Latestமலேசியா

அதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன? – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்

அலோஸ்டார், ஜூலை 10- அலோஸ்டாரில் ஜாலான் ஸ்டேசனில் பழமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தை உடைத்தது குறித்து கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி முகமட் நோர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை 1 மணிக்கு அந்த ஆலயம் உடைக்கப்பட்டது குறித்து அலோஸ்டாரின் முன்னாள் நகரான்மைக் கழக உறுப்பினர் ஆர். குமரகுரு நாய்டு உட்பட பல தரப்பினர் குறைகூறினர்.

பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் மாநில நிர்வாகத்தை எடுத்த பின்னர்தான் அந்த ஆலயம் இருக்கும் பகுதி போக்குவரத்திற்கு நெரிச்சலாக இருப்பதாகக்கூறி ஆலயத்தை உடைக்கும் விவகாரம் எழுந்ததாக அவர் சொன்னார். பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின்போது புகார் இருந்தது. அந்த ஆலயத்தை வேறு இடத்தில் மாற்றும் ஆலோசனைக்கு ஆலய நிர்வாகம் இணக்கம் தெரிவித்திருந்தையும் அவர் தெரிவித்தார்.

அதோடு நீண்ட நாட்களாக இருக்கும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை உடைக்கக்கூடாது என்ற உத்தரவை கெடா பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பிறப்பித்திருந்தையும் குமரகுரு சுட்டிக்காட்டினார். திடீரென பெரிக்காத்தான் அரசாங்கம் மாநில நிர்வாகத்தை எடுத்தவுடன் இந்த பழம்பெருமை வாய்ந்த ஆலயம் உடைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார். இந்த ஆலயத்தை உடைப்பதை ஒத்திவைக்கும்படி ஜூலை 6 ஆம் தேதி ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்ட போதும் அதனை புறக்கணித்துவிட்டு ஆலயம் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கெடா மந்திரிபுசார் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட ஆலயத்தை மாற்று இடத்திற்கு கொண்டுச் செல்லும்படி போதுமான கால அவகாசம் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதாக கெடா மந்திரிபுசாரின் சிறப்பு அதிகாரியான பி.குமரேசன் தெரிவித்தார். இதனிடையே அந்த ஆலயம் உடைக்கப்பட்டது குறித்து தாம் அதிர்ச்சியடைவதாக கெடா மாநில ம.இ.கா தலைவர் எஸ். ஆனந்தன் கூறினார். அந்த ஆலய விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என ஜூன் 30ஆம் தேதி கெடா ம.இ.கா கடிதம் அனுப்பியிருந்து. இது குறித்து விளக்கம் பெறுவதற்காக கெடா மந்திரிபுசாரிடம் தாம் தொடர்புகொள்ளப்போவதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!