அதிரடி கோல் வீரர் அலெக்சி சான்சாஸ், இனி மன்.யுனை. குழுவுக்கு ஆடுவார்!

உலக அரங்கம்
Typography

மன்செஸ்ட்டர், ஜன.23- அர்சனலுக்கு விளையாடி வந்த முன்னணி கோல் வீரர் அலெக்சி சான்சாஸ் இனி மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவுக்கு விளையாடப் போகிறார்.  அண்மைய சில நாள்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்தப் பேரத்தில் மன்.யுனை. குழு வெற்றி கண்டுள்ளது.

அதேவேளையில் மன்.யுனை. குழுவுக்கு விளையாடி வந்த மத்திய திடல் ஆட்டக்காரரான ஹென்றிக் மிக்கிதார்யான், அர்சனல் குழுவுக்கு விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். மன்.யுனை. குழுவுக்கும் அர்சனலுக்கும் இடையேயான இந்தப் பேரத்தில் முக்கிய அம்சமே, மிக்கிதார்யானை கொடுத்து சான்சாஸ் வாங்குவதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலி நாட்டின் தேசிய ஆட்டக்காரரான சான்சாஸ் ஓர் அதிரடி கோல் வீரராவார். நான்கரை ஆண்டுகால ஒப்பந்தத்தை செய்துள்ள 29 வயதுடைய சான்சாஸ் தான் இங்கிலீஸ் பிரிமியர் கால்பந்து போட்டியில் அதிகச் சம்பளம் பெறும் வீரராக உருவெடுத்துள்ளார்.

இவருக்கு வாரம் ஒன்றுக்கு 6 லட்சத்து 95 ஆயிரம்  அமெரிக்க டாலர் சம்பளமாகும். ஏற்கனவே ஸ்பெயினின் பார்சிலோனா குழுவுக்கு விளையாடி வந்த சான்ஸாஸ், 2014ஆம் ஆண்டில் அர்சனல் குழுவில் இணைந்தார். அதன் பின்னர் அந்த ஒப்பந்தம் இவ்வாண்டோடு முடிவுக்கு வரும் நிலையில் தற்போது மன்.யுனை. குழுவில் சேர்ந்துள்ளார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS