசியா, கிரேப், மலேசிய ஏர்ப்போர்ட் பெர்ஹாட், சோனி  ஆகிய நிறுவனங்கள் 'தங்க' அந்தஸ்து கொண்ட உபசரிப்பு நிறுவனங்களாக விளங்குகின்றன.

ஷா ஆலாம், ஆகஸ்ட்.1- விரைவில் ஆரம்பமாகவிருக்கும் சீ விளையாட்டில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்களிடையே வன்முறையைத் தடுக்க சிறப்புப் போலீஸ் படை கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் என்று கூட்டரசு உள்ளூர் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப் பிரிவின் இயக்குனர் டத்தோஶ்ரீ சூல்கிஃப்லி கூறினார். 

அதிலும் குறிப்பாக, கால்பந்தில் சிறந்து விளங்கும் நாடுகள் விளையாடும் போது போலீஸ் கூடுதல் கண்காணிப்புடன் செயல்படுமென ஷா ஆலாம் அரங்கத்தைப் பார்வையிட்ட போது அவர் தெரிவித்தார். 

டாமான்சாரா பெர்டானாவிலுள்ள எம்பையர் சிட்டியின் நிலவரத்தையும் போலீஸ் கண்காணிக்கும் என சூல்கிஃப்லி சுட்டிக் காட்டினார்.

விளையாட்டிற்கான இடங்கள் தயாரான வேளையில் சில கட்டுமானப் பணிகள் மட்டும் அமலில் உள்ளது. ஆக, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு  சீ விளையாட்டின் போது குத்தகைக்காரர்களைக் கட்டுமானப் பணியை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

சிலாங்கூரில் சுமார் 3 ஆயிரம் பேர் உள்ளடக்கிய படை எப்போதும் தயார் நிலையில் உள்ளது என டத்தோஶ்ரீ சூல்கிஃப்லி தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜூலை.20- உலக நீச்சல் போட்டியில் ‘டைவிங்’ நீச்சல் பிரிவில் மலேசியாவுக்கு முதன் முறையாக தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்து வரலாறு படைத்தார் 27 வயதுடைய பேரா வீராங்கனை சியோங் ஜூன் ஹூங். 

இந்தப் போட்டி ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் நடந்து வருகிறது. இவருடைய இந்தச் சிறப்புமிக்க வெற்றிக்காக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தமது பாராட்டுதலைத் தெரிவித்து கொண்டார்.

தம்முடைய டிவிட்டர் செய்தியில் சியோங் ஜூன் ஹூங்கிற்குப் பிரதமர் வாழ்த்துக் கூறினார். பெண்களுக்கான 10 மீட்டர் டைவிங் நீச்சல் போட்டியில் 397.50 புள்ளிகளைப் பெற்று இவர் முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார்.

2-ஆவது இடத்தை சீனாவின் முன்னாள் உலகச் சாம்பியன் சீ யாஜீ பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். மற்றொரு சீன வீராங்கனையான ரென் கியான் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் மற்றொரு மலேசிய வீராங்கனையான பண்டலேலா ரினோங்கும் இணைந்து மலேசியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுத் தந்தவர் சியோங் ஜூன் ஹூங் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே இவரது வெற்றி, மலேசியாவுக்கு பெருமையைத் தேடித் தந்த தருணமாகப் போற்றப்படுகிறது என்று தம்முடைய வாழ்த்துச் செய்தியில் துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் ஹமிடி கூறினார்.

 

கோலாலம்பூர், ஜூலை.19- ஆசிய கால்பந்து சம்மேளனமான ஏஎப்சியின் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், இன்று இந்தோனேசியாவுக்கு எதிராக களமிறங்கும் மலேசியக் குழு மிகக் கடுமையான போட்டியைச் சமாளிக்க வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

பேங்காக்கில் நடைபெறும் ‘எச்’ பிரிவுக்கான ஏ.எப்.சி சாம்பியன் தேர்வு ஆட்டத்திற்கான பயிற்சிகள் போதுமானதாக இல்லை என்ற குறைபாட்டுடன் மலேசியக்குழு போட்டியைச் சந்திக்க தயாராகி இருக்கிறது என்கிறார் பயிற்சியாளர் டத்தோ ஓங் கிம் சுவீ.

-தேசிய பயிற்சிக்கு வராமல் போனது

-தங்களின் மாநிலங்களுக்கு விளையாடுவதற்காக தேசிய பயிற்சிகளில் இருந்து விளையாட்டாளர்கள் அவ்வப்போது வெளியேறியது 

-பயிற்சியின் போது பாதியிலேயே மலேசிய லீக்கிலுள்ள தங்களின் கிளப்புகளுக்காக ஆட்டக்காரர்கள் விளையாடச் சென்றது

ஆகிய பல பிரச்சனைகளை தாம் எதிர்நோக்க நேர்ந்ததாக டத்தோ ஓங் கிம் சுவீ சொன்னார்.

ஆனால், அதே வேளையில் ‘எச்’ பிரிவின் தேர்வுச் சுற்றில் மலேசியாவுடன் இடம்பெற்றுள்ள இதர குழுக்களான மங்கோலியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகியவை முழு வீச்சில் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுதான் இந்தப் போட்டிக்கு வந்திருக்கின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மங்கோலியக் குழு கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தோனேசியக் குழு, கடந்த 10 நாள்களுக்கு முன்பே தாய்லாந்துக்கு வந்துசேர்ந்து இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளையில் பலம் பொருந்திய தாய்லாந்து, தனது லீக் ஆட்டங்கள் அனைத்தையும் மூன்று வாரங்களுக்கு முன்பே ஒத்திவைத்துவிட்டு, அனைத்து முன்னணி வீரர்களையும் ஒன்று திரட்டி, பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

எது எப்படியிருந்த போதிலும், மலேசியா எதிர்ப்பை முறியடிக்க தன்னால் இயன்ற மட்டும் போராடும் என்று தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக டத்தோ ஓங் கிம் சுவீ தெரிவித்தார்.

 

More Articles ...