"டிரம்ப்பு பதவியை பறிச்சுட்டாங்க..!" மனைவியின்  பொய்யில் மகிழ்வுடன் உயிர்விட்ட கணவர்!

World
Typography

போர்ட் லேண்ட், ஏப்ரல்.19 அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது என்று மனைவி சொன்ன ஒரு பொய்யைக் கேட்டு 75 வயது கணவர் மன மகிழ்ச்சியில் சந்தோஷமாக உயிரைவிட்டார்.

இந்தச் சம்பவம் ஒரேகன் மாநிலத்திலுள்ள போர்ட்லேண்ட் என்ற இடத்தில் நடந்தது. இது குறித்து அந்தப் பெண்மணி நியூயார்க் டெய்லி நியூஸ் என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஒரேகன் மாநிலத்தில் போர்ட்லேண்ட் நகரில் மைக்கேல் கார்லான்ட் மற்றும் அவருடைய மனைவி திரேசா இல்லியோட் தம்பதியினர் வசித்து வந்தனர். கணவர் கார்லான்டிற்கு 75 வயதாகிறது. அண்மைய காலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. சிலமணி எந்த நேரத்தில் அவரது உயிர் பிரிந்து விடும் என்று தெரிவித்த மருத்துவர், அவரது கடைசி ஆசை நிறைவேறப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று மனைவி திரேசா இல்லியோட்டிடம் கூறியிருந்தார்.

மனமுடைந்து போன திரேசா, அவரது இறுதி ஆசை என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த பின்னர், திடிரென தன்னுடைய கணவரின் படுக்கைக்கு மிக அருகில் சென்று "உங்களுக்கு ஒரு தகவல் தெரியுமா, அதிபர் பதவியைப் பறித்து விட்டார்கள் விரைவில் புதுத்தேர்தல் நடத்தப் போவதாக செய்தியில் சொன்னார்கள்" என்று குறிப்பிட்டார்.

மனைவி கூறியது காதில் விழுந்ததும் கண்விழித்த கணவர் கார்லான்ட், மனைவியை மகிழ்ச்சி பொங்கப் பார்த்தார். 'ஆமாம், உண்மைதான் என மீண்டும் கூறிய போது வெகுநேரம் அவருடைய முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. சிறிது நேரம் மலர்ந்த முகத்தோடு இருந்த அவரது உயிர் பின்னர் பிரிந்தது. அவர் இறந்த பின்னரும் அவருடைய முகத்தில் அந்தச் சிரிப்பு அப்படியே இருந்தது.

இது தொடர்பாக நியூயார்க் நியூஸ் தினசரிக்கு பேட்டி அளித்த போது அவருடைய மனைவி திரேசா இந்த விபரங்களை விரிவாகத் தெரிவித்துள்ளார். 

"என் கணவர் தொடக்கம் முதற்கொண்டே டிரம்பை வெறுத்து வந்தார். அவர் தேர்தலில் ஜெயிக்கவே கூடாது என்று விரும்பினார். ஆனால், அவருடைய துரதிஷ்டவசமாக டிரம்ப் ஜெயித்து விட்ட பின்னர் சிறிது காலம் கவலையாகத்தான் இருந்தார்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய பதவி பறிக்கப்பட வேண்டும் என்று என் கணவர் பெரிதும் ஆசைப்பட்டார். அந்த நாளுக்கு ஆவலாய் காத்திருக்கிறேன் என்று அவர் அடிக்கடி கூறிவந்தார். உயிர்நீர்க்கும் தருணத்தில் ஒருவரின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட வேண்டும் அல்லவா. 

எனக்கு அவருடைய கடைசி ஆசை எது? என்பது மருத்துவர் என் கணவரைக் கைவிட்ட போதுதான் நினைவுக்கு வந்தது.   எனது கணவர் நிம்மதியாக உயிரை விட வேண்டும் என்பதற்காக அப்படியொரு பொய்யான தகவலைக் கூறினேன்’ -இவ்வாறு திரேசா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS