கோலாலம்பூர், ஏப்ரல் 21- கால்பந்து ஊழல் விவகாரங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர் பட்டியலை எப்.ஏ.எம் தங்களிடம் ஒப்படைத்துவிட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிக்கை விடுத்துள்ளது. சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு எப்.ஏ.எம் தலைவரான ஜொகூர் இளவரசர் (டிஎம்ஜே) பணித்ததாக எம்.ஏ.சி.சி விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கால்பந்து வீரர்கள், போட்டி நடுவர்கள், எப்.ஏ.எம் அதிகாரிகள் என பலரும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மலேசிய கால்பந்து துறையில் நிகழும் ஊழலைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிஎம்ஜே எம்.ஏ.சி.சி ஆணையரை நேரில் சந்தித்து இந்தப் பட்டியலை ஒப்படைத்தார்.

நாட்டில் நிகழும் ஊழல் சம்பவங்களைத் தடுக்க எல்லோரும் சேர்ந்துச் செயல்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஊழலை ஒழித்து மலேசிய கால்பந்துத் துறையை டிஎம்ஜே முன்னேற்றுவார் என்ற நம்பிக்கைப் பலருக்கும் உண்டு. அவரின் இலக்கை அடைய எம்.ஏ.சி.சி கண்டிப்பாக உதவும் என்று அதன் ஆணையர் டத்தோ சுல்கிஃப்லி அகமாட் கூறினார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து கால்பந்து ஊழலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்படுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர், ஏப்ரல் 19- நம் நாட்டின் விளையாட்டுத் துறையில் நிகழும் ஊழல் விவகாரங்கள் கட்டுக்கடங்காமல் போய்விடவில்லை என்று ஊழல் தடுப்பு ஆணையத் துணை ஆணையர் டத்தோ அஸாம் பாக்கி கூறினார்.

கடந்த 5 வருடங்களாக விளையாட்டுத் துறை அதிகாரிகளோ விளையாட்டு வீரர்களோ சம்பந்தப்பட்ட ஊழல் புகார்கள் இன்னமும் விசாரணை நிலையில் தான் உள்ளன. யார் மீதும் இன்னும் குற்றம் சாட்டப்படாத நிலையில் அவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லிவிட முடியாது என்றார் அவர்.

விளையாட்டுப் போட்டிக்கான பொருட்களை வாங்குவது, அரங்கங்கள் துப்புரவு பணி என்று ஏதோவொரு சிலர் ஊழல் புரிவது உண்மைதான். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த விளையாட்டுத் துறைகள் மீதே மக்கள் குறைக் கூற கூடாது என்று அவர் கோரினார்.

இளைஞர், விளையாட்டுத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற ஊழல் தடுப்பு ஆணையத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியபோது இதனைக் கூறினார். நிகழ்ச்சியில் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரியும் கலந்து கொண்டார்.

கோலாலம்பூர், ஏப்ரல் 18- மலேசியாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான கால்பந்து போட்டி நடக்கவிருக்கும் அரங்கம் எது என்று இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று ஆசியா கால்பந்து சம்மேளனம் (ஏ.எப்.சி) தெரிவித்தது.

2019ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஆசிய கிண்ணப் கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஒன்றான இந்த போட்டி வட கொரியாவில் உள்ள அரங்கத்தில் நடைபெற இருந்தது. 

ஆனால், இரு நாடுகளுக்குமிடையே நிலவி வரும் அரச தந்திர உறவு விரிசலால் மலேசிய வீரர்கள் அங்கு விளையாடுவது பாதுகாப்பாக இருக்காது என்று மலேசிய அரசாங்கம் இந்த ஆட்டத்தில் கலந்துக் கொள்ள மலேசிய கால்பந்து குழுவுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி நடைபெற்றிருக்க வேண்டிய இந்தப் போட்டி, எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தப் போட்டி இருநாடுகளுக்கும் அப்பால் ஒரு மூன்றாவது நாட்டில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து ஏ.எப்.சி நிர்வாகக் குழு இந்த வாரம் நல்ல முடிவை அறிவிக்கும் என்று அதன் தலைவர் வின்சர் பால் செய்தியாளர்களிடம் கூறினார்.

கோலாலம்பூர், ஏப்ரல் 17- மலேசிய கால்பந்து சம்மேளனத்தின் (எப்.ஏ.எம்) தலைவராக ஜொகூர் இளவரசர் (டிஎம்ஜே) பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் அவர் மீது எழும் விமர்சனங்கள் பல. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அவர் எப்.ஏ.எம் முகநூல் பக்கத்தில் தமது கருத்தைப் பதிவேற்றம் செய்தார். 

“என்னையோ என் வழிமுறைகளையோ பிடிக்கவில்லை என்றால், புதிய தலைவரை நியமித்துக் கொள்ளுங்கள்” என்ற தம்முடைய கருத்தை முகநூலில் அவர் வளியுறுத்தியுள்ளார்.

எப்.ஏ.எம் தலைவரான அவரது வழிமுறைகள் தக்க முறையில் இல்லையென்றும் அவரின் சொந்தக் குழுவான ஜொகூர் டாருல் தக்சீம் (ஜேடிடி) மீதே அவர் அதீத பாசம் காட்டுவதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

மலேசியாவின் கால்பந்து தரத்தை உயர்த்தவே தான் இந்தப் பதவிக்கு வந்ததாகவும், அதற்கு உண்டான முடிவுகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். 

“எனது சொந்தக் குழு என்பதால் ஜேடிடிக்கு சாதகமாக நான் எதுவும் செய்வதில்லை. நான் எப்.ஏ.எம் தலைவராகும் முன்பே அந்த அணி பல வெற்றிகளை அடைந்தது. அப்போழுதும் நான் அவர்களின் விளையாட்டிலோ முடிவிலோ பங்கெடுத்ததில்லை, இனியும் எடுக்கமாட்டேன். அதேபோல் அந்த அணி போட்டிகளில் வெல்ல வேண்டும் என கருதி நான் மற்ற அணிகளை புறக்கணிக்க மாட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.

கால்பந்து நடுவர்கள் சிலர் தங்கள் விருப்ப அணிக்கு சாதகமாக செயல்புரிவதைத் தடுப்பது, மாநில அணிகளின் கடன்களை அடைப்பது, கால்பந்து வீரர்களின் சம்பளத்தை கடனில்லாமல் முழுவதுமாகச் செலுத்துவது, கால்பந்து ஊழலைத் தடுப்பது என்று தமக்கு பல இலட்சியங்கள் இருப்பதாகவும் அவற்றை எல்லாம் சரிகட்ட போவதாகவும் டிஎம்ஜே உறுதியளித்தார்.

மேலும் கால்பந்து விளையாட்டை வளர்க்கும் வகையிலான செய்திகளை மக்களுக்கு சேர்க்க வேண்டும் என்று டிஎம்ஜே ஊடகத் துறையைக் கேட்டுக் கொண்டார். அவரைப் பற்றியோ அல்லது எப்.ஏ.எம் பற்றியோ அவதூறு பரப்ப வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

 கோலாலம்பூர், ஏப்ரல்.14- ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றவரும் மலேசிய ஜுனியர் கராத்தே குழுவின் பயிற்சியாளருமான ஆர்.புவனேஸ்வரன் (வயது 41) தாய்லாந்து கராத்தே குழுவுக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் புக்கிட் ஜாலிலில் மலேசிய ஜுனியர் கராத்தே குழுவுக்கு புவனேஸ்வரன் பயிற்சி அளித்து வந்தார். அடுத்த ஆகஸ்டில் கோலாலம்பூரில் நடக்கவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு தனது கராத்தே குழுவுக்கு அவரைப் பயிற்சியாளராக தாய்லாந்து நியமித்துள்ளது.

கடந்த ஜனவரியிலேயே தாய்லாந்து தம்மை அணுகியதாகவும் எனினும், கடந்த வாரம் தான் அந்தப் பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொண்டதாகவும் புவனேஸ்வரன் தெரிவித்தார். 

எனக்கு இதுவொரு புதிய சவால். ஒரு தேசிய குழுவுக்குப் பயிற்சி அளிக்கும் திறன் தமக்கு இருக்கிறது என்பதை நிருபிக்கத் தமக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக அவர் கூறினார். எனினும், தாய்லாந்துக்கு கராத்தேயில் மிகப்பெரிய வெற்றிகளைக் கொண்டு வந்து சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றார் அவர்.

 

 

 கோலாலம்பூர், ஏப்ரல்.14- கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக சைக்கிளோட்டப் போட்டிகளில் அயராது போராடி வந்துள்ள மலேசிய வீரர் அஸீல் ஹாஸ்னி அவாங், அந்த முற்சிக்கான பரிசாக உலகச் சாம்பியன் பட்டதை வென்று மலேசியாவுக்கு சாதனைப் புகழைத் தேடித் தந்துள்ளார்.

தம்முடைய வாழ்நாளில் அவர் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த வெற்றிச் ஜெர்சியான 'வானவில் நிற' சட்டையை இந்த உலகச் சாம்பியன் வெற்றியின் மூலம் பெற்று இருக்கிறார்.

ஹாங்காங்கில் நடந்த உலகச் சைக்கிளோட்ட சாம்பியன் போட்டியில் ஆண்களுக்கான கெரின் பிரிவில் சாம்பியன் பட்டத்தை அஸீசுல் ஹாஸ்னி  வென்றார். மலேசிய வரலாற்றில் சைக்கிளோட்டப் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டதை வெல்வது இதுவே முதன் முறையாகும்.

மலேசிய வீரர் அஸீசுக் ஹாஸ்னி முதலிடத்தையும், கொலம்பியாவின் ஹெர்னாண்டோ ஷாப்டா இரண்டாவது இடத்தையும் மற்றும் செக் குடியரசின் பாப்பெக் தோமஸ் மூன்றவது இடத்தையும் பிடித்தனர்.

கோப்புப் படம்

கோலாலம்பூர், ஏப்ரல் 12- கால்பந்து போட்டிகளின் முடிவை முன்னமே நிர்ணயித்த விவகாரம் தொடர்பில் தேசிய முன்னாள் ஆட்டக்காரரான ஆ சோங் என்றழைக்கப்படும் கைருலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தேடுகிறது. கால்பந்து போட்டியில் நடந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு உதவ அவரைத் தேடுவதாக ஆணையம் கூறியது.

மலேசிய பிரிமியர் லீக் போட்டியில், முடிவை முன்னமே நிர்ணயிக்கும் விதத்தில் மிஃபா விளையாட்டளர்கள் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்ட விவகாரம் பெரிய அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. 

இவ்விவகாரம் தொடர்பாக ஒரு வெளிநாட்டு விளையாட்டாளர் மற்றும் இரு உள்ளூர் விளையாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் போட்டியின் முடிவை நிர்ணயிக்க ரிம.10,000 முதல் ரிம.30,000 வரை லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

இவ்விவகாரத்தைத் தொடர்ந்து ஆராய்ந்து வரும் ஊழல் தடுப்பு ஆணையம், விசாரணைக்கும் உதவும் முன்னாள் ஆட்டக்காரர் கைருலை வகையில் தேடுகின்றனர். கைருல் முன்னர் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் குழுவிற்கு விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உடனடியாக எம்ஏசிசி அலுவகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அப்படி அவர் வராவிட்டால், ஆணையம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

More Articles ...