சுபாங் ஜெயா ஜூன்.29– இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து முதன்முறையாக பிரீமியர் லீக்கில் களம் கண்ட மிஃபா அணிக்கு மென்மேலும் உத்வேகத்தை அளிக்கும் வண்ணம் இரண்டாம் பாதியில் 7 புதிய ஆட்டக்காரர்கள் புதிதாக இடம் பெறவுள்ளனர்.

அனைத்துலக மெகாடெக் கல்லூரியின் அரங்கத்தில் நடைபெற்ற இந்த புதிய ஆட்டக்காரர்கள் அறிமுக நிகழ்ச்சிக்கு மஇகாவின் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமை தாங்கி சிறப்பித்தார். 

மூன்று அனைத்துலக ஆட்டக்காரர்களும், நான்கு உள்ளூர் ஆட்டக்காரர்களும் மிஃபாவிற்காக களம் இறங்குகிறார்கள். ஜேப்பில் சின் என்ற கொரிய ஆட்டக்காரர், லூயிஸ் எடுவர்டோ புர்சினோ என்ற பிரேசில் ஆட்டக்காரர், கபாப் சீன் செர்மன் என்ற லைபீரியா ஆட்டக்காரர், மற்றும் பக்ருல், ஷாருல், டார்சென், இசாட் ஆகிய 4 உள்ளூர் ஆட்டக்காரர்கள் இதில் அடங்குவர். 

மிஃபா அணியைக் கண்காணிக்கவும், தொழில்நுட்ப இயக்குநராகவும், பயிற்றுநர் தேவன் நியமிக்கப்பட்டார்.. இந்த நியமனங்கள் குறித்து டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்  குறிப்பிடுகையில் 'நமது சமுதாய அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வண்ணம் இந்த விளையாட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மற்ற மற்ற அணிகளில் சிறந்து விளங்கிய நிலையில் இன்று மிஃபாவிற்காக களம் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இவர்களின் வருகையும், பயிற்றுநர் தேவனின் வருகையும் மிஃபா அணிக்கு புதிய பலத்தை அளிக்கும். மேலும் நாம் பிரிமியர் லீக்கில் நிலைத்திருக்கும் நிலைப்பாட்டையும் இவர்கள் உறுதி செய்வர் என்று அவர் கூறினார். 

மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில் நமது சமுதாய அணியை வலுப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நமக்கான களம் இருந்தால் மட்டுமே அதன் வழி அதிகமான இளம் விளையாட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியுமென சுட்டிக்காட்டினார்.

நீண்ட இடைவெளிகளுக்கு பின் நாளை (30/06/2017) வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் ஷா அலாம் யு.ஐ.டி.எம் திடலில் நடைபெறும் ஆட்டத்தில் மிஃபா அணி கோலாலம்பூர் அணியை சந்தித்து விளையாடுகிறது. இந்த ஆட்டத்தைக் காணவும், ஆதரவளிக்கவும் சமுதாயத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர், ஜூன்.23- உலக ஹாக்கி லீக் போட்டியில், பலம் பொருந்திய இந்தியாவை வீழ்த்தி மலேசியக் குழு அரையிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்று புதிய சாதனைப் படைத்தது.

உலகத் தர வரிசையில் 6ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவை மலேசியா 3-2 என்ற கோல்கணக்கில் வென்றது.

லண்டனில் நடந்துவரும் இந்தப் போட்டியில் நாளை சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியாட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினாவுடன்  மலேசியா மோதவிருக்கிறது.

ஆட்டத்தின் 19-ஆவது மற்றும் 20ஆவது நிமிடங்களில் இரு பெனால்டி கார்னர்கள் மூலம் மலேசிய வீரர்களான முகமட் ரஸி அப்துல் ரஹ்மான் மற்றும் துங்கு அகமட் தாஜுடின் ஆகிய இருவரும் கோல் அடித்து மலேசியாவை 2-0 என்ற நிலையில் முன்னிலைக்குக் கொண்டு வந்தனர்.

எனினும், 24ஆவது மற்றும் 26ஆவது நிமிடங்களில் இந்திய அணி ராமன்தீப் சிங் வழி இருகோல்களைப் போட்டு ஆட்டத்தை சமன் படுத்தியது.

ஆனால், 48ஆவது நிமிடத்தில் மலேசிய வீரர் முகம்ட் ரஸி மலேசியாவின் வெற்றிக் கோலைப் போட்டார். இதன்வழி உலக லீக் ஹாக்கிப் போட்டியில் மலேசியா முதன் முறையாக அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சென்னை, ஜூன்19- விஸ்வரூபம்-2 வெளியாகி 4 வருடங்களை கடந்த நிலையில், பாகம் 2 வெளியாவதில் தயாரிப்பு நிறுவனத்துக்கும், கமலுக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பை துவங்கினார் கமல்ஹாசன். 

விஸ்வருபம் முதல் பாகம், 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி வெளியானது. அதன்பிறகு இரண்டாம் பாகம் வெளியாவதில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், கமல்ஹாசனுக்கும் இடையே நிலவிவந்த பிரச்சனைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. 

இதனை தொடர்ந்து, பல வருடங்கள் கிடப்பில் கிடந்த விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் பட வேலைகளில், மீண்டும் மும்முரமாக நடிகர் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். 

இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளை, விஸ்வரூபம் முதல் பாகம் எடுக்கும் போதே கமல்ஹாசன் படமாக்கிவிட்டார். தற்போது 4 வருடங்களுக்கு பிறகு துருக்கி நாட்டில் “விஸ்வரூபம்-2” படப்பிடிப்பை துவங்கிஇருக்கிறார். 

இந்நிலையில் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் இறுதி பாடல் ஒலிப் பதிவையும் கமல்ஹாசன் முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தி மொழிக்கான பாடல் வரிகளை பிரசூன் ஜோசியும், தமிழ் மொழிக்கான பாடலை கமல்ஹாசனும் எழுதியுள்ளனர். இன்னும் சில நாட்களில் தெலுங்கு மொழிக்கான பாடலும் பதிவும் நடைபெறும் என கூறப்படுகிறது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், வரும் அக்டோபர் 18-ஆம் தேதி விஸ்வரூபம்-2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 கோலாலம்பூர், ஜூன்.13- மலேசிய கால்பந்து ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த முன்னாள் தேசிய கால்பந்து பயிற்சியாளர் கார்ல் வெய்காங் இன்று காலை தமது 81 ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார்.

தேசிய கால்பந்து குழுவின் பயிற்சியாளராக வெய்காங் செயல்பட்ட காலம் மலேசியா புதிய வரலாறு படைத்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

1980ஆம் ஆண்டு நடந்த மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு ஆட்டங்களில் மலேசியா வாகைசூடி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றதை மலேசியர்கள் இன்னமும் மறக்கவில்லை.

இந்த ஒலிம்பிக் சாதனைக் குழுவுக்கு பயிற்சியாளராக இருந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த வெய்காங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலையில் ஜெர்மனியில் அவர் காலமானார் என்ற தகவலை பேரா கால்பந்து சங்கத்தின் துணைத்தலைவர் டத்தோ ஷாருல் ஷமான் உறுதிப்படுத்தினார்.

மேலும், ஜொகூர் குழுவுக்கும் பேரா குழுக்கும் பயிற்சியாளராக பொறுப்பு வகித்துள்ள வெய்காங் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் சில நாடுகளின் தேசியக் குழுவுக்கு பயிற்சியாளாராக இருந்துள்ளார். 

மலேசிய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக, 80ஆம் ஆண்டுகளில் மலேசிய கால்பந்துத் திறன் உச்சம் பெற்றிருந்த அந்தக் காலக் கட்டத்தைச் சேர்ந்த ரசிகர்களிடையே வெய்காங்கின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

 

கோலாலம்பூர், ஜூன்.11- மொனோக்கோ, மோன்டோ கார்லோ அனைத்துலக நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று மலேசிய நீச்சல் வீரர் வில்சன் சிம் சாதனைப் படைத்தார். 400 மீட்டர் ஃபிரி ஸ்டைல் நீச்சல் போட்டியில் போட்டியில் தங்கம் வென்றதோடு மலேசிய தேசிய சாதனையையும் அவர் முறியடித்தார்.

இந்தப் போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாக் ஹோர்ட்டனை வென்று மலேசியாவுக்கு தங்கத்தை வென்றெடுத்த மலேசிய வீரர் வில்சன் சிம்மிற்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தப் போட்டியில் ஒலிம்பிக் வீரர் மாக் வெள்ளிப் பதக்கத்தையும் சீனாவைச் சேர்ந்த வீரர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

மோனோக்கோ போட்டியில் தங்கம் வென்று, புதிய தேசிய சாதனையை உருவாக்கி இருப்பதோடு ஒலிம்பிக் தங்க வீரரையும் வென்று இருப்பது ஓர் இனிமையான வெற்றி என்று தம்முடைய டிவிட்டர் செய்தியில் பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.

 

கோலாலம்பூர், ஜூன்.3- முன்னாள் பயிற்றுனர் பிராங்க் பெர்ன்ஹார்டிற்கு சம்பள பாக்கியை மலேசிய கால்பந்து சம்மேளனம் இன்னமும் செலுத்தாதது வெட்கப்பட வேண்டிய விசயம் என்று டத்தோ பீட்டர் வேலப்பன் கூறினார். 

முன்னாள் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (ஏ.எப்.சி) பொது செயலாளரான டத்தோ பீட்டர், 29 வருடங்களாக அங்கு பணிபுரிந்த போது எந்தவொரு தேசிய அணியும் தனது பயிற்றுனரின் சம்பளத்தை முழுவதுமாக செலுத்தவில்லை என்று புகார்கள் வந்ததில்லை என்றார். மலேசிய அணி தற்போது இப்படி செய்ததை எண்ணுகையில் வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டு முதல் B-22 (22 வயதுக்குட்பட்ட விளையாட்டாளர்கள்) தேசிய அணியின் பயிற்றுனராக பிராங்க் இருந்தார். கடந்த மார்ச் மாதத்தில் எப்.ஏ.எம் தலைவராக ஜொகூர் இளவரசர் பணியேற்றவுடன் இவரை பணி நீக்கம் செய்தார். 

ஆனால், ஒப்பந்தப்படி பிராங்கின் பணி காலத்தில் இன்னும் 10 மாதம் மீதம் இருந்ததால், அதற்குண்டான சம்பளத்தை தனக்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என்றார் பிராங்க்.

பிராங்குடன் செய்த பணி ஒப்பந்தத்தில் இப்படி ஒரு நிபந்தனை இருந்ததால் தற்போது இவர் எப்.ஏ.எம்மிடம் தமக்கு சேர வேண்டிய சம்பளத்தை கோரி வருகிறார். இல்லையேல் உலக கால்பந்து கூட்டமைப்பிடம் (பீபா) புகார் செய்வேன் என்று பிராங்க் எச்சரித்தார். 

தற்போது விசாரணையில் இருக்கும் இந்த புகார், உண்மையென நிரூபிக்கப்பட்டால் இந்த விவகாரம் பீபா கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். அப்படி செய்யப்பட்டால், ஏ.எப்.சிக்கும் மலேசிய கால்பந்து துறைக்கும் இது பெரிய இழுக்காகும் என்றார் டத்தோ பீட்டர் வேலப்பன்.

கோலாலம்பூர், மே.30- மலேசிய தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுனராக நியமிக்கப்பட்டுள்ள போர்ச்சுகலைச் சேர்ந்த நேலோ விங்காடா  நேற்று இரவு தேசிய அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்கி தனது பணியை தொடங்கினார்.

நேற்று நடந்த பயிற்சியின் போது எப்.ஏ.எம் தலைவரான ஜொகூர் இளவரசரும், தேசிய அணியின் துணைப் பயிற்றுனர் டான் செங் ஹோவும் உடன் இருந்தனர்.

2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஏ.எப்.சி ஆசிய கிண்ண போட்டியை நோக்கி தேசிய அணியை பயிற்றுவிப்பதே நேலோ விங்காடாவின் முதல் கட்ட பணி. 

அதன் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் இவ்வேளையில் ஜூன் 13ஆம் தேதியன்று லெபனான் அணியை எதிர்த்து ஜொகூரில் நடக்கவிருக்கும் போட்டியில் நேலோ விங்காடா தனது பயிற்றுனர் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் நேலோ விங்காடா போர்ச்சுகல், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேசிய அணி பயிற்றுனராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles ...