பேருந்துகள் மீது தற்கொலைத் தாக்குதல்! சிரியாவில் 78 குழந்தைகள் பலி!

World
Typography

 ரஷிடான்,(சிரியா) ஏப்ரல்.17-சிரியா அரசாங்க படையின் வசமிருந்த கிராமங்களில் இருந்து பஸ்களில் வெளியேற்றப்பட்ட மக்களின் பேருந்து அணிமீது நடத்தப்பட்ட கோரமான தற்கொலைத் தாக்குதலில் 129 பேர் மாண்டனர். இவர்களில் 78 அப்பாவிக் குழந்தைகள் உடல் சிதறி மாண்டது நெஞ்சைப் பிழிவதாக அமைந்துள்ளது. 

அல்புவா மற்றும் கஃப்ராயா என்ற இரு கிராமங்கள் அரசுப் படைகள் இருந்து வந்த நிலையில், கிளர்ச்சிப் படையினர் இக்கிராமங்களைப் பல காலம் முற்றுகையிட்டிருந்தனர். இந்நிலையில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இங்கு வசித்த மக்களை வெளியேற்ற இணக்கம் காணப்பட்டது.

அவ்வாறு அவர்கள் வெளியேறுவதற்கு கிளர்ச்சிப் படையினர் வசமிருந்த ஒரு இடத்தில் பல பேருந்துகள் கொண்டு வரப்பட்டு அனைத்துலக கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் மக்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்ட போது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரத் தாக்குதலில் பலரது உடல்கள், அப்பகுதி முழுவதும் சிதறி விழுந்ததன. இவர்களில் பலர் குழந்தைகள் ஆவர். கிட்டத்தட்ட 78 குழந்தைகள் உள்பட 129 பேர் மாண்டனர் எனத் தொடக்கத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கானோர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சுற்றிலும் இருந்த பல வாகனங்கள் சேதமடைந்ததோடு தீப்பற்றி எரிந்தன. அந்தத் தற்கொலைப் பேர்வழி, உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வதாக கூறிவிட்டு பேருந்துகளுக்கு அருகிலிருந்த எரிபொருள் கொள்கலன் முன்பு தற்கொலைத் தாக்குதலை நடத்தினான். இதற்கு இதுவரை எந்தவொரு தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS