ஐசிசி கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் தோல்வி சோகத்தில் உறைந்த இந்திய ரசிகர்கள்!

உலக அரங்கம்
Typography

லண்டன், ஜூன்.19- ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தானிடம் அதிர்ச்சி தரும் வகையில் இந்தியா தோல்வி கண்டு கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தப் போட்டியின் பூர்வாங்க ஆட்டத்தில் பாகிஸ்தானை, மிக எளிதாக இந்தியா வீழ்த்திருந்ததால் இறுதியாட்டத்திலும் இது எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

லண்டன் பர்மிங்ஹாமில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் பேட்டிங் செய்ய பாகிஸ்தானை அழைத்தது.

ஆட்டம் தொடங்கியது முதல் மிகச் சிறப்பாக ஆடிய பாகிஸ்தானிய பேட்ஸ்மென்கள், இந்தியாவின் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடி ரன்கள் குவிக்கத் தொடங்கினர். தொடக்க வீரர்களின் அதிரடி ஆரம்பமே அவர்களுக்கு புதிய தெம்பைக் கொடுத்தது. ஆட்டத்தின் முடிவில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தனர்.

மிகக் கடினமான இலக்கான 339 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணியைப் பொறுத்தவரை அதன் முன்னணி பேட்ஸ்மென்களான ரோஹிட் சர்மா, சிகார் தவான், வீராத் கோலி, யுவராஜ் சிங் ஆகியோருடன் டோனியும் சேர்ந்து பாகிஸ்தான் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்திய கிரிகெட் ரசிகர்கள் காத்திருந்தனர்.

மேலும் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் என்றால் எப்போது நிலவும் அதே பரபரப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு ரன் கூட எடுக்காமல் எடுத்த எடுப்பில்லேயே  ரோஹிட் சர்மா நடையைக் கட்டியது அதிர்ச்சியாக அமைந்தது. அடுத்துக் களமிறங்கினார் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வீராத் கோலி.

அண்மைய ஆட்டங்களில் மிக அபாரமாக விளையாடிவரும் கோலி, வெற்றி இலக்கை நோக்கி இந்தியாவை நகர்த்துவார் என காத்திருந்த ரசிகர்களை அவரும் கவிழ்த்தார். 4 ரன்கள் அடித்த நிலையில் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை அடுத்து யுவராஜ் சிங் ஆடத் தொடங்கினார். மறுமுனையில் ஆடிய சிகார் தவான், சிறிது நேரத்தில் வெளியேற 33 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

தொடர்ந்து யுவராஜ் சிங், டோனி என முக்கிய ஆட்டக்கரர்கள் வெளியேற இந்தியாவின் சரிவு தடுக்க முடியதாகி விட்டது. ஆக, 10 விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்து 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்தது கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு எதிராக அபார வெற்றியைப் பதிவு செய்த உற்சாகம் பாகிஸ்தான் குழுவில் கரைபுரண்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS