அன்னியத் தொழிலாளர்கள் விவகாரம்: அரசின் தெளிவான கொள்கை அவசியம்

Blog
Typography

உள்நாட்டுத் தொழில் துறைகளில் வேலை செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆள் எடுக்கும் விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் திடீர் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளது.

மூன்று ஆண்டுகால இடைவெளிக்குள் 15 லட்சம் வங்காள தேசத்தினர் வேலைக்கு ஆள் எடுக்கப்படுவார்கள் என்று மலேசியத் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ அலகமட் ஸாஹிட் ஹமிடி ஓர் அறிவிப்பைச் செய்திருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்துமட்டும் இவ்வளவு எண்ணிக்கையில் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று தொழிற்சங்கங்களும் முதலாளிகள் சம்மேளனமும் அரசியல் கட்சிகளும் சமூக மற்றும் அரசு சாரா அமைப்புக்களும் ஒரு சேரக் கண்டனக் குரல் எழுப்பின.

தொழிலாளர்கள் விவகாரத்தில் எப்போதுமே எதிரும் புதிருமாக இருந்து வரும் மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரசும் முதலாளிகள் சம்மேளனமும் இந்த விஷயத்தில் ஒருமித்துக் கண்டனக் குரல் எழுப்பியது  அதிசயம் தான்.

மலேசியத் தொழில் துறையினருக்கும் நிறுவனங்களுக்கும் 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்கள் இப்போதைக்குத் தேவையா?  

இது முறையாக ஆராயப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட முடிவா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வியாக எழுந்தன

ஆனாலும், இது பற்றிக் கவலைப் படாமல், அவசர அவசரமாக 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்நாட்டுடன் மலேசியா கையெழுத்திட்டது.

 இதனால், உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் மலேசியர்களிடயே ஏற்பட்டதில் நியாயம் இருக்கிறது.

குறைந்த சம்பளத்தில் எத்தகைய அடிப்படைச் சலுகைகளையும் கோராத தொழிலாளர்கள் வேலைக்குக் கிடைக்கும் போது, கூடுதல் சம்பளம், கூடுதலான அடிப்படை சலுகைகளைக் கொண்ட மலேசியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க உள்நாட்டு நிறுவனங்கள் முன்வராது என்பதே இந்த அச்சத்திற்குக் காரணம்.

மேலும் உள்நாட்டுக்காரர்கள், அழுக்குப் படிகிற, கடினமான வேலைகளைச் செய்ய முன் வருவதில்லை என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி கூறியதானது, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போலாகிவிட்டது. எதிர்ப்பும் நெருக்கடியும் அதிகமானதால், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மறுதினமே மற்றொரு அறிவிப்பு வந்தது.

அதாவது, வங்காளதேசம் உள்பட வேறு எந்த நாட்டிலிருந்தும் புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பது ஒட்டுமொத்தமாக முடக்கிவைக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்த போது அது முன்னுக்குப் பின் முரணாதாக அமைந்தது.

இப்போது 20 லட்சம் வெளிநாட்டவர்கள் வரை மலேசியாவில் சட்டவிரோதமாக வேலைசெய்து வருகின்றனர் என சில தரப்புகள் கூறுகின்றன. இவர்களை முறையாகப் பதிவு செய்து, பர்மிட்டுகளை வழங்கி, தொழில்துறைகளின் தேவைக்கு ஏற்ப, வேலைக்கு அமர்த்துவதற்கான பதிவையும் மலேசிய அரசாங்கம் தொடங்க  ஏற்கெனவே முடிவு செய்திருக்கிறது.  

உணவகங்கள், மற்றும் தோட்ட விவசாயம் போன்ற துறைகளில் பணிபுரிவதற்கான பர்மிட்டுகளை மட்டுமே இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த மலேசியா, அண்மைய காலத்தில் அதனையும் முற்றாக நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காள தேசத் தொழிலாளர்களால், முன்பு பல்வேறு சமூகப் பிரச்சனைகள் உருவாகி, மலேசியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது இன்னும் அந்நாட்டு மக்களின் மனதில் நிழலாடுவதால் தான் 15லட்சம் பேரை வேலைக்கு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது

 

இப்போதுள்ள சூழலில் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கும் விஷயத்தில் மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இல்லை. வேலைக்கு வெளிநாட்டுக்காரர்களை எடுப்பதில் இன்னும் சில முரண்பாடான அறிவிப்புகள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.