தமிழர்களை நோக்கி கழுத்தறுக்கும் சைகை: அதிகாரியின் இடைநீக்கம் ரத்து- சிறிசேனா

World
Typography

கொழும்பு, பிப்.7-  லண்டனில் ஈழத் தமிழர்களைத் கழுத்தறுப்பேன் என்பது போன்று சைகை காட்டி மிரட்டல் விடுத்த சிங்கள ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டதை இலங்கை அதிபர் சிறிசேனா ரத்து செய்து தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

லண்டன் நகரில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இலங்கை சுதந்திர தினத்தை நிராகரித்து ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாகவே நடைபெற்றது. 

இதனால் கோபமடைந்த இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னாண்டோ உள்ளிட்டோர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். அத்துடன் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பது போல சைகை காட்டி மிரட்டினார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவலானது. இதனையடுத்து  சிங்கள ராணுவ அதிகாரியை இலங்கைக்கு நாடு கடத்த இங்கிலாந்து எம்பிக்கள் வலியுறுத்தி வந்தனர். 

இந்தச் சூழ்நிலையில் இன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சர்ச்சைக்குரிய ராணுவ அதிகாரி பணியில் இருந்து உடனே பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்றும் அவர் மீது ராணுவ ரீதியிலான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இராணுவ அதிகாரி மீதான இடைநீக்கத்தை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ரத்துச் செய்தார். அதோடு, உத்தரவைப் பிறப்பித்தவர்கள் மீது கடும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். 

அதேநேரத்தில் சிங்கள இராணுவ அதிகாரியின் கொலை மிரட்டல் செயல் பிரிட்டன் சட்டப்படி குற்றமாகும் என இங்கிலாந்தின் மூத்த பத்திரிகையாளர் கெல்லும் மக்ரே கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS