வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான '457 விசா' முறை: கைவிட்டது ஆஸி.

World
Typography

மெல்போர்ன், ஏப்ரல்,18- திறன்பெற்ற குடியேற்ற தொழிலாளர்களுக்கு விசா வழங்கும் '457 விசா திட்டம்' என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தை  கைவிட முடிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டேர்ன்புல் அறிவித்திருக்கிறார்.

தற்போது ஏற்பட்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிப்பதற்காக இந்த முடிவைத் தாம் எடுத்திருப்பதாக அவர் சொன்னார். ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புக்களில் முன்னுரிமை ஆஸ்திரேலியர்களுக்குதான் வழங்கப்படவேண்டும். அதன் பின்னரே தொழில்துறை யினர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பக்கம் கவனத்தை திருப்பலாம் என்றார் அவர்.

ஆஸ்திரேலியா எப்போதுமே ஒரு குடியேற்ற நாடுதான். எப்போதுமே அது அப்படித்தான் இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை என்று பிரதமர் மால்கம் சொன்னார். ஆனால், நமது வெற்றிகளின் அடித்தளம் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த அடித்தளம் என்பது நமது குடியேற்றக் கொள்கைதான். இந்தக் கொள்கை, நமது தேசிய நலன்களோடு இணைந்து செயல்படுவதாக அமைதல் வேண்டும் என்றார் அவர்.

ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகள் ஆஸ்திரேலியர்களால் முதலில் நிறைவு செய்யப்படவேண்டும். எனவே, தற்காலிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கு வகை செய்த '457 விசா' திட்டத்தை அகற்றுவதாக அவர் சொன்னார்.

இந்த விசா திட்டத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டின் செப்டம்பரில் இருந்து 95,757 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS