பிரிட்டனில் திடீர்த் தேர்தல்; உள்குத்து காரணமா? 

World
Typography

லண்டன், ஏப்ரல்.18- ஜூன் மாதம் 8ஆம் தேதி பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனப் பிரதமர் திரேசா மே விடுத்த திடீர் அறிவிப்பினால் பிரிட்டிஷ் மக்கள் சகட்டு மேனிக்குக் குழம்பியுள்ளனர்.

ஏன், எதற்கு, என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு மத்தியில் மக்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். திடீர்ப் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் திரேசா, இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவைப் பெறத் திட்டமிட்டுள்ளார்.

2015-இல் நடந்த பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வென்று டேவிட் கெமரூன் மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்றார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற நெருக்குதல் ஏற்பட்டு, அதற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சுமார் 44 ஆண்டுகளுக்கு மேலாக அங்கத்துவம் பெற்று வரும்  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது நல்லதல்ல என பிரதமர் கேமரூன் கூறிவந்தார். அவ்வாறு வெளியேறுவதை அவர் எதிர்த்தார்.

ஆனால், இந்த வாக்கெடுப்பில் அதிர்ச்சி தரும் வகையில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என ஆதரித்து பெரும்பான்மை பிரிட்டீஷ் மக்கள் வாக்களித்ததால் தனது முயற்சி தோல்வியடைந்ததை முன்னிட்டு டேவிட் கேமரூன் பிரதமர் பதவியை விட்டு விலகினார். அவருக்குப் பதிலாக கட்சி, திரேசா மேயைப் பிரதமராக்கியது.

இந்நிலையில் திடீர் பொதுத்தேர்தலை நடத்தப் போவதில்லை எனக் கூறி வந்த பிரதமர் திரேசா, நேற்று பொதுத்தேர்தலை அறிவித்தது ஏன்? என்ற குழப்பம் ஏற்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகள் முக்கியமானவை. எனவே, குறைந்த பெரும்பான்மையில் ஆட்சியில் இருக்கும் தம்முடைய கட்சி மக்களின் முழு அதிகாரத்தையும் பெறவேண்டும் என்பதற்காகவே அவர் தேர்தலை அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், சொந்தக் கட்சிக்குள்ளேயே, உள்குத்துகள் அதிகரித்து விட்டன. சமாளிப்பதற்குப் பொதுத்தேர்தலே சரியான தீர்வு என அவர் கருதியதாகவும் தெரிகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS