தமிழர்களைக் கழுத்தறுக்கும் சைகை: பிரிட்டன் -இலங்கை உறவில் வெடிப்பு!

World
Typography

கொழும்பு, பிப்.10-  லண்டனில் ஈழத் தமிழர்களைத் கழுத்தறுப்பேன் என்பது போன்று சைகை காட்டி மிரட்டல் விடுத்த சிங்கள ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவின் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ததால் இலங்கை அதிபர் மைத்திரி சிரிசேனா புதிய அரச தந்திரச் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளார்.

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையேயான அரச தந்திர உறவில் அதிபர் மைத்திரியின் இந்த நடவடிக்கை புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்ற போது அதனை நிராகரித்து ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாகவே நடந்தது.

இதனால் கோபமடைந்த இலங்கை தூதரகத்தில் பணிபுரியும் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னாண்டோ அலுவலகத்தை விட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களை நோக்கி கழுத்தை அறுப்பது போல சைகை காட்டி மிரட்டினார்.  இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவலானதால் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்தச் சூழ்நிலையில்  இலங்கை வெளியுறவு அமைச்சகம் சர்ச்சைக்குரிய ராணுவ அதிகாரியை உடனே பணி இடைநீக்கம் செய்வதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே அந்த உத்தரவை அதிபர் மைத்திரி ரத்து செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

அதிபர் மைத்திரியின் இந்த நடவடிக்கை,  பிரிட்டன் வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே தமிழர்களுக்கு இலங்கையின் சிங்கள ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பிரிட்டனில் பரவலாக நிலவி வரும் வேளையில் ராணுவ அதிகாரியின் கழுத்தறுப்புச் சைகை அந்த அச்சத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட அந்தத் தூதரக அதிகாரியை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரிட்டீஷ் எம்.பி.கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான இறுக்கமான போக்கை இனி பிரிட்டன் கடைபிடிக்கும் என்று அரசதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS