Latestவிளையாட்டு

இந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்

புதுடெல்லி, மே 26 – ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி குழுவிற்கு மூன்று முறை தங்கப்பதக்கம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இந்தியாவின் சிறந்த ஹாக்கி விளையாட்டாளர் பல்பீர் சிங் காலமானார்.

அண்மைய சில வாரங்களாக மூன்று முறை மாரடைப்புக்கு உள்ளான பல்பீர் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பல்பீர் சிங் தமது 95வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

1948 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டி, 1952 ஆம் ஆண்டு ஹெல்சின்கி ஒலிம்பிக் போட்டி மற்றும் 1960ஆம் ஆண்டு மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் மூன்று முறை இந்திய ஹாக்கி குழு தொடர்ச்சியாக தங்கம் பெறுவதற்கு அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு வரலாற்றுப் பூர்வமான சாதனையை ஏற்படுத்தித் தந்தவர் பல்பீர் சிங் ஆவார் .

1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஹாலாந்து குழுவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா  6 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 5 கோல்களை அடித்து பல்பீர் சிங் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் இறுதியாட்ட வரலாற்றில் 5 கோல் அடித்து பல்பீர் சிங் செய்த சாதனையை இதுவரை எந்த ஒரு ஆட்டக்காரும் இன்னும் முறியடிக்கவில்லை.

1948ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த சில மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முன்னாள் காலனித்துவ நாடான பிரிட்டனை 4-0 என்ற கோல்கணக்கில் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது. அந்த போட்டியில் இந்தியாவுக்கான இரண்டு கோல்களை பல்பீர் அடித்தார்.அந்த போட்டிக்கு பிறகு அவர் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக திகழ்ந்தார்.

1975ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற மூன்றாவது உலகக்கிண்ண ஹாக்கி போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியக் குழு 1 – 0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய குழு சாம்பியனாக வாகை சூடியது. அப்போது இந்தியக் குழுவின் நிர்வாகியாகவும் பல்பீர் சிங் செயல்பட்டார்.

அவர் சிறந்த நிர்வாகியாக பணியாற்றினார் என 1975ம் ஆண்டு உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி க் குழுவின் கேப்டன் அஜித் பால் சிங் தெரிவித்தார்.

நம்மை நாம் நம்ப வேண்டும் அடுத்து குழுவில் ஒற்றுமை. இந்த இரண்டும் இருந்தால் வெற்றியின் உச்சத்தை அடையலாம் என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டவர் பல்பீர் சிங்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!