லங்காவியில் 'சிறை'பட்ட லாசா யானையை விடுவிப்பீர்! -அரசுக்கு ஹாலிவுட் நடிகை கடிதம்

World
Typography

 

கோலாலம்பூர், அக்.12- லங்காவித் தீவிலுள்ள யானை சாகச மையத்தில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் மலேசிய யானை ஒன்றை கோல காண்டா யானை சரணாலயத்தில் விடுவிக்கும்படி பிரபலான ஹாலிவுட் நடிகை பிரிஜெட் பார்டோட் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

'லாசா' என்றழைக்கப்படும் அந்த யானையின் நலத்தில் அக்கறைக் கொண்டுள்ள நடிகை பிரிஜெட் பார்டோட், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஶ்ரீ வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபாருக்கு அக்டோபர் 11-ஆம் தேதி இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  

லாசா, தனியாக வாழ்ந்து வருவதாகவும், பல மணி நேரங்களுக்கு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளதாகவும், விலங்கு ஆர்வலரான பிரிஜெட் தெரிவித்துள்ளார். அந்தத் தீவிற்கு சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, அந்த யானையை தவறாக பயன்படுத்துவதாகவும், அது கொடுமைக்கு உள்ளாவதாகவும் அவர் சொன்னார். 

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக, அந்த யானை இந்தச் சுற்றுலாப் பகுதியில் சுற்றுலா பயணிகளை மிகிழ்விக்கும் நோக்கத்திற்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. கட்டுமரங்களை இழுக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு, வாழ்க்கையின் பாதியை மிருகக்காட்சி சாலையிலேயே கழித்து விட்டது என அவர் சுட்டிக் காட்டினார். 

"சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டுச் செல்லும் பொருட்டு யானைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதை உங்களின் அமைச்சு கண்டிப்பாக அறிந்திருக்கும். ஆண் யானைகள் உட்பட எந்த யானையும் தனித்து வைக்கப்படக் கூடாது. மற்ற யானைகளுடன் சேராமல், லாசாவை தனித்து வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. பிராணிகளுக்கும் மனது உண்டு. இதனால், லாசா மன அழுத்தத்தில் இருக்கக்கூடும்" என்று தாம் கருதுவதாக அவர் சொன்னார்.

சங்கிலியால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டதால், லாசா இயல்பான யானைப் போல் அல்லாமல், மற்ற யானைகளுடன் சேராமல் முடங்கிக் கிடக்கிறது. கூடிய விரைவில் லாசா சரணாலயத்தில் விடுவிக்கப்பட வேண்டும் என பிரிஜெட் கேட்டுக் கொண்டுள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS