பேட்மிண்டன்: இந்திய வீரர் ஶ்ரீகாந்தின் அதிரடி வெற்றி!

உலக அரங்கம்
Typography

 ஒடென்ஸ், (டென்மார்க்) அக்.23- இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரராக உருவெடுத்திருக்கும் ஶ்ரீகாந்த் கிடாம்பி, புகழ்பெற்ற டென்மார்க் 'சூப்பர் சீரியஸ்' போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

தென்கொரிய வீரர் லீ ஹியூனை 21-10, 21-5 என்ற புள்ளிகளில் எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஶ்ரீகாந்த் வென்றார்.

சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு டென்மார்க் பேட்மிண்டன் போட்டியில் மீண்டும் ஓர் இந்திய வீரர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1979ஆம் ஆண்டில் டென்மார்க் போட்டியில் இந்திய வீரர் பிரகாஷ் படுக்கோன் சாம்பியனாக வாகை சூடினார்.

இறுதி ஆட்டத்திற்கு தேர்வுபெறும் முன்பு காலிறுதி ஆட்டத்தில் உலகத் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க் வீரர் விக்டர் அலெக்ஸனை வீழ்த்திய பின்னர் அரையிறுதியில் ஹாங்காங்கின் வோங் விங் கீயை வென்று இறுதியாட்டத்தில் நுழைந்தார்.

இறுதிப் போட்டியில் தம்முடைய அபார ஆட்டத்தின் வழி 23 நிமிடங்களில் நேரடி செட்டுகளில் லீ ஹியூனை தவிடு பொடியாக்கினார் ஶ்ரீகாந்த்.

மிகக் கூர்மையான தாக்குதல்களின் மூலம் அவர் தொடக்கம் முதற்கொண்டே லீ ஹியூனை நிலைகுலைய வைத்தார். ஶ்ரீகாந்தின் இந்தப் புதிய எழுச்சி, உலக பேட்மிண்டன் அரங்கை வியப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கெனவே ஆஸ்திரேலிய பேட்மிண்டன் போட்டி மற்றும் இந்தோனிய பேட்மிண்டன் போட்டி ஆகியவற்றில் சாம்பியனாக வாகை சூடியிருக்கும் ஶ்ரீகாந்தின் அதிரடி, இனி அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS