கோலாலம்பூர், டிசம்.13- இவ்வாண்டின் சிறந்த பேட்மிண்டன் வீரர் விருதினை மலேசிய ஆட்டக்காரர் டத்தோ லீ சோங் வெய் வென்றார்.  ஐந்தாவது முறையாக இந்த விருதினை அவர் பெறுகிறார்.

இவ்வாண்டில் மலேசியா, இந்தோனிசியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய போட்டிகளில் வாகைசூடிய 34 வயதுடைய லீ சோங் வெய், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் நகரில் இந்த விருதளிப்பு விழா நடந்தது. சீனா வீரர் சென் லோங், டென்மார்க்கின் ஜான் ஜோர்ஜ்சன், மலேசியாவின் கோ ஷேம், டான் வீ கியோங், சீனாவின் ஃபூ ஹைபெங், ஷாங் நன் ஆகியோருடன் லீ சோங் வெய்யும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி இருந்த நிலையில், சிறந்த வீரர் விருதினை லீ சோங் வெய் தட்டிச் சென்றார்.

ஏற்கனவே 2009, 2010, 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதினை லீ சோங் வெய் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த நடக்கவிருக்கும் உலக சூப்பர்சீரிஸ் இறுதித் தொடரில் விளையாடவிருக்கும் லீ சோங் வெய்யிற்கு இந்த விருது மிகப்பெரிய உந்துதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கான பிரிவில் ஜப்பானின் மிசாக்கி மற்றும் அயாக்கி தக்காஷி ஜோடி வென்றது. முன்னேற்றகரமான சிறந்த வீராங்கனை என்ற பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வென்றார்.  

 

ஜுரிச், டிசம்.13- சிறந்த கால்பந்து வீரருக்கான 'பாலோன் டி'யோர்' விருதினை வாகைசூடினார் ரியல் மாட்ரிட் மற்றும் போர்த்துகல் நாட்டின் அதிரடி கோல்மன்னன் கிறிஸ்தியானோ ரொனால்டோ. நான்காவது முறையாக இந்த விருதினை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது. 

இந்த விருதுக்கான தேர்வில் இறுதிச் சுற்றுவரை ரொனால்டோவுக்கு பார்சிலோனாவின் முன்னணி வீரர் லியோனல் மெஸ்சியும் அத்லெட்டிக்கோ மாட்ரிட் குழுவின் கோல் வீரர் அண்டோய்ன் கிறிஷ்மானும் கடும் போட்டியை வழங்கினர்.

மே மாதம் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் குழுவை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் ஆக்கியதில் பெரும் பங்கு ஆற்றியுள்ள ரொனால்டோ, அதன் பின்னர் முதன் முறையாக போர்த்துக்கல் குழு ஐரோப்பியா சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் உதவினார்.

"நான்காவது முறையாக இந்த விருதினை நான் வெல்வேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நான் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்" என்று விருதினைப் பெற்றுக் கொண்ட போது ரொனால்டோ தெரிவித்தார்.

"எனது ரியல் மாட்ரிட் கிளப்பின் சக ஆட்டக்காரர்களுக்கும் போர்த்துக்கலைச் சேர்ந்த சக ஆட்டக்காரர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்" என்று அவர் சொன்னார்.

இந்த விருதினை ஏற்கெனவே ஐந்து முறை வென்றிருக்கும் அர்ஜெண்டினா வீரர் மெஸ்சி, இம்முறை 2ஆவது இடத்தைப் பிடித்தார். பிரென்சு வீரரான கிறிஷ்மான் 3ஆவது இடத்தைப் பெற்றார்.

 

 

 நியூயார்க், டிசம்.10- 1970-களின் பிற்பகுதியில் தெருக்களில் ஏக குஷியாக தொடங்கி, புயல் வேகத்தில் உலகை ஆக்கிரமித்த 'பிரேக் டான்ஸ்' (Break dance) இப்போது ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறப் போகிறது.

2018ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவின் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவிருக்கும் மூன்று விளையாட்டுப் போட்டிகளில் பிரேக் டான்சும் ஒன்றாகும். 

சுற்றிச் சுழன்று, உடலை முறித்து முறித்து, எக்கசக்கமாய் நெளிந்து நெளிந்து ஆடும் பிரேக் டான்சை அனைத்துலக ஒலிம்பிக் மன்றம், இளைஞர் ஒலிம்பிக்கில் சேர்க்க முடிவெடுத்துள்ளது.

பிரேக் டான்சை அடுத்து கராத்தே மற்றும் செங்குத்து சுவர் ஏறுதல் ஆகிய இரு விளையாட்டுக்களும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிக மான இளைஞர்களை ஈர்க்க இந்த பிரேக் டான்ஸ் போட்டி பெரிதும் உதவும் என்று ஒலிம்பிக் மன்றம் தெரிவித்தது.

 

 

ரியோடி ஜெனிரோ, டிசம்.6- அண்மைய விமான விபத்தில் பிரேசிலைச் சேர்ந்த சாப்பெக்கியோன் கால்பந்து கிளப்பின் அனைத்து வீரர்களும் பயிற்சி அதிகாரிகளும் மாண்ட துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து தென் அமெரிக்காவின் 'கோப்பா சுடாமெரிக்கா' சாம்பியன் பட்டம் சாப்பெக்கி யோன் குழுவுக்கே வழங்கப்பட்டது.

கொலம்பியாவில் நடக்கவிருந்த இறுதிப்போட்டிக்காக பிரேசிலில் இருந்து சாப்பெக்கியோன் கால்பந்து கிளப் குழு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள், அதிகாரிகள் உள்பட 71 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்தில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இந்த இறுதி ஆட்டத்தில் சாப்பெக்கியோன் குழுவுக்கு எதிராக அத்லெட்டிக்கோ நேஷனல் குழு விளையாடவிருந்தது.

இந்நிலையில், இந்தத் துயரமான விபத்தில் சாப்பெக்கியோன் வீரர்கள் அனைவரும் இறந்து போய்விட்டதால், 'கோப்பா சுடாமெரிக்கா' சாம்பியன் பட்டத்தை அவர்களுக்கே காணிக்கையாக்கப் படவேண்டும் என்று போட்டிக் குழுவான அத்லெட்டிக்கோ நேஷனல் கேட்டுக் கொண்டது.

இதனைப் பரிசீலித்த தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனம், இறுதியில்  சாம்பியனாக சாப்பெக்கியோன் கிளப்பை பிரகடனம் செய்தது. அதேவேளையில் அத்லெட்டிக்கோ நேஷனல் குழுவுக்கு 'நேர்மைத் திறன்மிக்க குழு' என்ற விருது விருது அளிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டுக்கான 'சுடாமெரிக்கா சாம்பியன்' என்ற முறையில் அதற்கான ரொக்கப்பரிசு உள்பட அனைத்துப் பெருமைகளையும் அக்குழு பெறும் என்று கால்பந்து சம்மேளனம் தெரிவித்தது. 

 

 

மான்செஸ்ட்டர், டிசம் 4- இங்கிலீஷ் பிரிமியர் கால்பந்து லீக்கில் முதல் இரு முன்னணிக் குழுக்களான செல்சியிக்கும் மன்செஸ்ட்டர் சிட்டிக்கும் இடையேயான ஆட்டத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளில் தம்முடைய குழுவின் பங்கிற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அறிவித்தார் மன்.சிட்டி நிர்வாகி பெப் குவாடியோலா.

இந்த ஆட்டத்தில் செல்சி 3-1 என்ற கோல் கணக்கில் மன்.சிட்டியை வீழ்த்தி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. தொடர்ச்சியாக எட்டு ஆட்டங்களில் வென்ற செல்சிக்கு இந்த ஆட்டம் ஒரு சிறந்த வெற்றி முத்திரையாகக் கருதப்படுக்கிறது. இந்த ஆட்டத்தில் செல்சியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடிக்க கடுமையாகப் போராடிய மன்.சிட்டி, முடிவில் தோல்விகண்டது என்பதோடு இதற்காக கடும் விளைவுகளையும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது

ஆட்டம் முடியவிருந்த தருணத்தில் முரட்டுத்தனமாக விளையாடியதற்காக செர்ஜியோ அக்குயெரோ நடுவரால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து மறுநிமிடமே மற்றொரு ஆட்டக்காரரான பெர்டிணான்டினோவும் நடுவரால் வெளியேற்றப்பட்டார். 

கடும் சச்சரவு மற்றும் மோதல்கள் காரணமாக இருதரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட கைகலப்பு ஏற்பட்டது. வெளியேற்றப்பட்ட அக்குய்ரோ அடுத்த 4 ஆட்டங்களுக்கு விளையாட முடியாத வகையில் தடையை எதிர்நோக்கியுள்ளார். அதேவேளையில் பெர்டிணான்டினோ அடுத்து வரும் 3 ஆட்டங்களில் மன்.சிட்டிக்கு விளையாட முடியாது. 

"இந்த ஆட்டம் இப்படி முடிந்தது குறித்து பரிதாபமும் வேதனையும் அடைகிறேன். இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஆட்டத்தின் முடிவில் நிர்வாகி பெப் குவாடியோலா குறிப்பிட்டார்.

ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் மன்.சிட்டியின் தாக்குதலை முறியடிக்க முயன்ற போது செல்சி தற்காப்பு வீரர் காஹில் சொந்தக் கோல் அடித்தார். இதனால் முற்பகுதி ஆட்டத்தில் மன்.சிட்டி 1-0இல் முன்னணிக்கு வந்தது.

பிற்பகுதி ஆட்டத்தில் பதிலடி கொடுத்த செல்சி குழு, டியாகோ கோஸ்டா, வில்லியன் மற்றும் ஹஷார்ட் மூலம் கோல்களைப் போட்டு 3-1 என்ற கோல்கணக்கில் வென்றது.

 

 

லண்டன், டிசம்.4- இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் வெஸ்ட்ஹாம் குழுவுக்கு எதிராக அர்சனல் வீரர் அலெக்ஸி சன்செஸ் தனது அபார ஆட்டத்தின் வழி மூன்று கோல்களை அடித்த வேளையில் 5-1 என்ற கோல்களில் அர்சனல் வாகைசூடியது. 

முற்பகுதி ஆட்டத்தில் ஒஷில் அடித்த கோலினால் 1-0 என்ற நிலையில் முண்ணனி வகித்த அர்சனல், பிற்பகுதியில் அதிரடியாக ஆடியது. சன்செஸ் 72ஆவது, 80ஆவது மற்றும் 86ஆவது நிமிடத்தில் தொடர்ச்சியாக முன்று கோல்களை அடித்து அர்சனல் ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். 

அதேவேளையில் 84ஆவது நிமிடத்தில் அர்சனல் சேம்பர்லின் மூலம் மற்றொரு கோலைப்போட்டது. 83ஆவது நிமிடத்தில் வெஸ்ட்ஹாம் வீரர் கரோல் தமது குழுவின் ஒரேயொரு கோலைப் போட்டார். இந்த வெற்றியின் வழி அர்சனல் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்குத் தாவியது.

 

பார்சிலோனா, டிசம்.4- மிகவும் பரப்பாக எதிர்பார்க்கப்பட்ட லா லீக்கா கால்பந்தில் ரியல் மாட்ரிட்டிற்கும் பார்சிலோனாவுக்கும் இடையேயான ஆட்டத்தின் முடிவு 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

வழக்கம் போலவே தனது நுட்பமான கால்பந்து திறன் மூலம் ரசிகர்களை பார்சிலோனா கவர்ந்தது என்றாலும் முற்பகுதி ஆட்டத்தில் கிறிஸ்தி யானோ ரொனால்டோ தலைமையிலான ரியல் மாட்ரிட் பலமுறை அபாயகரமான தாக்குதல்களை நடத்தியது.

எனினும், 53ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் முன்னணி வீரர் லூய்ஸ் சுவரெஸ் ஒரு கோலைப் போட்டு அரங்கை அதிர வைத்தார். இதன் பின்னர், தொடர்ந்து இருதரப்பும் மாறி மாறித் தாக்குதல் நடத்திய போதிலும் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொள்ள பார்சிலானா தற்காப்பில் கூடுதல் கவனம் செலுத்தியது.

ஆட்டம் பார்சிலோனாவுக்குச் சாதகமாக முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த தருணத்தில், அதிர்ச்சி தரும் வகையில் 90ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் ராமோஷ் ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமமாக்கினார். இதனால், ரியல் மாட்ரிட் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பார்சிலோனா ரசிகர்கள் ஏமாற்றப் பெருமூச்சை விட்டனர்.

 

More Articles ...