கார்டிப், ஜூன்.3- உலகின் தலைசிறந்த இரண்டு கால்பந்து குழுக்களான ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட்டும் இத்தாலியைச் சேர்ந்த ஜூவெண்டசும் இன்று இரவு (மலேசிய நேரம் நாளை அதிகாலை 2.45) சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்தில் மோதுவதை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு அமல்படுத்தப் பட்டுள்ளது. 

அண்மையில் மன்செஸ்ட்டர் நகரிலுள்ள இசை அரங்கில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக, இம்முறை கால்பந்து போட்டிக்கு பாதுகாப்புத் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

 வேள்சின் தலைநகரான கார்டிப்பிலுள்ள பிரின்சிபிலிட்டி அரங்கத்தில் நடக்கும் இந்த இறுதி ஆட்டத்தை 74,000க்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கத்தில் அமர்ந்து ரசிப்பர். அதேவேளையில், அரங்கத்தைச் சுற்றிலும் சில ஆயிரம் ரசிகர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்கள் இந்நகருக்கு வந்து குவியவுள்ளனர். உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளின் வழி 350 மில்லியன் காலபந்து ரசிகர்கள் கண்டு களிக்கவிருக்கின்றனர்.

சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு எதிராக குறிப்பிட்டு, எந்தவொரு பயங்கரவாத மிரட்டலும் இதுவரை இல்லை என்றாலும் முன்னேற்பாடாக தாங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருப்பதாக வேள்சின் முதன்மை அமைச்சர் கார்வின் ஜோன்ஸ் தெரிவித்தார்.

அரங்கத்தைச் சுற்றிய வீதிகள் அனைத்தும் மூடப்படும் மேலும் டாஃப் ஆற்றிலும் கார்டிப் விரிகுடாவிலும் கடல் போக்குவரத்து அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

சுமார் 6,000 போலீஸ் வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களில் 600 பேர் முழுமையாக ஆயுதந்தாங்கிய அதிரடி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கால்பந்து ஆட்டத்தின் போது அரங்கத்தின் மேற்கூரை முற்றாக மூடப்படும். மூடப்பட்ட அரங்கில் விளையாடு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

டிரோன் எனப்படும் ஆளில்லாத விமானம் மூலம் வானத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அரங்கத்தின் மேற்கூரை முற்றாக மூடப்படும் என்று அமைச்சர் கார்வின் ஜோன்ஸ் கூறினார்.

 

ஸ்டாக்ஹோம், மே.25- இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்ட மன்செஸ்ட்டர் யுனைடெட் குழு, அந்தச் சரிவை ஈடுகட்டும் வகையில், இன்று அதிகாலை நடந்த ஐரோப்பிய லீக் கிண்ண இறுதியாட்டத்தில் ஹாலந்தின் அயாக்ஸ் குழுவை 2-0 என்ற கோல்கணக்கில் வென்று வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

எனினும், அதன் ரசிகர்கள் இந்த வெற்றியை மிக அடக்கமாகவே கொண்டாடினர். ஏனெனில் இரண்டு தினங்களுக்கு முன்புதான் சொந்த ஊரான மன்செஸ்ட்டரில் நடந்த இசைநிகழ்ச்சி ஒன்றில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் மாண்டனர்.

இந்தத் துயரத்தில் இருந்து மக்கள் மீளமுடியாத நிலையில், இருக்கும் போது மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவின் இந்த வெற்றியை கொண்டாடுவது முறையல்ல என்பதால் மன்செஸ்ட்டர் ரசிகர்களும் நகர மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. 

ஐரோப்பா கிண்ண சாம்பியன் போட்டியில் பெற்ற வெற்றியின் வழி மன்செஸ்ட்டர் யுனைடெட் குழு, பிரசித்திபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிமியர் லீக் சாம்பியன் செல்சீ, 2ஆவது, 3ஆவது, 4ஆவது இடங்களைப் பிடித்த டோட்டன்ஹாம், மான்செஸ்ட்டர் சிட்டி, லிவர்புல் ஆகிய நான்கு குழுக்கள் ஏற்கெனவே சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அயாக்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தின் போது மன்செஸ்ட்டர் வீரர்களான போல் போக்பா மற்றும் ஹென்றிக் மஹிட்டார்யான் ஆகியோர் வெற்றிக் கோல்களை அடித்தனர்.

 

 

அம்ஸ்டர்டாம், மே.18- இங்கிலாந்தின் மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவுக்கும் ஹாலந்தின் அயாக்ஸ் குழுவுக்கும் இடையே நடைபெறவிருக்கும் ஐரோப்பா லீக் கால்பந்து இறுதியாட்டம் ரணகளமாகப் போகிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

புகழ்பெற்ற இவ்விரு குழுக்களுக்கும் இடையலான இந்த இந்த ஆட்டம், சுவீடனின் தலைநகரான ஸ்டோக்ஹோமில் மே மாதம் 25-ஆம் தேதி இரவு இடம்பெறவிருக்கிறது. அதாவது, மலேசிய நேரப்படி 26ஆம் தேதி அதிகாலையில் போட்டி நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தின் போது மிகவும் அடாவடியான அயாக்ஸ் குழுவின் ரசிகர்கள் படை களமிறங்கப் போகிறது என்றும் ஸ்டோக்ஹோம் நகர வீதிகள் ரணகளம் ஆகப்போகிறது என்றும் இப்போதே ஊடகங்களில் தகவல்கள் வெடித்துள்ளன.

இந்த ரசிகர் படையினர் பெரும்பாலும் டிக்கெட் எடுப்பது கிடையாது. தெருக்களில் திரண்டு தொலைக்காட்சிகளில் கால்பந்து ஒளிபரப்பை காணுவர். ஆனால், உண்மையில் விளையாட்டைப் பார்ப்பதைக் காட்டிலும் அவர்கள் தங்களுடைய குழு வெல்லவேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருப்பர். தோல்விக்கு உள்ளாகி விட்டதால் தெருச் சண்டையில் இறங்கிவிடுவர்.

இந்த இறுதியாட்டத்திற்கு ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைப்பது கடினம். இப்போதே டிக்கெட் ஒன்று 10,000 பவுண்டு வரை கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மொத்தம் 48 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியாக்கப் படவுள்ளது. மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவுக்கென 10 ஆயிரம் டிக்கெட்டுகளும் அயாக்ஸ் குழுவுக்கு என்று 10 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு விடும். எஞ்சியவை ரசிகர்களுக்காக நேரடியாக விற்கப்படும். 

ஆனால், ஹாலந்தில் இருந்து அயாக்ஸ் குழுவின் அதிதீவிர ரசிகர்கள் சில ஆயிரம் பேர் வரவிருக்கின்றனர். இவர்களைப் பல சுற்றுலா நிறுவனங்கள் தலைக்கு 160 பவுண்ட் (டிக்கெட்டை சேர்க்காமல்) வாங்கிக் கொண்டு பஸ் பஸ்சாக கொண்டுவந்து இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஏற்கேனவே லியோன் குழுவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் போது ஆயாக்ஸ் ஆதரவாளர்கள் படு கலாட்டாவில் இறங்கினர். இம்முறை மன்,யுனைடெட் ரசிகர்களுடன் இவர்கள் தெருச் சண்டைகளில் இறங்குவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சண்டை வந்தால் என்னென்ன செய்யலாம்? என்று இந்த ரசிகர்களுக்கென இயங்கும் இணையத் தளம் ஒன்று ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் கைதானால், அவர்களை எப்படி ஜாமினில் எடுக்கவேண்டும் என்பதற்கான அனுபவம் தங்களுக்கு இருப்பதால் அதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து இறுதியாட்டம் தெருச் சண்டையாக மாறி இரத்தக்களரி ஆகக்கூடும் என்ற அச்சம் பரவியுள்ளது.

லண்டன், மே.15- பிரபல முன்னாள் கால்பந்து வீரரான இங்கிலாந்தின் டேவிட் பெக்காம், தம்முடைய மனைவியும் முன்னாள் பாடகியும் இந்நாள் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான விக்டோரியாவுக்கு காதல் நினைவுப் பரிசாக ஒரு தீவை விலைக்கு வாங்கித் தர திட்டமிட்டுள்ளார்.

விக்டோரியாவுடன் காதல் மலர்ந்து 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு தீவைப் பரிசாகத் தர டேவிட் பெக்காம் முடிவு செய்திருப்பதாக இணையச் செய்தி ஒன்று கூறியது.

கரீபியன் கடல் பகுதியில் தீவு ஒன்றை வாங்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். விடுமுறை நாள்களை குடும்பத்தினருடன் அமைதியான கழிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தனிமைக்குள், யாரும் ஊடுருவதாக ஓர் இடம் வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாகும். செய்தியுலக புகைப்படக்காரர்களின் துரத்தல்கள், ரசிகர்களின் செல்ஃபி தொல்லைகள் இல்லாத வகையில் விடுமுறையை தனது 4 பிள்ளைகளுடனும் கழிக்க அவர் விருப்பம் கொண்டுள்ளார் என அந்த இணையச் செய்தி கூறியது.

லண்டன், மே.15- இவ்வாண்டுக்கான இங்கிலாந்தின் பிரிமியர் லீக் கால்பந்து போட்டி ஒருவழியாக இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில் கடைசி நேர அதிரடியாக டோட்டன்ஹாம் குழு 2-1 என்ற கோல்கணக்கில் மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 55 ஆண்டுகளுக்குப் பிறகு டோட்டன்ஹாம் குழு பிரிமியர் லீக்கில் 2ஆவது இடத்தைப் பிடித்தது. சாம்பியன் பட்டத்தை செல்சி வாகைசூடியுள்ள நிலையில், 3ஆவது, 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களைக் கைப்பற்ற நான்கு குழுக்கள் முயன்று வருகின்றன. 

எனினும், 3ஆவது இடத்தை மன்செஸ்ட்டர் சிட்டி பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில், 4ஆவது இடத்திற்கான போட்டியில் லிவர்புல் குழுவும் அர்சனலும் தீவிரமாக உள்ளன. 

லிவர்புல் குழுவுக்கு இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், 73 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அர்சனலுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் கைவசம் உள்ளன. தற்போது அது 69 புள்ளிகளைக் கொண்டுள்ளது. மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவுக்கு இன்னும் இரு ஆட்டங்கள் கவசம் உள்ளன. அது 65 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கிறது. 

 பிரிமியர் லீக்கில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறும். 5ஆவது, 6ஆவது இடத்தில் இருக்கும் குழுக்கள் ஐரோப்பா லீக்கில் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.

பிரிமியர் லீக்கில் இருந்து தகுதி இறக்கம் கண்டுள்ள கடைசி மூன்று குழுக்கள்  மிடில்ஸ்பரோ, ஹல் சிட்டி மற்றும் சண்டர்லேண்ட் ஆகியவை. 

லண்டன், மே.13- இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலும், எதிர்பார்க்கப் பட்டதைப் போலவே இங்கிலீஷ் பிரிமியர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது செல்சி.

போட்டியின் ஆரம்ப காலம் தொட்டு தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வந்துள்ள செல்சி குழு, தனது புதிய நிர்வாகியான இத்தாலியைச் சேர்ந்த அந்தோனியோ கொண்டே பொறுப்பேற்ற பின்னர் புதிய உத்வேகத்துடன் விளையாடி வந்தது.

இதன் விளைவாக, 36 ஆட்டங்களை முடித்துள்ள செல்சீ, இன்னும் இரண்டு ஆட்டங்கள் கைவசம் இருக்கும் நிலையில், 87 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.

நேற்று வெஸ்ட் புரோம்விச் குழுவுக்கு எதிரான ஆட்டம், கிட்டத்தட்ட கடைசி வரை கோல் எதுவுமின்றி சமநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில், 82ஆவது நிமிடத்தில் இளம் வீரர் மிச்சி பட்ஷுயாயி ஒரு கோலைப் போட்டு செல்சியின் சாம்பியன் வெற்றியை உறுதிப்படுத்தினார்.