உலக பேட்மிண்டன்: லின் டான் ஆதிக்கம் சரிந்தது! சிந்துவுக்கு ஏமாற்றம்!

உலக அரங்கம்
Typography

 

கிளாஸ்கோ, ஆக.28- இங்கு நடந்த உலகப் பேட்மிண்டன் சாம்பியன் போட்டியின் இறுதியாட்டத்தில் டென்மார்க்கின் இளம் வீரரான விக்டர் அலெக்ஸன் 22-20; 21-16 என்ற புள்ளிகளில் உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீரரான சீனாவின் லின் டானை வீழ்த்தினார்.

பெண்கள் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் ஜப்பானின் நஷோமி வொக்குஹாராவிடம் 21-19; 20-22; 22-20 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.

ஆண்கள் பிரிவில் 23 வயதுடைய அலெக்ஸன் கடுமையான எதிர்ப்பைச் சமாளித்து, உலகச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிருப்பதை தம்மால் நம்பவே முடியவில்லை என்று கூறினார்.

டென்மார்க்கைச் சேர்ந்த மூவர் மட்டுமே இதுவரை உலகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். அலெக்ஸனுக்கு அப்பால் பிளேமிங் டெல்ப் மற்றும் பீட்டர் ரஸ்முசன் ஆகிய இருவரே அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள லின் டானே எனது ஹீரோ.., உலகப் பட்டம் என்பது எனது கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது என்றார் அலெக்ஸன்.

இதனிடையே இந்தியாவின் சிந்துவுக்கும் ஜப்பானின் வொக்குஹாராவுக்கும் இடையிலான ஆட்டம் 110 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த ஆட்டத்தில் வென்று உலகப் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைச் தட்டிச் செல்ல ஆவேசத்துடன் போராடிய சிந்து, மூன்றாவது செட் ஆட்டத்தின் போது மிகவும் களைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS