Top Stories

 மிலான், நவ.24- இத்தாலியின் மிலான் நகரில் 22 வயதுடைய இளம் பெண்ணுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து, ஐந்து சகாக்களுடன் சேர்ந்து கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபட்டதாக, பிரபல பிரேசிலிய கால்பந்து வீரர் ரோபினோவுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அல்பானியாவைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணை இங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் சந்தித்த ரோபினோவும் அவரது கூட்டாளிகளும் அந்தப் பெண்ணுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பின்னர், கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபட்டனர் என்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் ரோபினோ நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகவில்லை என்றாலும் தம்முடைய வழக்கறிஞர் மூலம் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியிருந்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலியின் பிரபல கால்பந்துக் குழுவான  ஏ.சி.மிலான் குழுவில் முன்னணி கோல்வீரராக விளையாடிய பின்னர் 2015ஆம் ஆண்டில் அக்குழுவை விட்டு வெளியேறினார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் 33 வயதுடைய ரோபினோவுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரேசில் தேசிய குழுவுக்காக 100 முறை விளையாடியுள்ள அவர், தற்போது பிரேசிலின் அத்லெட்டிக்கோ மினெய்ரோ குழுவுக்கு விளையாடி வருகின்றார்.

 

ஜகார்த்தா, நவ.23- பயணிகள் கூட்டம் நிரம்பிய இரயில் ஒன்றில், எப்படியோ நுழைந்த பாம்பினை தனது கைகள் கொண்டே கொன்ற இந்தோனிசிய இளைஞர் இணையத்தளத்தில் மிகவும் பிரபலமானார். 

ஜகார்த்தாவிலிருந்து போகோர் செல்லும் இரயில் ஒன்றில், பயண உடைமைகள் வைக்கும் இடத்தில் பாம்பு ஒன்று ஊர்வதைக் கண்டதும், அந்த இரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது. 

பயணிகள் பலர் அந்தப் பாம்பைக் கண்டு நடுங்கிக் கொண்டிருந்த வேளையில், அடையாளம் தெரியாத இந்தோனிசிய இளைஞர் ஒருவர் அந்தப் பாம்பின் வாலைப் பிடித்து, இரயில் தரையில் பலமுறை ஓங்கி அடித்து அதனைக் கொன்றார். இதனை எதிர்பார்க்காத பலர், ஆச்சரியத்தில் திகைத்தனர். பலர் அந்தக் காட்சியை தங்களின் கைத்தொலைபேசியகளில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர். அந்த ஆடவரின் அடியில், அந்தப் பாம்பு அங்கேயே இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளம் கொண்ட அந்த இறந்துப் போன பாம்பினை, வெளியே நின்றிருந்த காவலரிடம் அந்த இளைஞர் தூக்கி வீசினார். அந்த பாம்பின் ரகம் மற்றும் அது விஷத்தன்மை கொண்டதா என்பது குறித்து எங்கும் குறிப்பிடப் படவில்லை. அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. பயணி ஒருவரின் பயண உடைமையில் அந்தப் பாம்பு நுழைந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

"அச்சம்பவம் குறித்து பயணிகளிடம் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்" என்று அந்த இரயில் நிர்வாகத்தின் பேச்சாளர் தெரிவித்துக் கொண்டார். 

 

பெர்லின், நவ.22- ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் விழாக் கால விற்பனைச் சந்தை ஒன்றில் மிகப்பெரிய அளவில்  பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த கும்பலைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

ஒரே சமயத்தில் பல்வேறு நகரங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் வழி பயங்கரவாதத் தொடர்புடைய 7 ஆசாமிகளைக் கைது செய்துள்ளனர்.  இந்த நடவடிக்கையில் 500க்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டனர்.

இவர்கள் பயங்கரவாத இயக்கம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்றும் கிறிஸ்துமஸ் சந்தையைக் குறிவைத்து தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவருமே சிரியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஜெர்மனியில் அடைக்கலம் கோரி ஏற்கெனவே விண்ணத்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதிக அளவில் உயிருடற்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் சந்தையை இவர்கள் குறிவைத்தனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 லாகூர், நவ.22- பாகிஸ்தானின் புகழ்பெற்ற நடிகையான  மீரா என்ற இர்திஸா ரூபாப்பிற்கு ‘நான்தான் புருஷன்’ என்று ஓர் ஆள் வழக்குப் போட, அந்த வழக்கில் தீர்வுகாண முடியாமல் அந்த நடிகை 7 ஆண்டுகளாக நீதிமன்றத்துடன் போராட்டம் நடத்தி வருகிறார்.

பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்து, பல திரையுலக விருதுகளை வென்றவர் இர்திஸா. 40வயதுடைய அவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியிலும் தனது ரசிகர்கள் மத்தியிலும் புகழோடு விளங்கி வருகிறவர் ஆவார். இவர் திரையுலகில் மீரா என்ற பெயரில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2009 -ஆம் ஆண்டில் பைசலாபாத் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகரான அத்தீப் ரஹ்மான் என்பவர், தன்னை இர்திஸா இரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால், கணவர் தான் என்பதை வெளியில் சொல்லாமல் மறைத்து, தன்னுடைய ரசிகர்களிடம் தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று இர்திஸா கூறிவருவதாகவும் வழக்கு ஒன்றைத்தொடுத்தார்.  இர்திஸாவின் சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாட்டாளராக அத்தீப் இருந்துள்ளார்.

எனவே,  தானே இர்திஸாவின் கணவர் என்பதை  நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் இர்திஸா வேறு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் அத்தீப் ரஹ்மான் வழக்குத் தொடுத்தார்.

அதற்கென திருமணச் சான்றிதழ் உள்பட சில ஆவணங்களை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை கடந்த 7 ஆன்டுகளாக நடந்து வருகின்றது. இந்த வழக்கை வேண்டுமென்றே கால தாமதப்படுத்தும் வகையில் ஒத்திப்போடும் வேலைகளில் அத்தீப் ஈடுபட்டு வருவதாக இர்திஸாவின் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே தான் இன்னும் திருமணம் ஆகாத பெண் தான் என்றால் அவரது கன்னித்தன்மையை மருத்துவ ரீதியில் சோதிக்கவேண்டும் என்று ஒரு வழக்கைத் தொடுத்து பல காலமாக அத்தீப் இழுத்தடித்து வந்தார். அந்த வழக்கின் முடிவில் ‘அதெல்லாம் முடியாது’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நடிகை இர்திஸா வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அவர் தொடுத்த வழக்கையும் பல காலம் இழுத்தடித்து ‘அதுவும் முடியாது’ என்று அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், திருமண ஆவணங்கள் எனக்கூறி அத்தீப் தற்போது தாக்கல் செய்திருக்கும் சில ஆவணங்கள் போலியானவை என்று இர்திஸா தரப்பு வாதாடிய போதிலும்  பல முறை நீதிமன்றத்திற்கு வராமல் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் அத்தீப்.

இதனிடையே இந்த வழக்கு நீண்ட காலமாக நீடித்துக் கொண்டிருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்று அறிவித்த நீதிமன்றம், இறுதியாக டிசம்பர் 30ஆம் தேதியோடு வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

வாஷிங்டன் நவ.22- அடுத்தமாதம்  இந்தியாவுக்கு வருகை புரியவிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப்பின் பயண மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் பற்றிய எந்தவொரு தகவலையும் அதிகாரிகள் வெளியிடக்கூடாது என அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது.

ஒரு துளி தகவல் கூட வெளியாகக் கூடாது என்பதே அமெரிக்காவின் உத்தரவாகும் இவாங்காவின் பாதுகாப்புக்கு எதிராக அதிகபட்ச  மிரட்டல் நிலவுகிறது என்பதால் மேற்கண்ட உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உலகத் தொழில்முனைவர்களின் உச்சநிலை மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன்  இவாங்காவும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த மாநாட்டை இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து நடத்துகின்றன. அதிபர் டிரம்ப்பின் ஆலோசகராக இவாங்கா தற்போது பொறுப்பில் இருந்து வருகிறார்.

முதல் முறையாக அவர் ஆசியாவுக்கு வருகை புரியவிருக்கிறார்.  இவாங்காவின் இந்திய வருகை குறித்து இந்திய அதிகாரிகளுக்கு கூட தகவல்கள் இல்லை. 

அவரது இந்திய நிகழ்ச்சிகள்ல் என்னென்ன என்று விபரம் எவருக்கும் தெரியாது. அவருக்கான மிரட்டல் மிகக் கடுமை அடையுமேயானால் அவரது இந்திய வருகை ரத்து செய்யப்படக்கூடிய  வாய்ப்புக் கூட உள்ளது என இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.