5 வயது சிறுவனை அடையாளம் தெரியாத ஆடவர் அறைந்தார்; சிங்கப்பூர் போலீஸ் விசாரணை! 

World
Typography

சிங்கப்பூர், ஜன.11- இங்குள்ள ரிவர்வேல் கெரெஸெண்ட் என்ற பகுதியில், கடந்த சனிக்கிழமையன்று ஐந்து வயது சிறுவன் ஒருவனின் கன்னத்தில் ஆடவர் ஒருவர் அறைந்தது தொடர்பில் சிங்கப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

அப்பகுதியிலுள்ள கடையில் நின்றிருந்த அச்சிறுவனை தனது காலால் உதைத்த அந்த ஆடவர், சில நிமிடங்களில் அவனது கன்னத்திலும் ஓங்கி அறைந்தார். அந்த ஆடவரின் அந்தச் செயல், அக்கடையின் சிசிடிவி காமிராவில் பதிவானதைத் தொடர்ந்து, அச்சிறுவனின் தாயார் அது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். 

அதுமட்டுமல்லாது, அந்த ஆடவனின் வீட்டைக் கண்டறிந்த அச்சிறுவனின் பெற்றோர், அது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், போலீசார் அந்த ஆடவனை கைது செய்யவில்லை என்று அச்சிறுவனின் தாயார் தனது முகநூல் அகப்பக்கத்தில் தெரிவித்தார். 

அச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆடவனை தாங்கள் விசாரித்ததாகவும், அது குறித்த அனைத்து தேவையான விவரத்தையும் அச்சிறுவனின் பெற்றோரிடம் வழங்கிவிட்டதாக போலீசார் ஊடகங்களில் தெரிவித்தனர். 

"குற்றவியல் சட்டத்தின் 323-ஆவது பிரிவின் கீழ், இந்தச் சம்பவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இக்குற்றத்தைப் புரிவோர் பொதுவாக கைது செய்யப்பட மாட்டார்கள்" என்று போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.  

சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் போலீஸ் அதீத கவனம் செலுத்தி வருவதாகவும், தங்களின் கடமையை செய்ய தாங்கள் என்றுமே தவறியதில்லை என்றும் போலீஸ் தரப்பினர் கூறியுள்ளனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS