கோலாலம்பூர், ஆக.21- கோலாலம்பூர் சீ விளையாட்டுப் போட்டியில்  மியன்மார், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஷ்குவாஷ் விளையாட்டாளர்களை ஏற்றி வந்த பேருந்து இன்று காலை விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் சில மியான்மார் விளையாட்டாளர் காயத்திற்கு உள்ளானதாக தெரிய வந்துள்ளது. எனினும், அவர்களுக்குப் பலத்த காயங்கள் எதும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

விளையாட்டாளர்கள் தங்கியிருந்த புத்ராஜெயா தங்கும் விடுதியிலிருந்து தேசிய ஷ்குவாஷ் மையத்தை நோக்கி செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இன்று நடைபெற இருந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு, பெண்களுக்கான இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆகிய ஆட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

 

 

 கோலாலம்பூர், ஆக.20- கோலாலம்பூர் 29ஆவது சீ விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கி விட்ட நிலையில் மலேசியர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுபட்டு நமது விளையாட்டாளர்களின் வெற்றிக்கு அடித்தளமாக விளங்குவோம் என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அறைகூவல் விடுத்தார், 

16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கோலாலம்பூரில் சீ விளையாட்டுப் போட்டி நடக்கிறது. ஒரே நோக்கத்தை இலக்காகக் கொண்டு மலேசியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க மீண்டுமொரு வாய்ப்பு கிட்டியுள்ளது என சீ விளையாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான கைரி குறிப்பிட்டார்.

மிகப் பிரமாண்டமான அளவில் கோலாகலமாக நடந்த தொடக்க விழாவில் பேரரசர் மற்றும் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தம்பதியர் , துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ  ஸாஹிட் ஹமிடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டாளர்களுக்கு ஆதரவளிக்கும் போது நாம் அவர் எந்த இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேறுபாடுகளை துறப்போம் பிளவுபடாத அன்பை நாட்டின் மீது வைப்போம் என்று கைரி குறிப்பிட்டார். மலேசியாவின் 30 மில்லியன் மக்களின் கரங்கள் ஒன்றிணையட்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார். 

 கோலாலம்பூர். ஆக.19- சீ விளையாட்டில் செப்பாக் தக்ரோவ் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு தொடர்ந்து இம்முறை நிறைவேறவில்லை. 

ஆகக் கடைசியாக, இன்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான தாய்லாந்திடம் 3-0 என்ற ஆட்டக் கணக்கில் தோல்வி கண்டதன் வழி மலேசியா வெண்கலப் பதக்கத்தை மட்டுமே பெற முடிந்தது.

ஏற்கனவே, நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்தோனிசியாவிடம் 2-1 என்ற ஆட்டக் கணக்கில் மலேசியா தோல்வி கண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தாய்லாந்து மலேசியாவை வென்றிருக்குமானால் அது தங்கப் பதக்கத்திற்காக இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும்.

ஆனால், துரதிஷ்டமாக வெண்கலப் பதக்கத்தோடு மலேசியா வெளியேற நேர்ந்தது. கடந்த 1991ஆம் ஆண்டில் மணிலாவில் நடந்த சீ கேம்ஸ் போட்டியில் ஆகக் கடைசியாக மலேசியா தங்கம் வென்றது.

அதன் பின்னர், இன்றுவரை மலேசியா தனது செல்வாக்குமிக்க செப்பாக் தக்ரோவ் ஆட்டத்தில் தங்க முத்திரை பதிக்கும் கனவு நிறை வேறவில்லை. 

கோலாலம்பூர், ஆக.18- நாளை மிக விமரிசையாக புக்கிட் ஜாலில் அரங்கில், 29ஆவது சீ விளையாட்டு போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவைக் காண விரும்பும் பொதுமக்களை விழாவுக்கு கடைசி நேரத்தில் புறப்படாமல் முன்கூட்டியே புறப்பட்டு வருமாறு கேட்டுக் கொண்டார் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின்.

சீ விளையாட்டிற்காக விற்பனைக்கு வைத்த 85 ஆயிரம் நுழைவு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. அரங்கினுள் நுழையும் முன்னர் மக்களிடம் பொதுவான பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும். 

சீக்கிரமே வருபவர்கள் சோதனைகளை முடித்து அரங்கினுள் நுழையலாம். மாலை 6 மணிக்குதான் தொடக்க விழா என்றாலும் 4 மணிக்கெல்லாம் அரங்கம் திறக்கப்பட்டு விடும் என்று அவர் கூறினார்.

ஆக, விரைந்து வருபவர்களுக்கு அரங்கினுள் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டும்.

இதனிடையே, சீ விளையாட்டைக் காண வருபவர்கள் முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கைரி கேட்டுக் கொண்டார். இதனால் வாகன நெரிசலைக் தவிர்க்க முடியும். 

மேலும், சீ விளையாட்டிற்காக புக்கிட் ஜாலீலைச் சுற்றியுள்ள சில சாலைகள் மூடப்படவுள்ளதால் சொந்த வாகனங்களில் வருவது மக்களுக்குதான் அலைச்சல் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதே வேளையில், தரைமார்க்கப் பொது போக்குவரத்து ஆணையம் (SPAD) மக்களின் வசதிக்காக சுமார் 7 எல்.ஆர்.டி மற்றும் பேருந்து நிலையங்களின் சேவை நேரத்தை நீட்டித்துள்ளது. மேலும், சீ விளையாட்டுகள் நடைபெறும் இடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்திற்கு 50 விழுக்காடு கட்டணக் கழிவும் வழங்குகிறது.

எனினும், சொந்தப் போக்குவரத்தை உபயோகித்தி வருபவர்களுக்கும் 3 ஆயிரத்து 500 வாகன நிறுத்தும் இடங்கள் சிலாங்கூர் டர்ஃப் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நாளை மாலை 3 மணிக்கு திறக்கப்படும். அங்கிருந்து விளையாட்டு அரங்கிற்குச் செல்ல பேருந்து வசதியும் உண்டு என்று கைரி உறுதிப்படுத்தினார்.

 

 

கோலாலம்பூர், ஆக.18- மலேசியாவின் சீ விளையாட்டு தங்க வேட்டைத் துரிதமடைந்திருக்கிறது. இன்று காலையில் நீச்சல் போட்டியிலும் அம்பு எய்தும் போட்டியிலும் மலேசியா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது.

ஏற்கனவே, நான்கு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில் மலேசியா, இன்று நண்பகல் வரை 7 தங்கப் பதக்கங்களாக எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.

திறங்தவெளி நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 10 கிலோமீட்டர் போட்டியில் மலேசிய வீரர் கெவின் யாப் மலேசியாவின் 5ஆவது தங்கத்தை வென்றார். அதேவேளையில், பெண்கள் பிரிவில் மலேசிய வீராங்கனை ஹெய்டி கான் 6ஆவது தங்கத்தை வென்றார்.

இதனிடையே, அம்பு எய்தும் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியா 7ஆவது தங்கப் பதக்கத்தைப் கைப்பற்றி வெற்றி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மலேசியாவின் முன்னனி வீரர் வீராங்கனையான முகம்மட் ஜுவாய்டி மர்ஸுக்கி மற்றும் நூர்பாத்கா மாட் சாலே ஜோடி 152 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கத்தை பெற்றது.

இறுதி சுற்றில் மலேசிய ஜோடியை எதிர்த்துப் போட்டியிட்ட மியன்மார் ஜோடி 142 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

 அதேவேளையில் ஞாயிறன்று நடக்கவிருக்கும் 5 வகையான அம்பு எய்தும் போட்டிகளில் மலேசியா கூடுதல் தங்கங்களைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஈப்போ, ஆக.17- சீ விளையாட்டிலிருந்து கட்டொழுங்குப் பிரச்சனையைக் காரணம் காட்டி, நீக்கப்பட்ட ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.கோமளத்தை மன்னித்து, மலேசியாவிற்காக ஓட்டக் குழுவில் சேர்த்துக் கொள்ளுமாறு அவரது தந்தை எம்.செல்வரத்தினம் வேண்டுகோள் விடுத்தார்.

"கோமளம், 6ஆம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே ஓட்டப்போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அண்மையில் நடந்த தென் ஆப்பிரிக்க ஓட்டப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் தனது சொந்த சாதனையான 11.72 வினாடிகளை அவரே முறியடித்தார்" என 61 வயதாகிய அந்தத் தந்தை சொன்னார்.

சீ போட்டியில் கலந்து கொள்வது கோமளத்தின் கனவாகும். இதற்காக அவர் 2 வருடங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சீ விளையாட்டின் தொடர் ஓட்டக் குழுவிலிருந்து நீக்கப்பட்டாலும் கூட அவர் தொடர்ந்து பயிற்சி செய்துதான் வருகிறார் என்று செல்வரத்தினம் தெரிவித்தார்.

இதனிடையே, கோமளமும் தன்னுடைய தவற்றை உணர்ந்து சம்பந்தப்பட்ட தரப்பிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டதாக கூறினார். அவரின் தந்தையும் கோமளத்தின் சார்பில் தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் சொன்னார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து பொது ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு தேசிய சாதனை படைத்த மலேசிய தொடர் ஓட்டக் குழுவில் கோமளமும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோலாலம்பூர், ஆக.17– அம்பு எய்தும் போட்டியில் மலேசியாவின் ஆண்கள், மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு அணிகளுமே தங்கம் வென்று அசத்தியுள்ளன. 29ஆவது சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை இப்போது மூன்றாக உயர்ந்துள்ளது. 

மலேசியாவின் பாத்தின் நூர்பத்கா, சரிதா சாம் நோங் மற்றும் நூருள் சயாஷிரா ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி, வியட்னாம் அணியை வீழ்த்தித் தங்கம் வென்றது.

இரு குழுக்களுமே 225-225 என்ற புள்ளிகளில் சமநிலையில் இருந்தால் கூடுதலாக வழங்கப்பட்ட மூன்று அம்புகளில் 28 புள்ளிகளை மலேசியா அணி பெற்றது. வியட்னாம் அணி 27 புள்ளிகள் பெற்றது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் மலேசிய மகளிர் அம்பு எய்தும் அணி தங்கத்தை வென்று உற்சாகத்தில் மூழ்கியது.

ஆண்களுக்கான அம்பு எய்தும் பிரிவில் மூவர் பங்கேற்கும் குழுப் போட்டியில் மலேசியாவின் முகம்மட் ஜூவாய்டி, லீ கின் லிம் மற்றும் ஹூல்பாட்லி குழு 228 புள்ளிகளை எடுத்துத் தங்கப்பதக்கத்தை வென்றது. வெள்ளிப் பதக்கத்தைச் சிங்கப்பூர் குழு பெற்றது. 

More Articles ...