Latestஇந்தியா

கதவின் கண்ணாடியை தற்செயலாக மோதியதில் பெண்மணி மரணம்

பெரம்பூர், ஜூன் 16 – தனது இரு சக்கர வாகனத்தின் சாவியை மறந்து வண்டியிலேயே வைத்துவிட்டதால் அதனை எடுக்கச் சென்ற பெண்மணி ஒருவர் வங்கி கதவின் கண்ணாடி பகுதியை தற்செயலாக மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று தமிழ்நாடு பெரும்பூரில் நிகழ்ந்துள்ளது.
வங்கிக்குச் சென்ற 43 வயது வீணா எனும் அப்பெண் தனது இரு சக்கர வண்டியின் சாவியை மறந்து வண்டியிலேயே விட்டு விட்டதால் அவசர அவசரமாக வங்கியின் உள்ளேயிருந்து அதனை எடுக்க கதவை நோக்கிச் சென்றுள்ளார். ஆனால் தவறுதலாக கதவின் கண்ணாடிப் பகுதியை வேகமாக மோதியதில் கண்ணாடி நொருங்கி வீணாவின் மீது பாய்ந்தது.
இச்சம்பவம் தொடர்பான காணொளி வங்கியின் CCTV காமிராவில் பதிவாகியுள்ளது.
கண்ணாடி துண்டுகள் அவர் மீது பாய்ந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. முதலில் கீழே விழந்த அவர் எழுந்துவிட்டார். அதற்குள் வங்கியினுள் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்து அருகிலிருந்த நாற்காலியில் உட்கார வைத்தனர். வீணாவின் உடம்பிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியாவதையும் அந்த காணொளியில் தெரிகிறது. வங்கியில் இருந்த சிலர் உதவி கேட்டு வெளியே ஓடுகின்றனர். வீணாவிற்கு காயம் பட்ட இடத்தில் துணியால் சுற்றப்பட்டு பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!