முதியவரைக் கொன்று முகநூலில் பதிவு செய்த காதகன் தற்கொலை!

World
Typography

 எரிய், (பென்சில்வேனியா) ஏப்ரல் 19- வழியில் சென்றுக் கொண்டிருந்த 74 வயது முதியவரை சுட்டுத்தள்ளி விட்டு அந்தக் கொலைக் காட்சியைத் தனது முகநூலில் பதிவேற்றம் செய்த நபருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில் அந்த நபர் நேற்று தற்கொலை செய்து கொண்டு மாண்டான்.

14 பேரக் குழந்தைகளுக்குத் தாத்தாவான ரோபெர்ட் காட்வின் என்ற முதியவரை இருதினங்களுக்கு முன்பு கிளைவ்லேண்ட் என்ற இடத்தில் ஸ்டிபன் ஸ்டிவ் (வயது 37) என்ற நபர் சுட்டுக்கொன்றான்.

 அது சம்பந்தமான வீடியோவை தன்னுடைய முகநூலில் பதிவேற்றம் செய்தான். மேலும் இதற்கு முன்பு 12 பேரை இதேமாதிரி சுட்டுக் கொன்று   இருப்பதாக  அவன் கூறிக்கொண்டான்.

இந்தக் கொடூரச் சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. போலீசார் ஸ்டிபனைத் தேடத் தொடங்கிய போது தப்பிவிட்டான். இரு தினங்களுக்குப் பின்னர் அண்டை மாநிலமான பென்சிவ்வேனியாவிலுள்ள எரிய் என்ற இடத்தில் அவனை மெக்டானால்டு உணவகத்தில் அடையாளம் கண்ட ஊழியர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்த போலீசார், ஸ்டிபனின் காரைப் பின்தொடர்ந்து விரட்டினர். போலீசார் அவனது காரை மோதி, தடுத்து நிறுத்த முயன்ற போது அவனுடைய கார் பள்ளத்தில் இறங்கி விபத்துக்கு உள்ளாகியது. ஸ்டிபனின் காரை போலீசார் சுற்றி வளைத்த போது அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பின்னர், தன்னைத்தானே அவன் சுட்டுக் கொண்டு மாண்டான்.

இதனிடையே ஸ்டிபனின் மரணச் செய்தியைக் கேட்ட முதியவர் காட்வினின் மகள் பிரெண்டா ரெமோன், மகிழ்ச்சி தெரிவித்தார். "ஆனால், இப்படி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவனைச் சாக அனுமதித்திருக்கக்கூடாது. நூற்றுக்கணக்கான குண்டுகள் அவன் உடலை துளைத்தெடுக்கும் வண்ணமாக அவனைச் சுட்டுத் தள்ளியிருக்க வேண்டும்" என்று தனது தந்தையின் இறுதிச் சடங்கின்போது பிரெண்டா தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS