'வாட்ஸ்-அப்'புக்கும் வந்தது ஆபத்து; குழுமத்திற்குள் ஊடுருவும் களவானிகள்!

World
Typography

சான்பிரான்சிஸ்கோ, ஜன.11- உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்ற செயலி என்றால் அது வாட்ஸ்-அப் தான். மிக எளிதாக, அதே வேளையில் குறைந்த இணைய வேகம் இருந்தாலும் கூட வாட்ஸ்- அப் உதவிகரமாக இயங்கக்கூடியது. எனினும் அதுவும் இப்போது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. 

வாட்ஸ்-அப் குழுமத்திற்குள் யாருக்கும் தெரியாமல் அதற்குள் புகுந்து  தகவல்களை களவாட முடியாது என்பதால், அதற்கு மதிப்பு சற்று தூக்கலாகவே இருந்தது.  ஆனால் வாட்ஸ்-அப்  குழுமங்களுக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்து தகவல்களை களவாட முடியும் என்று அண்மைய ஆய்வு ஒன்றில் அம்பலமானது போது அதிர்ச்சி தான் ஏற்பட்டது.

வாட்ஸ் அப் குழுமத்திற்குள் யார் நினைத்தாலும் யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது அதன் 'அட்மின்' பொறுப்பாளர் நினைத்தால் மட்டுமே யாரும் உள்ளே சேர்க்கப்படமுடியும். ஆனால்,  இப்போது 'ஹேக்கிங்' செய்து உள்ளே நுழைய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 'அட்மினு'க்குத் தெரியாமலேயே நாம் நினைக்கும் நபர்களை, குழுவில் இருப்பவர்களுக்குக் கூடத் தெரியாமல் சேர்த்துக் கொள்ள முடியும். 

முக்கியத்துவம் வாய்ந்த வாட்ஸ்-அப் குழுக்களில் விவாதிக்கப்படும், பகிரப்படும் தகவல்களை அபகரிப்பதற்காக இந்த கணினி ஊடுருவல் பேர்வழிகள் இந்தக் கள்ள வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த ரூர் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள், சுவிட்சர்லாந்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் வாட்ஸ் அப் ஊடுருவல் சாத்தியம் என்பதை தெளிவாக விளக்கினர். வாட்ந் அப்பிலிருந்து தொலைபேசி எண் திருட்டுக்களை எளிதாகச் செய்யமுடியும்.

ஆனால், வாட்ஸ்-அப் நிறுவனம் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்தத் தகவல் தங்களுக்கு மிக முக்கியமானது என்றும் இதுகுறித்து தாங்கள் விரிவான ஆய்வை மேற்கொள்ளப்  போவதாகவும் அது குறிப்பிட்டது. அப்படியொரு ஒருவேளை வாட்ஸ்-அப் குழுமத்திற்குள் அட்மின் அனுமதியின்றி யாரும் ஊடுருவ முடியும் என்பது உண்மையாக இருக்குமானால், அதனைத்  தடுப்பதற்கான வழிமுறைகளைத் தாங்கள் கண்டறியப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS