கோலாலம்பூர், பிப்.6- பயிற்சியின் போது காயமடைந்து விட்டதால் மார்ச் மாதம் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் பிரசித்திபெற்ற அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் மூத்த வீரர் லீ சோங் வெய் பங்கேற்கமாட்டார்.

கடந்த சனிக்கிழமை புக்கிட் கியாரா பேட்மிண்டன் அகாடமி அரங்கத்தில் நடந்த பயிற்சியின் போது முழங்காலில் அவர் காயமடைந்தார். இது மிகவும் புதிய அரங்கம் என்பதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக அவருடைய பயிற்சியாளர் ஹெண்ட்ராவான் தெரிவித்துள்ளார்.

மூன்று முறை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ள 34 வயதுடைய லீ சோங் வெய், உலகின் முதல்நிலை ஆட்டக்காரர் எனப்து குறிப்பிடத்தக்கது.

சீனப்பெருநாள் முடிந்த பின்னர் கடந்த செவ்வாய்க் கிழமையில் இருந்து மிக உற்சாகமாக அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். எனினும், அவருக்கு புத்தாண்டின் தொடக்கமே ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இந்தக் காயத்திலிருந்து அவர் மீண்டு வர கிட்டத்தட்ட மூன்று முதல் ஆறு வாரங்கள் தேவைப்படும் என்று தெரிகிறது எனப் பயிற்சியாளலர் ஹெண்ட்ராவான் சொன்னார். 

 

 

 ஜொகூர்பாரு, பிப்.6- மலேசிய கால்பந்து சங்கத்தின் (எப்.எம்.ஏ.) தலைவர் பதவிக்குப் போட்டியிட தம்முடைய புதல்வர் இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு ஜொகூர் சுல்தான் ஆசி வழங்கினார்.

மலேசிய கால்பந்து சங்கத்தில் அங்கம் பெற்றுள்ள கால்பந்து அமைப்புக்களின் சார்பில் 14 பிரதிநிதிகளுக்கு இன்று இஸ்தானா பாசீர் பிலாங்கியில் ஜொகூர் சுல்தான் பேட்டி அளித்தார்.

இந்தக் குழுவுக்கு மலாக்கா மாநில கால்பந்து சங்கத்தின் துணைத்தலைவர் டத்தோ முகமட் யூசோப் மஹாடி தலைமை ஏற்றியிருந்தார். ஜொகூர் சுல்தானுடனான சந்திப்பு மிக வெற்றிகரமாக அமைந்தது என்று டத்தோ யூசோப் தெரிவித்தார்.

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட ஜொகூர் துங்கு மகோத்தா துங்கு இஸ்மாயிலுக்கு  நாங்கள் அளிக்கும் ஆதரவு உண்மைப்பூர்வமானதா? என்பதைத் தெரிந்து கொள்ள ஜொகூர் சுல்தான் விருப்பம் காட்டினார். அவருக்கு முழு ஆதரவையும் நாங்கள் வழங்குவது என்ற உறுதிப்பாட்டை தெரிவித்தோம் என யூசோப் கூறினார்.

இதனை அடுத்து சுல்தானின் ஆசியுடன் கால்பந்து சங்கத் தலைவர் பதவிக்கு துங்கு இஸ்மாயில் போட்டியிட உள்ளார். 

ஜொகூர் சுல்தானின் அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாகவும் அது தவிர இப்பதவிக்கு போட்டியிடாமல் இருப்பதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றும் ஏற்கெனவே துங்கு இஸ்மாயில் தெளிவுபடுத்தி உள்ளார் என்றும் யூசோப் கூறினார்.

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதிதான் இறுதி நாளாகும். மார்ச் 25-ஆம் தேதி சம்பந்தப்பட்ட அங்கத்துவ அமைப்புகள் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்கவுள்ளன.

 

 நீலாய் பிப் 2- பிரிமியர் கால்பந்து லீக்கில் விளையாடிவரும் மிஃபா கடந்த 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய நிலையில், நாளை மறுதினம் பலம் வாய்ந்த திரெங்கானு அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் மிஃபா அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற  எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த ஆட்டம் பிப்ரவரி 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் திரெங்கானு சுல்தான் இஸ்மாயில் அரங்கத்தில்  நடைபெறவிருக்கிறது.

மிஃபா அணி பிரிமியர் லீக்கில் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. திரெங்கானு அணி பலம்வாய்ந்த அணி என்பதால் இந்த ஆட்டம் மிஃபா அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே அமையும் என்று மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் குறிப்பிட்டார். முதல் இரண்டு ஆட்டங்களும் தோல்வியைக் கொடுத்திருத்தாலும் அதன்வழி பல அனுபவங்களை மிஃபா அணி பெற்றிருக்கிறது என்றார் அவர்

 

 கோலாலம்பூர், பிப்.1- 2017ஆம் ஆண்டுக்கான 2-ஆவது மதுரை அனைத்துலக தேக்குவாண்டோ சாம்பியன் போட்டியில் மலேசியாவின் ஜாகோ அகாடமி குழு மீண்டும் ஒட்டுமொத்த சாம்பியனாக வாகைசூடியது. மொத்தம் 16 தங்கங்கள், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை இக்குழு வென்றது.

## கான்வெண்ட் செந்துல்-2 தேசியப் பள்ளியைச் சேர்ந்த விஸ்ஷா செல்வமுத்து,

## காஜாங் கான்வெண்ட் தேசிய பள்ளியைச் சேர்ந்த ரீயா எமீரா ஷாமீர்,

## டானாரத்தா அனைத்துலகப் பள்ளியை சேர்ந்த இஷான் ஜெய் ரூபேந்திரன், நெமிஷா ஜெய் ரூபேந்திரன்,

## காஜாங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த பிரவீணா முருகன்,

## கோலாலம்பூர் அப்பர் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஶ்ரீவித்யா நாதன்

## செந்துல் கான்வெண்ட் தேசிய இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த தாஷா செல்வமுத்து,

## காம்பளக்ஸ் கே.எல்.ஐ.ஏ. தேசியப் பள்ளியைச் சேர்ந்த மார்ஷயா நூர் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

## காஜாங் சுல்தான் அப்துல் அஸீஸ் ஷா இடைநிலைப் பள்ளியின் அலீயா அட்ரியானா,

## கோலாலம்பூர் மெத்தடிஸ் இடைநிலைப்பள்ளியின் தஷ்வின் நாதன்,

## ஜாலான் புக்கிட் பிந்தாங் இடைநிலைப்பள்ளியின் அலீஃப் பட்ரிஸ்

## துன் ஹுசேன் ஓன் இடைநிலைப் பள்ளியின் தினேஷ்குமார் முருகன்,

## காம்ப்ளக்ஸ் கே.எல்.ஐ.ஏ. தேசியப்பள்ளியின் கைஷுரான் முகமட் அனிக்,

## டெய்லர் காலேஜைச் சேர்ந்த விக்னேஸ்வரன் நாதன், ஆகியோரும் தத்தம் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

மேலும் மார்ஷயா நூர் மற்றும் தாஷா செல்வமுத்து ஆகிய இருவரும் சிறந்த தேக்குவாண்டோ வீரர்களுக்கான விருதுகளையும் வென்றனர். ஜாகோ அகாடமி குழுவுக்கு முன்னாள் ஆசிய தேக்குவாண்டோ வெள்ளிப் பதக்க வீரரான ஆர்.செல்வமுத்து தலைமையேற்றிருந்தார்.  

 

கிளானா ஜெயா, ஜன.27- மலேசிய பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் பலம் பொருந்திய, அனுபவம் மிக்க ஆயுதப் படைக் குழுவான ஏடிஎம் குழுவிடம் மீஃபா குழு 3-2 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டது. பிரிமியர் லீக்கில் மிஃபா அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.

கிளானா ஜெயா எம்பிபிஜே அரங்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் போது மழை கடுமையான இடையூறாக விளங்கிய போதிலும் மிஃபா போராடும் உறுதியுடன் களத்தில் இறங்கியது.

ஆனால், அதிர்ச்சி தரும் வகையில் ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்திலேயே ஏடிஎம் குழு ஒரு கோலை அடித்து முன்னிலைக்குச் சென்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் வகையில் மிஃபா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. 

பிற்பகுதி ஆட்டத்தின் போது மிஃபாவின் வெளிநாட்டு ஒப்பந்த ஆட்டக்காரரான மைக்கேல் இஜேஷி சக்குவுபன்னா ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமாக்கினார். இருப்பினு இந்த மிகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. 60ஆவது நிமிடத்தில் ஏடிஎம் குழுவுக்கு கிடைத்த பெனால்டியை கோலாக்கி மீண்டும் 2-1 என்ற  கோல்கணக்கில் அது முன்னணிக்கு வந்தது.

78ஆவது நிமிடத்தில் ஏடிஎம் மேலும் ஒரு கோலைப் போட்டது. கடைசி நேரத்தில் மிஃபா வீரர் அலென் இமானுவெல் ஒருகோலை அடித்தார். இருந்த போதிலும் ஆட்டம் 3-2 என்ற கோல்கணக்கில் ஏடிஎம் அணிக்குச் சாதகமாக முடிந்தது.

இந்த ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன், பிரிமியர் போட்டிக்கு நாம் புதுமுகம். ஆனால், ஏடிஎம் குழு நீண்டகால இதில் விளையாடி வரும் அனுபவம் வாய்ந்த குழு என்று சுட்டிக்காட்டினார்.

இந்த ஆட்டம் மட்டுமின்றி, அடுத்து வரும் ஆட்டங்களிலும் மிஃபா கடுமையான சூழலையே எதிர்நோக்கியுள்ளது. அடுத்து திரெங்கானு மற்றும் ஜேடிடி ஆகிய பலம் வாய்ந்த குழுக்களுடன் மிஃபா மோதவேண்டியுள்ளது. எனவே நமது அணியின் நிலைமை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்று டத்தோ மோகன் கூறினார்.

வெற்றி, தோல்விகளையும் கடந்து கால்பந்தின் தரம் உயர்வதற்கு மிஃபா அணியின் போராட்டம் உதவியாக அமைகிறது. இந்தப் பயணத்தில் பல சவால்களும் நெருக்குதல்களும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று அவர் சொன்னார்.

 

 

நீலாய், ஜன.25- மலேசிய பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டிக்கு தேர்வு பெற்று புதிய வரலாறு படைத்த மலேசிய இந்தியர் கால்பந்துக் குழுவான மிஃபா, தொடக்க ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தாலும் நாளை நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் அதிலிருந்து மீண்டெழத் துடித்துக் கொண்டிருக்கிறது.

மிஃபா அணி நாளை 26ஆம் தேதி வியாழக்கிழமை ஆயுதப்படை குழுவான ஏ.டி.எம். அணியை எதிர்கொள்கிறது. களம் கண்ட முதல் ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், இந்தப் பிரிமியர் லீக் போட்டியில் அடுத்தடுத்து வரும் சவால்களை மிஃபா அணி சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில், நாளை மாலை 4.45 மணியளவில் கிளானா ஜெயா எம்.பி.பி.ஜே திடலில் ஏடிஎம் அணிக்கு எதிராக மிஃபா விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் மிஃபா அணி பிரிமியர் லீக்கின் முதல் வெற்றியை பதிவு செய்யப் போராடவிருக்கிறது.

மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன், குறிப்பிடுகையில்,   கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். அந்த வகையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள நமது அணி, பலமான அணிகளோடு மோதும் போது வெற்றி, தோல்விகள் குறித்து நாம் எதுவும் கூற இயலாது என்றார்.

பிரிமியர் லீக்கில் நமக்கான அணி இருப்பதானது, இந்திய  இளைஞர்களுக்கான கால்பந்து வாய்ப்புக்களை நாம் அதிகப்படுத்த வழி வகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாளை நடைபெறும் ஆட்டத்தைக் காண கிளானாஜெயா எம்.பி.பி.ஜே திடலுக்கு நமது ரசிகர்கள் திரளாக வந்து, ஆட்டக்காரர்களுக்கு ஊக்கமளித்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். நமது வீரர்களும் உற்சாகத்தோடு விளையாடுவார்கள் என மிஃபா அணியின் நிர்வாகி சேம் தெரிவித்தார்.

 

 

 

ஜெங்கா, ஜன.22– மலேசியா பிரிமியர் லீக்கில் களம் இறங்கிய மிஃபா அணி முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பி.டி.ஆர்.எம். அணியை எதிர்கொ ண்ட நிலையில் 3-1 என்ற கோல்கணக்கில் தோல்வியை தழுவியது. அந்த அணியின் சார்பில் டோவ் பக்காரி 2 கோல்களையும், ஷகுரின் அபு சமா 1 கோலையும் புகுத்தினார். மிஃபா அணியின் சார்பில் யோகேஷ் 52ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.

இந்த ஆட்டம் குறித்தும் பிரிமியர் லீக்கின் சவால்கள் குறித்தும் மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன், குறிப்பிடுகையில் நமது இலக்கு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டுமென்பது அல்ல, முதல் 5 அல்லது 6 இடங்களுக்குள் நமது அணி இருந்தாலே அது நமக்கான மிகப்பெரிய வெற்றி என்பதாகும். 

ஏனெனில், நமது அணி பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ளது. நம்மால் அதிக சம்பளம் கொடுத்து வெளிநாட்டு வீரர்களை இறக்கும தியும் செய்ய இயலாது. மிஃபா அணியின் வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்தைவிட மற்ற அணி வீரர்களின் சம்பளம் அதிகம்.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரையில் முதல் பயணம் என்ற நிலையை தாண்டி பிரிமியர் லீக்கின் சவால்கள் நமக்கு  கடுமையானதாக இருக்கும். இதனை எதிர்கொள்ளும் கடப்பாடும் நமக்கு இருக்கிறது. அதோடு பி.டி.ஆர்.எம் கடந்த ஆண்டு சூப்பர் லீக்கில் விளையாடிய அணி என்ற சூழலில் அந்த அணியை எதிர்கொண்டது எளிதானதும் அல்ல. 

இருப்பினும், நமது விளையாட்டாளர்கள் இறுதி வரை கடுமையாக விளையாடினார்கள். மேலும் மிஃபா அணியை பொறுத்தமட்டில்  பெரும்பாலும் இளம் விளையாட்டாளர்களை களம் இறக்கி அவர்களின் திறனை மேம்படுத்தவே முயற்சிக்கிறோம். ஆகவே  மிஃபா அணி, அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு எஞ்சியிருக்கும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர். 

மேலும், பிரிமியர் லீக்கில் அணி இருக்கும் தருவாயில் நமது சமுதாய விளையாட்டாளர்களுக்கு களம் இருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதிகமான இளம் விளையாட்டாளர்களை உருவாக்கலாம். அதனை மையப்படுத்தியே மிஃபா பிரிமியர் லீக் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. 

அதனைத் தொடர்ந்து நமது சமுதாயப் பெருமக்கள் நமது அணிக்கான ஆதரவினை பலப்படுத்தவேண்டும். வருகின்ற 26-ஆம் தேதி வியாழக்கி ழமை மாலை 4.45 மணியளவில் நமது அணி ஏ.டி.எம் (ராணுவப் படை) அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது.

இந்த ஆட்டம் கிளானாஜெயா எம்.பி.பி.ஜே திடலில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை காணவும், நமது வீரர்களுக்கு ஊக்கமளிக்கவும் சமுதா யத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென டத்தோ டி.மோகன் கேட்டுக்கொண்டார்.

More Articles ...