லாட்டரியில் ரிம. 57 லட்சம் பரிசை வென்றவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை!

World
Typography

பேங்காக், பிப்.9- லாட்டரியில் ஜாக்பாட் தொகையாக  கிட்டத்தட்ட 57 லட்சம் ரிங்கிட் பரிசு கிடைத்த  குதூகலத்தில் இருந்த தாய்லாந்துக் காரார் ஒருவர், அன்றிரவு நண்பர்களை எல்லாம் அழைத்து விருந்து வைத்து அசத்தினார். மறுநாள் லாட்டரிப் பணத்தைப் பெறுவதற்காக பரிசு விழுந்த டிக்கெட்டை தேடிய போது அது கிடைக்காமல் போகவே மனமுடைந்து தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிழக்குத் தாய்லாந்திலுள்ள சோன்பூரி மாநிலத்தில் இந்தத் துயரச் சமபவம் நடந்தது. 42 வயதுடைய ஜிராவுத் போங்பான் என்ற நபருக்கு லாட்டரியில் மலேசிய ரிங்கிட் மதிப்பில் 57 லட்சம் ரிங்கிட் பரிசாக விழுந்திருந்தது. இதனால் உற்சாகம் அடைந்த அவர், குடும்பத்தினருடனும் நண்பர்கள் பலரை அழைத்தும் விருந்து வைத்துக் கொண்டாடினார்.

மறுநாள் காலையில் பணத்தை மீட்க செல்லும் பொருட்டு பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டைத் தேடினார். ஆனால் அதிர்ச்சிதான் மிஞ்சியது. பரிசுக்குரிய லாட்டரி டிக்கெட்டை காணவில்லை. எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

மனமுடைந்து போன ஜிராவுத் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொண்டு தற்கொலை புரிந்து கொன்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவர் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில் லாட்டரி பரிசு விழுந்த அந்த டிக்கெட்டை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை.  இதனை அறிந்து என் குடும்பத்தினர் கூட என்னை கேலி செய்வார்கள். நண்பர்கள் எல்லாம் கேலி செய்வார்கள். இதற்கு மேல் நான் வாழ விரும்பவில்லை என்று எழுதியுள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை இந்த லாட்டரி டிக்கெட்டை யாராவது திருடி இருப்பார்களோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அந்தப் பரிசு தொகையை யாரேனும் வாங்க முன்வருகிறார்களா? எனக் கண்டறியயும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS