கோலாலம்பூர், ஆக.31- இன்று புக்கிட் ஜாலில் அரங்கில் 2017 சீ விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாளை சுதந்திர தினம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு பொதுமக்கள் அரங்கத்தில் நிறைந்திருந்தனர்.

145 தங்கப் பதக்கங்கம், 92 வெள்ளி, 86 வெண்கலத்துடன் மலேசியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வரலாறு படைத்துள்ளது. இம்முறை நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா 111 தங்கப் பதக்கங்களை வெல்ல இலக்கு கொண்டிருந்தது. ஆனால் அதைவிட 34 தங்கம் அதிகமாகப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

இது மலேசியாவிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். அடுத்து, 30-ஆவது சீ விளையாட்டு போட்டியைப் பிலிப்பைன்ஸ் ஏற்று நடத்தவிருக்கிறது.

கோலாலம்பூர், ஆக.30- நேற்றிரவு ஷா ஆலாம் அரங்கத்தில் நடைபெற்ற மலேசியா மற்றும் தாய்லாந்து இடையிலான சீ விளையாட்டு கால்பந்து இறுதிப் போட்டியின் முடிவு மலேசியர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

ஆனால், ஜொகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் இந்த தோல்வியை மிகவும் யதார்த்தமாக எடுத்துக் கொண்டதோடு நீண்ட கால வெற்றியை இலக்காக கொள்ளுமாறு போட்டியாளர்களை ஊக்குவித்தார்.

    ### காணொளி: நன்றி Vetri Vel

சீ விளையாட்டில் கால்பந்து இறுதிப் போட்டியில் மலேசிய அணி தாய்லாந்து அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் மலேசிய போட்டியாளர்களிடம் உற்சாக வார்த்தைகளைக் கூறி மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவருமாகிய துங்கு இஸ்மாயில் ஊக்கமளித்தார்.

“இந்த தோல்வி எனக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், மலேசியக் கால்பந்து சங்கத்தின் தலைவராக மலேசிய அணியின் சிறப்பான முயற்சியை நான் பெருமையாக கருதுகிறேன். இந்தத் தோல்வியை எண்ணி நீங்கள் யாரும் வெட்கப்படவும் வருத்தம் அடையவும் வேண்டாம். போட்டியில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி” என்று துங்கு இஸ்மாயில் மலேசிய அணி விளையாட்டாளர்களுக்கு உற்சாகமளித்துள்ளார்.

மேலும், சீ விளையாட்டுப் போட்டி முழுவதும் மலேசிய அணி 100 விழுக்காடு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார் அவர். 

இந்தத் தோல்வி மலேசியக் கால்பந்து அணிக்கு முடிவல்ல. நம் பயணம் எதிர்காலத்தை நோக்கி இன்னும் தொடரும். இளம் விளையாட்டாளர்களாகிய நீங்கள் நாட்டிற்கு கிடைத்த பெரிய சொத்தாக்கும் என்று அவர் நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த உற்சாக வார்த்தைகள் ஹரிமாவ் மலேசியா அணிக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் அமைந்தது.

ஷா ஆலம், ஆக.29- சீ விளையாட்டில் கால்பந்து இறுதிப் போட்டியில் தாய்லாந்து அணி வெற்றி பெற்றது. இதில் மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இன்று ஷா ஆலம் அரங்கத்தில் நடந்த மலேசியா மற்றும் தாய்லாந்து இடையிலான இறுதிப் போட்டியில் முதல் பாதி ஆட்டத்தின் போது தாய்லாந்து வீரர் அடித்த பந்தை மலேசிய கோல் கீப்பர் ஹஜிக் நட்சிலி தட்டி விட முயன்றபோது அது வலைக்குள் புகுந்து சொந்த கோலாக ஆனது. 

ஆட்டம் தொடங்கும் முன்னிருந்த மழை பெய்து கொண்டிருந்தாலும் ஆட்டத்தின் நடுவில் மழை கடுமையான நிலையில் வீரர்கள் பந்தினை எடுக்கவும் சக போட்டியாளர்களுக்கு அனுப்பவும் சிரமப்பட்டனர். கோல் அடிக்க மலேசிய அணி நிறைய முறை முயன்றும் அது தோல்வியிலேயே முடிந்தது. 

இந்த போட்டியில் வழி தாய்லாந்து அணி தங்கத்தையும் மலேசிய அணி வெள்ளி பதக்கத்தையும் தட்டி சென்றன.

 

புத்ராஜெயா, ஆக.29- இன்று நீர் விளையாட்டு அரங்கத்தில் நடந்த சீ விளையாட்டு ‘வூமன் ஜம்ப்’ போட்டியில் தேசிய இளையோர் சறுக்கல் வீராங்கனையான ஆலியா யூங் ஹனிபா தங்கத்தை வென்றுள்ளார்.

தனக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தோனிசியாவைச் சேர்ந்த ரோசி அமீருடன் போட்டியிட்டு ஆலியா இறுதியாக வெற்றி வாகை சூடியுள்ளார். திங்கட்கிழமை நடைபெற்ற தொடக்க சுற்றுகளில் 14 வயதான ஆலியா 32.8 மீட்டர் குதித்து புதிய தேசிய சாதனைப் படைத்துள்ளார். 

முதல் சுற்றில் 30.7 மீட்டர் பதிவு செய்த ஆலியா இரண்டாம் சுற்றில் 32.6 மீட்டர் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இது ஆலியாவிற்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும். முன்னதாக நடந்த ‘வூமன்ஸ் ஸ்லாலோம்’ போட்டியில் ஆலியா வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கோலாலம்பூர், ஆக.29– கோலாலம்பூர் சீ விளையாட்டுப் போட்டியில் 111 தங்கப் பதக்கங்களை வெல்லும் தனது வெற்றி இலக்கை மலேசியா கடந்து இருப்பது நாட்டைப் பெருமிதம் கொள்ளச் செய்திருக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார். 

இந்த விளையாட்டுப் போட்டியினால் மலேசிய மக்களிடையே ஆக்கக்கரமான உணர்வுகள் எழுச்சி பெற்றுள்ளன. மலேசியக் குழுவினரின் வெற்றியையும் உறுதிப்பாட்டினையும் மலேசியர்கள் முழுமையாக பாராட்டுகின்றனர். தாம் சந்தித்த மக்கள் அனைவருமே மிகச் சிறந்த உணர்வுகளையே வெளிப்படுத்தியுள்ளனர் என்றார் அவர்.

மதம், இனம், நிறம், கலாசாரம் என்ற பாகுபாடுகளுக்கெல்லாம் அப்பால், நாட்டு மக்களின் மன உணர்வுகளை மாற்றியமைத்த பெருமை சீ கேம்ஸ் விளையாட்டாளர்களையே சாரும் என்றார் அவர். 

மலேசியாவின் 111ஆவது தங்கப் பதக்கத்தை முன்னணி சைக்கிள் வீரரும், 'கெரின்' சைக்கிளோட்டப் பிரிவில் உலகச் சாம்பியனுமான முகம்மட் அஸீசுல்ஹஸ்னி நேற்று வென்றார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நமது விளையாட்டாளர் தங்கியிருக்கும் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நஜீப் மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றிக்காக தேசிய விடுமுறையை அறிவிப்பீர்களா? என நிருபர்கள் கேட்ட போது “கொஞ்சம் பொறுங்கள். சீ கேம்ஸ் விளையாட்டு இன்னும் முழுமை பெறவில்லையே” என்று பிரதமர் நஜீப் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர், ஆக.28– சீ விளையாட்டுப் போட்டியில் ரசிகர்களால் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் மலேசியா–தாய்லாந்துக்கு இடையிலான இறுதியாட்டத்தின் போது, மலேசிய ஆட்டக்காரர்கள் நிதானப் போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டத்தோ ஓங் கிம் சுவீ வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான வெற்றிகளால் உற்சாக அலைகளில் மூழ்கி விடாதீர்கள். மிதப்பான போக்கு இருக்கக் கூடாது என்று ஆட்டக்காரர்களை அவர் எச்சரித்தார். 

தாய்லாந்து மிகச் சிறந்த குழு என்பதை மறந்து விடக்கூடாது. அரையிறுதியில் இந்தோனேசியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருப்பதை வைத்து அலட்சியம் காட்டிவிடக் கூடாது என்றார் அவர். 

இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தின் 87ஆவது இடத்தில் மலேசியாவின் முன்னணி வீரர் என்.தனபாலன் வெற்றிக் கோலை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு ஷா அலாம் அரங்கத்தில் நடக்கும் இறுதியாட்டத்தில் மலேசியாவும் தாய்லாந்தும் மோதவுள்ளன. புருணை, சிங்கப்பூர், மியன்மார், லாவோஸ் மற்றும் இந்தோனிசியா ஆகிய நாடுகளை வென்று மலேசியா இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றுள்ளது.

“நமது குழு தற்போது உச்சக்கட்ட ஆற்றலுடன் விளங்குகிறது. ஆட்டக்காரர்கள் மிகுந்த உற்சாகத்தோடு தாய்லாந்துடன் மோதத் தயார் நிலையில் உள்ளனர் என்று குழுவின் கேப்டன் முகம்மட் அடிப் ஜைனுதீன் கூறினார்.  

 

கோலாலம்பூர், ஆக.28- சீ விளயாட்டுப் போட்டியில் அபார வெற்றிகளைக் குவித்துவரும் மலேசியாவின் 100ஆவது தங்கத்தை இசை ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அமி குவான் டிக் வெங் வென்றார்.

இம்முறை 111 தங்கங்களை தனது இலக்காகக் கொண்டிருக்கும் மலேசியா, அந்த இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டு வரும் நிலையில், 100ஆவது தங்கத்தை இன்று காலை 12 மணியளவில் 'ஜிம்னாஸ்டிக் ரிப்பன்' பிரிவில் அமி குவான் வாகை சூடினார். 22 வயதுடைய அமிக்கு இது இரண்டாவது சீ கேம்ஸ் தங்கமாகும்.

அதேவேளையில் மற்றொரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான கூய் சீ யான் மேலும் இரு தங்கங்களை வென்று சாதனைப் படைத்தார். இவர் ஏற்கெனவே ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இரண்டு தங்கங்களை வென்றுள்ளார். இவர் மட்டும் மொத்தம் 4 தங்கங்களை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

More Articles ...