பிரிமியர் லீக்: மன்.சிட்டியை இனி யாரால் தடுக்க முடியும்?

உலக அரங்கம்
Typography

 

மன்செஸ்ட்டர், டிசம்.11- இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் அதிரடியாக முன்னேறியிருக்கும் மன்செஸ்ட்டர் சிட்டி குழுவைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அதன் பரம வைரியான மன்செஸ்ட்டர் யுனைடெட் குழு தோல்விகண்டு விட்டது. 

நேற்று நடந்த முக்கிய ஆட்டம் ஒன்றில் மன்.சிட்டி குழுவிடம் 2-1 என்ற கோல்கணக்கில் மன்.யுனைடெட் குழு தோலி கண்டதன் வழி முதலிடத்தில் இருக்கும் மன்.சிட்டி குழு அடுத்த இடத்தில் இருக்கும் மன்.யுனைடெட் குழுவை விட 11 புள்ளிகள் முந்தியது..

செல்சீ, லிவர்புல் மற்றும் அர்சனல் ஆகிய குழுக்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன என்பதால் பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு மன்.சிட்டிக்கு மிகப் பிரகாசமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்.சிட்டிக்கு எதிராக முதலிடத்தை பிடிக்கும் மற்ற குழுக்களின் போராட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. அதேவேளையில் 2ஆம் இடத்திற்கான போராட்டம், மன்.யுனைடெட், செல்சீ, லிவர்புல், அர்சனல் ஆகிய குழுக்களுக்கிடையே சூடு பிடித்திருக்கிறது.

அர்சனல் தலைதப்பியது!

அரசனல் குழுவுக்கும் சவுத்ஹாம்டன் குழுவுக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடித்து ஆட்டத்தை 1-1 என்ற கோல்கணக்கில் அர்சனல் சமாக்கியது.

இந்த ஆட்டத்தில் சவுத்ஹாம்டனின் சார்லி அடாம் 3ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டு தம்முடைய குழுவை முன்னிலைக்குக் கொண்டுவந்தார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்கள் வரை அரசனலின் பதில் தாக்குதல்களை சவுத்ஹாம்டன் முறியடித்த வண்ணம் இருந்தது. எனினும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. 

ஆட்டத்தின் 88ஆவது நிமிடத்தில் அர்சனல் வீரர் ஆலிவர் ஜீரோத் ஒரு கோலை அடித்து 1-1 என்ற கோல்கணக்கில் ஆட்டத்தைச் சமமாக்கி சவுத்ஹாம்டனுக்கு ஏமாற்றதை அளித்தார்.

செல்சீ வீழ்ச்சி கண்டது!

மற்றொரு முன்னணிக் குழுவான செல்சீ 1-0 என்ற கோல்கணக்கில் வெஸ்ட்ஹாம் குழுவிடம் தோல்வி கண்டு தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் வெஸ்ட்ஹாம் குழு வீரர் மார்க்கோ அர்னாட்டொவிக் முதலில் கோலை அடித்து செல்சீயை திகைக்க வைத்தார். அதன் பின்னர் செல்சீ கடுமையாகப் போராடியது என்றாலும் வெஸ்ட்ஹாம் குழுவின் தற்காப்பை முறியடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.

பிரிமியல் லீக் போட்டியில் மன்.சிட்டி குழு, தான் ஆடியுள்ள 16 ஆட்டங்களில் 46 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து 35 புள்ளிகளுடன் மன்.யுனைடெட் குழு 2ஆவது இடத்திலும் செல்சீ 32 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன.

டோட்டன்ஹாம் மீண்டும் எழுச்சி

லிவர்புல் மற்றும் எவர்ட்டனுக்கும் இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலை கண்ட நிலையில், ஒரு சரிவுக்கு பிறகு டோட்டன்ஹாம் குழு 5-1 என்ற கோல்கணக்கில் ஸ்டோக் சிட்டி குழுவை வீழ்த்தி தன்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் டோட்டன்ஹாம் 1-1 என்ற கோல்கணக்கில் வாட்ஃபோர்டிடம் சமநிலை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS