லண்டன், மார்ச் 11- தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதற்காக தற்காலிகமாக டென்னிஸ் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவுக்கு ஒரேயொரு நிறுவனம் மட்டும் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது.

ஊக்க மருந்துத் தடை காரணமாக நைக், போர்சே மற்றும் டேக் ஹியெர் ஆகிய விளையாட்டுத் துறை நிறுவனங்கள் ஷரபோவாவுடனான தங்களது உடன்பாடுகளை ரத்து செய்துவிட்டன. ஆனால், ஹெட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மட்டும் தான் செய்து கொண்டுள்ள உடன்பாட்டை ரத்து செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் போது ஷரபோவா மெல்டோனியம் எனப்படும் ஊக்க மருந்தை உட்கொண்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை தொடரும் நிலையில், மூன்று மாதக் காலத்திற்கு தற்காலிகத் தடைக்குள்ளாகி  இருக்கும் ஷரபாவோ, இடைப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்கான டென்னிஸ் பயிற்சிகளில் ஈடுபவதற்கு தாங்கள் உதவி வரப்போவதாக ஹெட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

 இந்த அடிப்படையில் அவருடன் செய்து கொண்டுள்ள விளம்பர உடன்பாட்டு தொடர்ந்து நடப்பில் இருந்து வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

லிவர்புல், மார்ச் 11- பலம் பொருந்திய இரு பிரிமியர் லீக் குழுக்களான லிவர்புல் மற்றும் மன்செஸ்ட்டர் யுனைடெட் ஆகியவற்றுக்கு இடையே நடந்த ஐரோப்பா கால்பந்து லீக் பலப் பரீட்சையில் லிவர்புல் வாகைசூடியது.

தனது சொந்த அரங்கமான அன்ஃபீல்டில் நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்புல் வென்றது.

மிகவும் பரபரப்பாக ஆரம்பித்த போதிலும், மன்செஸ்ட்டர் யுனைடெட் அதிரடி நடத்தும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பிசுபிசுத்துப் போனது. லிவர்புல் குழுவின் நெருக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறியது.

முற்பகுதி ஆட்டத்தில் 20ஆவது நிமிடத்தில் நடுவர் வழங்கிய பெனால்டியைப் பயன்படுத்தி லிவர்புல் வீர்ர் டேனியல் ஸ்டரிட்ஜ் முதல் கோலைப் போட்டார்.

அடுத்து 73ஆவது நிமிடத்தில் முன்னணி ஆட்டக்காரர் ரோபெர்ட்டோ ஃபிர்மினோ 2ஆவது கோலைப் போட்டார்

இந்த ஆட்டத்தில், ஒருமுறை கூட லிவர்புல் கோல்முனையில் மன்.யுனை. தாக்குதலே நடத்தவில்லை என்பது தான் வேதனையான விஷயம். அதேவேளையில், மன்.யுனை. கோல்கீப்பர் டி கியாவின் திறமையால்தான் அக்குழு அதிக கோல் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுவது தடுக்கப்பட்டது.

அடுத்தவாரம் நடக்கவிருக்கும் 2ஆவது மோதலின் போது மன்.யுனை. 3 கோல்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே காலிறுதி ஆட்டத்திற்குச் செல்லமுடியும்.

எனினும், 2 கோல்கள் வித்தியாசத்தில் முதல்கட்ட ஆட்டத்தில் வென்றதானது, காலிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாக லிவர்புல் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

 

லண்டன், மார்ச் 10- கால்பந்து உலகில் கோல் இயந்திரமாக விளங்கி வரும் இப்ராகிமோவிச்சின் அதிரடி ஆட்டத்திற்கு செல்சீ குழு மீண்டும் பலியானது.

 

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில், 2ஆவது கட்ட மோதலிலும் செல்சீ 2-1என்ற கோல்கணக்கில் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிடம் தோல்வி கண்டதால், போட்டியிலிருந்தே வெளியேற நேர்ந்தது.

 

முதல் கட்ட ஆட்டத்திலும் 2-1 என்ற கோல்கணக்கில் செல்சீ குழு பிஎஸ்ஜியிடம் தோல்வி கண்டது. 2ஆவது கட்ட ஆட்டத்தின் போது 16ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி ஆட்டக்காரர் அட்ரியன் ரபியோட் முதலில் கோலடித்தார் என்றாலும் செல்சீ வீரர் டியாகோ கோஸ்டா பதிலுக்கு ஒரு கோலைப்போட்டு ஆட்டத்தைச் சம்மாக்கினார்

எனினும், 67ஆவது நிமிடத்தில் முன்னணி கோல் வீரர் இப்ராகிமோவிச்  வெற்றிக்கோலை அடித்தார். இதன் வழி, பிஎஸ்ஜி குழு சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றது.

லண்டன், மார்ச் 9- அண்மைய ஆட்டங்களில் தொடர்ச்சியாக சில சரிவுகளைச் சந்தித்து இருந்தாலும், இங்கு நடந்த எப்.. கிண்ண 5ஆவது சுற்றுக்கான மறு ஆட்டத்தில் அர்சனல் சிறப்பான வெற்றியைக் குவித்தது

 

ஹல் சிட்டிக் குழுவை 4-0 என்ற கோல் கணக்கில் அர்சனல் வீழ்த்தி  காலிறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெற்றது. அடுத்து, வாட் போர்டு  குழுவுடன் அது மோதவிருக்கிறது.

 

40ஆவது நிமிடத்தில் ஆலிவர் ஜிரோட் முதல் கோலை அடித்தார். மேலும் 71ஆவது நிமிடத்தில் அவர் அர்சனலின் 2ஆவது கோலைப் போட்டார். தொடர்ந்து 77ஆவது நிமிடத்திலும் பின்னர் 88ஆவது நிமிடத்திலும் தியோ வால்கோட் மாறி மாறி  கோல் போட்டு 4-0 என்ற கோல் கணக்கில் அர்சனல் வெற்றி பெற உதவினார்.

 

 

எய்பார், மார்ச் 7- ஸ்பெய்ன் லீகா போட்டியில், பார்சிலோனா குழு 4-0 என்ற கோல்கணக்கில் எஸ்.டி.எய்பார் குழுவை வென்றது. இந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்சி மீண்டும் இரண்டு கோல்களை அடித்து குழுவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

லீகா புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா தனக்கு அடுத்த நிலையிலுள்ள குழுவைக் காட்டிலும் 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறது. ஆட்டம் தொடங்கிய 8ஆவது நிமிடத்தில் எல் ஹாடாட்டி முதல் கோலைப் போட்டார். 

அடுத்து 41ஆவது நிமிடத்தில் மெஸ்சி கோலடித்தார். 76ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை மெஸ்சி மீண்டும் கோலாக்கினார். 84ஆவது நிமிடத்தில் லுய்ஸ் சுவரெஸ் தமது குழுவின் 4ஆவது கோலைப் போட்டார்.

பார்சிலோனாவுக்கு போட்டி கொடுத்து வரும் அத்லெட்டிக்கோ மாட்ரிட் குழு 3-1 என்ற கோல் கணக்கில் வாலென்சியாவை வீழ்த்தியுள்ளது.

லிவர்புல், மார்ச் 7-கிறிஸ்டல் பேலஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்புல் அதிர்ஷ்ட வசமாக வெற்றியை நிலைநாட்டியது. முற்பகுதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே கோல் அடிக்கவில்லை.

எனினும், பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய 3ஆவது நிமிடத்தில் கிறிஸ்டல் பேலஸ் வீர்ர் ஜோ லெட்லி ஒரு கோலைப் போட்டார். இந்நிலையில் ஆட்டத்தைச் சமமாக்கப் போராடிய லிவர்புல் குழுவின் மத்திய திடல் வீரர் ஜேம்ஸ் மில்னர் நடுவரால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

எனினும், மனம் தளராமல் போராடியது லிவர்புல். பிரேசில் வீர்ர் ஃபிர்மினோ 72ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தைச் சம்மாக்கினார்.

இந்த ஆட்டம் சமநிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் நடுவர் வழங்கிய பெனால்டியை பயன்படுத்தி லிவர்புல் ஆட்டக்காரர் கிறிஸ்தியன் பென்டெக்கே குழுவின் 2ஆவது கோலையடித்தார். இந்தக் கடைசி நேர கோலினால் கிறிஸ்டல் பேலஸ் குழுவினர் மனமுடைந்து போயின.

 

டாக்கா, மார்ச் 7-ஆசிய கிண்ண 20-ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ‘நானே ராஜா’ என்பதை இந்தியா மீண்டும் நிருபித்தது. வங்காள தேசத்திற்கு எதிரான ஆசியக் கிண்ண 20-ஓவர் இறுதியாட்டத்தில், இந்திய 8 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடி, 6ஆவது முறையாக ஆசிய சாம்பியனானது.

மழை காரணமாக, ஆட்டம் 2 மணிநேரம் தாமதமானது. ஆட்டம் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா, முதலில் வங்காள தேசத்தை பேட்டிங் செய்ய அனுமதித்தது.

ஐந்து விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை வங்காளதேசம் அடித்தது. ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வங்காளதேச வீர்ர் முகமட் முகம்மதுல்லா கடினமான தாக்குதல்களை நடத்தி ரன்களைக் குவித்தார். 33 ரன்கள் எடுத்து இவர் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

120 ரன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறிய இந்தியாவுக்கு தொடக்கம் சற்று சறுக்கலாக அமைந்தது. சிக்தார் தவானுடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, 5 பந்துகளில் ஒரே ரன்னுடன் வெளியேறி அதிர்ச்சியை அளித்தார்.

எனினும், அடுத்து களமிறங்கிய வீராத் கோலி, ஈடுகொடுத்து ஆடினார். தவானும் கோலியும் சேர்ந்து வங்காள தேசத்தின் பந்து வீச்சுக்களைத் துவாம்சம் செய்தனர்.

44 பந்துகளுக்குக் தவான் 60 ரன்களைக் குவிக்க, வீராத் கோலி 28 பந்துகளுக்கு 41 ரன்கள் விளாசினார்.

தவான் வெளியேறிய பின்னர், களத்தினுள் நுழைந்த கேப்டன் தோனி, வழக்கம் போலவே போட்டுத் தாக்கினார்.  இரண்டு சிக்சர், ஒரு பவுண்ட்ரி என 6 பந்துகளில் 20 ரன்களை அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

இதுவரை ஆடியுள்ள பதினொரு 20ஓவர் ஆட்டங்களில் 10 ஆட்டங்களில் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது. 6ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை வென்று, 20-ஓவர் கிரிக்கெட் ஆட்டங்களில் ‘நானே ராஜா’ என்பதை இந்தியா நிருபித்துள்ளது.

இம்முறை, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைப் பூர்வாங்க ஆட்டங்களில் வென்று இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்ற வங்காளதேசம், இந்தியாவையும் கவிழ்ப்பதன் வழி ஒரு புதிய வரலாறு படைக்கும் ஆவலுடன் தனது தேசிய கிரிக்கெட் அரங்கில் இறங்கியது. தங்களது எதிர்ப்பார்ப்பு நிறைவேறாததால் வங்காள தேச ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

More Articles ...