லண்டன், ஜூலை.17– விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை 8-ஆவது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனைப் படைத்திருக்கிறார். 

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிஆட்டத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரரும் குரோஷியாவின் மரின் கிலிச்சும் மோதினர் 

விம்பிள்டனில் போட்டியில் பெடரர் இதுவரை 11 முறை இறுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இம்முறை இறுதியாட்டத்தில் தொடக்கம் முதலே பெடரர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அடுத்தடுத்து 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அதிரடியாக செட்களை கைப்பற்றி விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் பெடரர்.

இதன் வழி விம்பிள்டன் பட்டத்தை 8 முறை கைப்பற்றிய சாதனை வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரோஜர் பெடரர்.  

இதுவரை மொத்தம் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமைக்கு உரியவராகி விளங்குகிறார் ரோஜர் பெடரர்.

லண்டன், ஜூலை.17- விம்பிள்டன் மகளிர் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கர்பைன் முகுருசா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

லண்டனில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசாவும் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்சும் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் இருவரும் சமநிலை வகித்தனர். 2 ஆவது செட்டில் அதிரடி தாக்குதலை நடத்திய முகுருசா அந்தச் செட்டை அபாரமாக கைப்பற்றினார்.

இறுதியில் 7-5, 6-0 என்ற நேர் செட்டுகளில் வீனஸை முகுருசா வீழ்த்தினார்.23 வயதாகும் முகுருசா இதற்கு முன் கடந்த ஆண்டு பிரெஞ்சு பொது டென்னிஸ் சாம்பியன் போட்டியில் பட்டத்தை கைப்பற்றியவராவார் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முகுருசாவின் 2 ஆவது வெற்றி இதுவாகும்.

முகுருசாவுடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களில், வீனஸ் வில்லியம்ஸ் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த இறுதியாட்டத்தில் டென்னிஸ் உலகின் மூத்த வீராங்கனைகளில் ஒருவரான வீனஸ் எளிதாக வாகைசூடுவார் என்ற எதிர்பார்ப்பைத் தகர்த்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் முகுருசா.

 

புவனேஷ்வர், ஜூலை.10- ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றிய போதிலும் இலங்கை வீராங்கனைகள் கூறிய புகாரை அடுத்து தகுதி நீக்கம் அவரதுசெய்யப்பட்டு, தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது. 

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகளப் போட்டியில்  பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ், 2 நிமிடம் 2 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதில் இலங்கை வீராங்கனைகள் நிமாலி வாலிவர்ஷா 2-ஆவது இடத்தையும், கயந்திகா 3 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்தியாவை சேர்ந்த 21 வயதான அர்ச்சனாவின் தங்கம் வென்ற மகிழ்ச்சி சோகத்தில் முடிந்தது.

இலக்கை நோக்கி ஓடிய போது, தாங்கள் முந்தக்கூடாது என்பதற்காக அர்ச்சனா வேண்டுமென்றே வழியை மறித்து இடையூறு செய்தார் என்று இலங்கை வீராங்கனைகள் புகார் கூறி சர்ச்சையை கிளப்பினர்.

இதையடுத்து ஆசிய தடகள போட்டி ஒருங்கிணைப்பு குழு, ‘வீடியோ’ பதிவுகளை ஆய்வு செய்தது. இதில் இலங்கை வீராங்கனைகளின் புகாரில் உண்மை இருப்பதாக கருதிய குழு, அர்ச்சனாவை தகுதி நீக்கம் செய்து பதக்கத்தைப் பறித்தது. 

அதனால் 2-ஆவது இடத்தை பிடித்த நிமாலிக்கு தங்கப்பதக்கமும் வெள்ளிப்பதக்கம் 3-ஆவது இடத்தை பிடித்த கயந்திகாவுக்கு வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் கண்ணீர் விட்டு அழுதார். 

லண்டன், ஜூன்.19- ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தானிடம் அதிர்ச்சி தரும் வகையில் இந்தியா தோல்வி கண்டு கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தப் போட்டியின் பூர்வாங்க ஆட்டத்தில் பாகிஸ்தானை, மிக எளிதாக இந்தியா வீழ்த்திருந்ததால் இறுதியாட்டத்திலும் இது எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

லண்டன் பர்மிங்ஹாமில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் பேட்டிங் செய்ய பாகிஸ்தானை அழைத்தது.

ஆட்டம் தொடங்கியது முதல் மிகச் சிறப்பாக ஆடிய பாகிஸ்தானிய பேட்ஸ்மென்கள், இந்தியாவின் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடி ரன்கள் குவிக்கத் தொடங்கினர். தொடக்க வீரர்களின் அதிரடி ஆரம்பமே அவர்களுக்கு புதிய தெம்பைக் கொடுத்தது. ஆட்டத்தின் முடிவில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தனர்.

மிகக் கடினமான இலக்கான 339 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணியைப் பொறுத்தவரை அதன் முன்னணி பேட்ஸ்மென்களான ரோஹிட் சர்மா, சிகார் தவான், வீராத் கோலி, யுவராஜ் சிங் ஆகியோருடன் டோனியும் சேர்ந்து பாகிஸ்தான் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்திய கிரிகெட் ரசிகர்கள் காத்திருந்தனர்.

மேலும் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் என்றால் எப்போது நிலவும் அதே பரபரப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு ரன் கூட எடுக்காமல் எடுத்த எடுப்பில்லேயே  ரோஹிட் சர்மா நடையைக் கட்டியது அதிர்ச்சியாக அமைந்தது. அடுத்துக் களமிறங்கினார் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வீராத் கோலி.

அண்மைய ஆட்டங்களில் மிக அபாரமாக விளையாடிவரும் கோலி, வெற்றி இலக்கை நோக்கி இந்தியாவை நகர்த்துவார் என காத்திருந்த ரசிகர்களை அவரும் கவிழ்த்தார். 4 ரன்கள் அடித்த நிலையில் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை அடுத்து யுவராஜ் சிங் ஆடத் தொடங்கினார். மறுமுனையில் ஆடிய சிகார் தவான், சிறிது நேரத்தில் வெளியேற 33 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

தொடர்ந்து யுவராஜ் சிங், டோனி என முக்கிய ஆட்டக்கரர்கள் வெளியேற இந்தியாவின் சரிவு தடுக்க முடியதாகி விட்டது. ஆக, 10 விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்து 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்தது கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு எதிராக அபார வெற்றியைப் பதிவு செய்த உற்சாகம் பாகிஸ்தான் குழுவில் கரைபுரண்டது.

ஜக்கர்த்தா, ஜூன்.9- சமயச் சச்சரவு இல்லாத ஓர் அமைதியான உலகம் எப்படி இருக்கும்? அல்லது எப்படி இருக்கவேண்டும்? என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ, அப்படிப்பட்ட ஒரு காட்சி இது. கால்பந்து போட்டியின் போது கோல் அடிக்கும் குழுவின் ஆட்டக்காரர்கள் எப்படி எப்படியோ இதுவரை கோல் அடித்த மகிழ்ச்சி

கொண்டாடி இருப்பார்கள். ஆனால், முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் இந்து ஆகிய மும்மதத்தைச் சேர்ந்த 3 ஆட்டக்காரர்கள் அந்த வெற்றியை கடவுளுக்கு நன்றி கூறும் விதமாக இப்படிக் கொண்டாடினர்.

அண்மையில் இந்தோனிசியாவில் நடந்த கால்பந்துப் போட்டியின் போது சக ஆட்டக்காரரான யாபெஷ் ரோனி கோல் அடித்த போது சக ஆட்டக்காரர்கள் இத்தகைய முறையில் அந்த வெற்றியை நன்றி பெருக்கோடு கொண்டாடியது உலக அளவில் மக்களையும்  கால்பந்து ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

அரசியல் ரீதியாக உள்ளார்த்தம் கொண்ட ஒரு பிரகடனத்தை, வார்த்தைகளின்றி இவர்களின் இந்த செய்கை உலகுக்கு புலப்படுத்தி இருக்கிறது.  

மதங்கள் வேறாகலாம். இனங்கள் வேறாகலாம். ஆனால், மாறுபட்ட நமது இறை நம்பிக்கையானது, நாம் ஒன்றுபட்டு அடைய நினைக்கும் கோல் இலக்கை தடுத்து விடமுடியாது என்பதுதான் இவர்களின் இந்தச் செய்கைக்கு அர்த்தம் என்று கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து இருக்கிறார்கள்.

இந்தோனிசியாவின் பாலி யுனைடெட் குழு 3-0 என்ற கோல்கணக்கில் போர்னியோ எப்.சி. குழுவை வென்றது. பாலி யுனைடெட் குழுவின் 2ஆவது கோலை அக்குழுவின் ஆட்டக்காரர் யாபெஷ் ரோனி அடித்த போது சக ஆட்டக்காரர்கள் மூவர் ஒரே வரிசையில் நின்று அந்த வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தனர். பாலி யுனைடெட் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரரரான ஞகுரு நானக் (இந்து), முன்னணி ஆட்டக்காரர் யாபெஷ் ரோனி (கிறிஸ்துவர்) மற்றும் முஃப்தாகுல் ஹம்டி (முஸ்லிம்) ஆகியோரே அந்த மூவராவர்.

ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் குறிப்பாக, சமய சார்பில்லாமல் இருந்து வந்த இந்தோனிசியாவில் அண்மைய காலமாக சமயச் சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது, தீவிரவாதம் அதிகரித்துள்ளது. இதற்கு ஒரு மாற்று மருந்தை இந்த மூவரும் முன்வைத்துள்ளனர்.

அதாவது சமயங்கள் வேறாக இருக்கலாம். ஐக்கியத்துடன் இருந்தால் எந்த இலக்கையும் எட்டலாம் என்ற உண்மையை அவர்கள் புலப்படுத்தியுள்ளனர்.

நாங்கள் வேறு வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள்தான். வேறு வேறு இனத்தைச் சார்ந்தவர்கள்தான். ஆனால் நாங்களெல்லாம் ஒன்று. எங்கள் நாட்டின் நல்லெண்ணத்தையும் ஐக்கியத்தையும் நாங்கள் காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று கோல் வீரரான யாலெஷ் ரோனி. நாட்டை கால்பந்து ஒன்றுபடுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்று பலர் கருத்துக் கூறியுள்ளனர்.

 லண்டன், ஜூன்,5- இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போது ஒன்று சேர்ந்தன? இப்படித் தோள் மீது கைபோட்டுக் கொண்டு எப்படியப்பா வந்தது இப்படியொரு உறவுமுறை? இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் தலைமுடியை பிய்த்துக் கொள்ளாத குறையாகக் குழம்பிப் போயினர் நேற்று.

பர்மிங்ஹாம் திடலில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது இப்படியொரு காட்சி அடிக்கடி தொலைக்காட்சி கேமிராவின் கண்களுக்கு அகப்பட்டுக்கொண்டே இருந்தது. 

விட்டு விட்டுப் பெய்த மழையிலும், ஒருபுறம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அனல் பறக்கும் விதத்தில் கிரிக்கெட் யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

ஆனால், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அருகருகே அமர்ந்து கொண்டு தோளில் கை போட்டவாறு ஒருவர் பாகிஸ்தானையும் மற்றொருவர் இந்தியாவையும் விடாமல் ஆதரித்துக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இவர்களில் பெண், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அணியும் சீருடையை அணிந்திருந்தார். அருகில் இருந்த அந்த ஆடவர், இந்திய வீரர்கள் அணியும் கிரிக்கெட் சீருடையை அணிந்திருந்தார். அந்தப் பெண் தனது தோளில் பாகிஸ்தான் கொடியைப் போர்த்தி இருந்தார். அந்த ஆடவர் இந்தியக் கொடியைப் போர்த்தி இருந்தார்.

இந்தியா சிக்ஸர் அடித்த போதும், பவுண்ட்ரி அடித்த போதும் அந்த ஆடவர் உற்சாகமாகக் குரல் கொடுத்துக் கொண்டாடினார். அதேபோன்று பாகிஸ்தான் ரன் குவித்த போதெல்லாம் அந்தப் பெண் உற்சாகமாகக் கொண்டாடினார்.

தொலைக்காட்சி பல முறை இவர்கள் இருவரையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டிருந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இதனைக் கண்டு திகைத்துப் போயினர். பார்வையாளர்கள் வரிசையில் இருந்த இவர்களின் 'இந்தியா-பாகிஸ்தான் கூட்டணி காட்சி' சமூக வலைத்தளங்களில் எக்கச் சக்கமாக பரவிக்கொண்டிருக்கிறது.

இவர்கள் யார்? கணவன்-மனைவியா? அல்லது காதலர்களா? இவர்களின் உறவு எங்கே மலர்ந்தது? கிரிக்கெட் அரங்கில் சந்தித்த பின்னர் ஏற்பட்ட நெருக்கமா? அல்லது ஏற்கெனவே நெருக்கமா? இப்படி மூச்சுமுட்ட கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகப் பெருங்கோடிகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.

 

 

 

 

கார்டிப், ஜூன்.4- கால்பந்து உலகின் 'சூப்பர் ஸ்டாராக' விளங்கி வரும்  கிறிஸ்தியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்த நிலையில் 4-1 என்ற கோல்கணக்கில் ஜுவெண்டஸ் குழுவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் குழு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் சாம்பியனாக வாகைசூடியது. 

மேலும் அடுத்தடுத்து சாம்பியன்ஸ் லீக் போட்டியில் வென்று வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஒரே குழு என்ற பெருமையை  ரியல் மாட்ரிட் தட்டிச் சென்றது.

முற்பகுதி ஆட்டத்தின் போது ரொனால்டோ முதலில் கோலடித்து தனது ரசிகர்களை உற்சாகத்தில் நீந்தவிட்டார். ஆனால், அது வெகுநேரம் நீடிக்கவில்லை ஜுவெண்டஸ் குழு பதிலடி கொடுத்தது. ஜுவெண்டஸின் முன்னணி ஆட்டக்காரர் மரியோ மண்டுஷுகிச் ஓர் அற்புதமான கோலின் வழி ஆட்டத்தைச் சமமாக்கினார்.

முற்பகுதியில் இரண்டு குழுக்களுமே மாறி மாறித் தாக்குதல்களைத் தொடுத்தன என்றாலும் கோல் அடிக்க முடியவில்லை. பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய பின்னர் ரியல் மாட்ரிட்டின் கை ஓங்கத்தொடங்கியது.

61ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் கேஸ்மிரோ 2ஆவது கோலைப் போட்டு தனது குழுவை வெற்றிப்பாதைக்கு கொண்டுவந்தார்.

இதிலிருந்து மீள்வதற்கு ஜுவெண்டஸ் போராடத் தயாரானது. ஆனால், அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே சூப்பர் ஸ்டார் ரொனால்டோ மேலும் ஒரு கோலைப் போட்டு ஜுவெண்டஸுக்கு மரண அடி கொடுத்தார். 

இந்நிலையில், 84ஆவது நிமிடத்தில் ஜுவெண்டஸ் வீரர் குவாட்ராடோ ஆட்டத்திலிருந்து நடுவரால் வெளியேற்றப்பட்ட நிலையில் அக்குழு மிகவும் பலவீனப்பட்டது. 90ஆவது நிமிடத்தில் அசென்சியோ தனது குழுவின் 4ஆவது கோலை அடிக்க, 4-1 என்ற கோல்கணக்கில் சாம்பியன்ஸ் லீக்  கிண்ணத்தை ரியல் மாட்ரிட் மீண்டும் கைப்பற்றியது.

 

 

More Articles ...