ஜூரிச், நவ.15- கடந்த 18 மாதங்களாக நடந்த தேர்வு ஆட்டங்களுக்குப் பின்னர், 2018 -ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இதுவரை 30 நாடுகள் தேர்வு பெற்றுள்ளன. இன்னும் இரண்டு நாடுகளுக்கான இடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

ஐரோப்பா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய பிராந்தியங்களில் இருந்து 30 நாடுகள் ரஷ்யாவில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளன. போட்டியை ஏற்று நடத்தும் நாடு என்ற வகையில் ரஷ்யா தேர்வுச் சுற்றில் பங்கேற்காமலேயே இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிவிட்டது. 

தொடர்ச்சியாக தேர்வு பெற்றுவிட்ட நிலையில், இந்நாடுகள் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில், சில முக்கிய கால்பந்து வல்லரசுகள் தேர்வு பெறத் தவறியதால் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளன.

2018-ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிக்கு தேர்வு பெற்ற நாடுகளின் பட்டியல் வருமாறு;

ஆசியாவிலிருந்து...,

1) ஈரான், 2) ஜப்பான், 3) சவுதி அரேபியா, 4) தென்கொரியா.

ஆப்பிரிக்காவிலிருந்து...,

1) எகிப்து, 2) மொரோக்கோ, 3) நைஜீரியா, 4) செனகல், 5) துனிசியா.

வட மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து..,

1) கோஸ்டா ரிக்கா, 2) மெக்சிகோ, 3) பனாமா.

தென் அமெரிக்காவிலிருந்து..,

1) அர்ஜெண்டினா, 2) பிரேசில், 3) கொலம்பியா, 4) உருகுவே, 

ஐரோப்பாவிலிருந்து...,

1) பெல்ஜியம், 2) குரோசியா, 3) டென்மார்க், 4) இங்கிலாந்து, 5) பிரான்ஸ், 6) ஜெர்மனி, 7) ஐஸ்லாந்து, 8) போலந்து, 9) போர்த்துக்கல், 10) செர்பியா, 11) ஸ்பெய்ன், 12) சுவீடன், 13) சுவிட்சர்லாந்து, 14) ரஷ்யா.

மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் இன்னும் 2 இடங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இவ்விரு இடங்களுக்கான தேர்வு ஆட்டங்களில் ஹோண்டுராஸை எதிர்த்து ஆஸ்திரேலியாவும் பெருவை எதிர்த்து நியூசிலாந்தும் விளையாடவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் இரு குழுக்கள், உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு தேர்வுபெறும்.

வாய்ப்பை இழந்த முன்னணி குழுக்கள்:

2018 -ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிக்கு தேர்வுபெறத் தவறிய முன்னணிக் குழுக்களில் குறிப்பிடத்தக்கது இத்தாலி. இந்தக் குழு நான்கு முறை உலகக் கிண்ணத்தை வாகை சூடிய குழு என்பதோடு கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உலகக் கிண்ண கால்பந்து இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்று வந்துள்ளது.

ஆகக் கடைசியான தேர்வு ஆட்டத்தில் சுவீடனுடன் இத்தாலி கோல் எதுவுமின்றி சமநில கண்டு வாய்ப்பை இழந்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த முதல் கட்ட ஆட்டத்தில் சுவீடன் 1-0 என்ற கோல்கணக்கில் வென்று இருந்ததால் அது இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்றுக்கு இத்தாலியை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதால் இத்தாலி முழுவதும் ரசிகர்கள் மத்தியில் சோக அலை வீசி வருகிறது.

இறுதிச் சுற்றுக்கு தேர்வுபெறத் தவறியதன் வழி கால்பந்து ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்த மற்றொரு குழு ஹாலந்து (நெதர்லாந்து) குழுவாகும். ஐரோப்பாவின் மிகச் சிறந்த கால்பந்து குழுவாக விளங்கிய இந்தக் குழு 1974, 1978 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் வரை சென்று சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்டது.   

மேலும் அமெரிக்கக் குழு இம்முறை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறத் தவறியது. தென் அமெரிக்க சாம்பியனான சிலியும் அடுத்த உலகக் கிண்ண போட்டிக்கு தேர்வு பெறவில்லை. தொடர்ச்சியாக தேர்வு பெற்று வந்த ஆப்பிரிக்க அணிகளான ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகியவை தேர்வு ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறின.

இதில் எதிர்பாராத விதமாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்ற குழுக்களின் வரிசையில் ஐஸ்லாந்து குழுவும் பனமாவும் இடம்பெற்றிருக்கின்றன.

 

 

 

 

 

 

பாரிஸ், அக்.30- பிரெஞ்சு பொதுப் பேட்மிண்டன் சூப்பர் சீரீஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ஶ்ரீகாந்த் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இறுதிப் போட்டியில் ஜப்பானின் கெண்டா நிஷிமோட்டோவுடன் மோதிய ஶ்ரீகாநத் 21-14 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர், 21-14, 21-13 என்ற நேர் செட்டுளில் மிக எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

இப்போட்டி 35 நிமிட நேரத்திலேயே முடிவுக்கும் வந்தது. ஶ்ரீகாந்த் வென்ற 4 ஆவது சூப்பர் சீரீஸ் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு நடந்த  இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் பொதுப் பேட்மிண்டன் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தைக் அவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக 4 ஆவது முறையாக பிரெஞ்சுப் போட்டியிலும் வென்று,  ஆண்கள் ஒற்றையிர் பிரிவு உலகத் தர வரிசையில் விரைவில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். ஒரே ஆண்டில் மட்டும் 4 சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் போட்டிகளில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும்லவர் பெற்றுள்ளார்.

லண்டன், அக்.23- உலகக் கால்பந்து சம்மேளமான “பிபா”வின் 2017-ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதினை கிறிஸ்தியானோ ரொனால்டோ வாகை சூடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் நடக்கும் விருதளிப்பு விழாவின் போது ரொனால்டோவின் பெயர் இறுதியாக அறிவிக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஆருடம் கூறப்படுகிறது. 

ரொனால்டோவை அடுத்து, பார்சிலோனா கிளப் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி, பி.எஸ்.ஜி கிளப் வீரரான நெய்மார் ஆகியோரும் இந்த இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். எனினும், ரியல் மாட்ரிட் வீரரான ரொனால்டோவுக்குத்தான் இந்த விருந்தினை கொடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. 

போர்த்துகலைச் சேர்ந்த ரொனால்டோ தம்முடைய கிளப்பான ரியல் மெட்ரிட், ஸ்பெயின் லீக் போட்டியில் சாம்பியனாக வாகைசூட பெரிதும் உதவினார். மேலும், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 12 கோல்கள் அடித்து, இம்முறை ரியல் மாட்ரிட் வெற்றி வாகை சூடுவதற்கு முக்கிய பங்காற்றினார். 

கடந்த ஆண்டில் தான் ‘பிபா’வின் சிறந்த கால்பந்து வீரர் விருது போட்டி தொடங்கப்பட்டது. தொடக்க விருதினை ரொனால்டா வென்றார். இம்முறையும் அவர்தான் வெல்வார் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரபல இத்தாலி வீரர் பிரான்செஸ்கோ டோட்டி கூறினார்.   

 ஒடென்ஸ், (டென்மார்க்) அக்.23- இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரராக உருவெடுத்திருக்கும் ஶ்ரீகாந்த் கிடாம்பி, புகழ்பெற்ற டென்மார்க் 'சூப்பர் சீரியஸ்' போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

தென்கொரிய வீரர் லீ ஹியூனை 21-10, 21-5 என்ற புள்ளிகளில் எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஶ்ரீகாந்த் வென்றார்.

சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு டென்மார்க் பேட்மிண்டன் போட்டியில் மீண்டும் ஓர் இந்திய வீரர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1979ஆம் ஆண்டில் டென்மார்க் போட்டியில் இந்திய வீரர் பிரகாஷ் படுக்கோன் சாம்பியனாக வாகை சூடினார்.

இறுதி ஆட்டத்திற்கு தேர்வுபெறும் முன்பு காலிறுதி ஆட்டத்தில் உலகத் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க் வீரர் விக்டர் அலெக்ஸனை வீழ்த்திய பின்னர் அரையிறுதியில் ஹாங்காங்கின் வோங் விங் கீயை வென்று இறுதியாட்டத்தில் நுழைந்தார்.

இறுதிப் போட்டியில் தம்முடைய அபார ஆட்டத்தின் வழி 23 நிமிடங்களில் நேரடி செட்டுகளில் லீ ஹியூனை தவிடு பொடியாக்கினார் ஶ்ரீகாந்த்.

மிகக் கூர்மையான தாக்குதல்களின் மூலம் அவர் தொடக்கம் முதற்கொண்டே லீ ஹியூனை நிலைகுலைய வைத்தார். ஶ்ரீகாந்தின் இந்தப் புதிய எழுச்சி, உலக பேட்மிண்டன் அரங்கை வியப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கெனவே ஆஸ்திரேலிய பேட்மிண்டன் போட்டி மற்றும் இந்தோனிய பேட்மிண்டன் போட்டி ஆகியவற்றில் சாம்பியனாக வாகை சூடியிருக்கும் ஶ்ரீகாந்தின் அதிரடி, இனி அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 நியூயார்க், அக்.6- ஈரான் நாட்டில் சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற வீராங்கனை, ‘துடோங்’ அணிய மறுத்ததால் விளையாட்டிலிருந்து நீக்கப்பட்டவர் என்றாலும் இப்போது அமெரிக்காவின் சதுரங்க சங்கம் அந்த வீராங்கனையை அவர்கள் நாட்டை பிரதிநிதித்து விளையாடும் அந்தஸ்தை வழங்கியுள்ளது. 

இரானின் தலைநகரான தெஹ்ரானைச் சேர்ந்த 19 வயதுடைய டோர்சா தெராக்‌ஷானி, சதுரங்க விளையாட்டில் கைத்தேர்ந்தவர். கடந்த ஜனவரி மாதம் ஈரான் சதுரங்க சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கிப்ரல்டர் சதுரங்க போட்டியில் அவர் ‘துடோங்’ அணியாததால் விளையாட்டிலிருந்து நீக்கப்பட்டார் என அமெரிக்க சதுரங்க சங்கம் அதன் அகப்பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

அப்போது முதல் அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து செயிண்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். அந்த பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்து இப்பொழுது சதுரங்க விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அமெரிக்கா அவரை அதிகாரப்பூர்வ சதுரங்க விளையாட்டாளராக அங்கீகரித்து நாட்டைப் பிரதிநிதித்து விளையாட தேர்வு செய்துள்ளது என அமெரிக்க சதுரங்க சங்கம் அதன் அகப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

'எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை அமெரிக்கா அதன் அதிகாரப்பூர்வ விளையாட்டாளராக அங்கீகரித்து ஆதரித்தும் வருகின்றது என டோர்சா தெராக்‌ஷானி கூறினார். சதுரங்க விளையாட்டில் சாம்பியன் ஆகவேண்டும்' என்பதுதான் தன்னுடைய கனவு என்று டோர்சா சொன்னார்.

 

விவர்புல், ஆக.28- இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் உலக அளவில் கணிசமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இரு குழுக்களான லிவர்புல் குழுவுக்கும் அர்சனலுக்கும் இடையே பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல்கணக்கில் அர்சனலை 

பிரித்து மேய்ந்தது லிவர்புல்.

லிவர்புல் குழு நடத்திய இடைவிடாத தாக்குதலில் அர்சனல் முற்றாக நிலைகுலைந்தது. துரிதமான எதிரியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அர்சனல் திணறியது வெளிப்படையாக தெரிந்தது. 

அண்மையில் 520 லட்சம் பவுண்டிற்கு வாங்கிய பிரெஞ்சு ஆட்டக்காரரான அலெக்சாண்ட்ரே லகாஷெட், அர்சனல் குழு இடம்பெறாமல் போனது அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமுமாக அமைந்தது.

ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் ரோபெர்ட்டோ பிர்மினோ முதல் கோலை அடித்து லிவர்புல் குழுவை முன்னிலைக்கு கொண்டுவந்தார். 

40ஆவது நிமிடத்தில் சாடியோ மானேயும் 57ஆவது நிமிடத்தில் முகமட் சாலாவும் 77ஆவது நிமிடத்தில் டேனியல் ஸ்டாரிட்ஜும் தொடர்ந்து கோல்களைப் போட்டு லிவர்புல் குழுவுக்கு அபார வெற்றியைத் தேடித்தந்தனர்.

இவ்வாண்டு பிரிமியர் லீக் போட்டி தொடங்கியது முதல் அர்சனல் இதுவரை ஆட்டிய 3 ஆட்டங்களில் இரண்டில் தோல்வி கண்டிருப்பது அதன் ரசிகர்களுக்கு சோகத்தை அளித்திருக்கிறது.

 

கிளாஸ்கோ, ஆக.28- இங்கு நடந்த உலகப் பேட்மிண்டன் சாம்பியன் போட்டியின் இறுதியாட்டத்தில் டென்மார்க்கின் இளம் வீரரான விக்டர் அலெக்ஸன் 22-20; 21-16 என்ற புள்ளிகளில் உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீரரான சீனாவின் லின் டானை வீழ்த்தினார்.

பெண்கள் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் ஜப்பானின் நஷோமி வொக்குஹாராவிடம் 21-19; 20-22; 22-20 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.

ஆண்கள் பிரிவில் 23 வயதுடைய அலெக்ஸன் கடுமையான எதிர்ப்பைச் சமாளித்து, உலகச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிருப்பதை தம்மால் நம்பவே முடியவில்லை என்று கூறினார்.

டென்மார்க்கைச் சேர்ந்த மூவர் மட்டுமே இதுவரை உலகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். அலெக்ஸனுக்கு அப்பால் பிளேமிங் டெல்ப் மற்றும் பீட்டர் ரஸ்முசன் ஆகிய இருவரே அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள லின் டானே எனது ஹீரோ.., உலகப் பட்டம் என்பது எனது கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது என்றார் அலெக்ஸன்.

இதனிடையே இந்தியாவின் சிந்துவுக்கும் ஜப்பானின் வொக்குஹாராவுக்கும் இடையிலான ஆட்டம் 110 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த ஆட்டத்தில் வென்று உலகப் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைச் தட்டிச் செல்ல ஆவேசத்துடன் போராடிய சிந்து, மூன்றாவது செட் ஆட்டத்தின் போது மிகவும் களைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More Articles ...