Latestமலேசியா

கோவிட்-19 தொற்றுக்கு புதிதாக அறுவர் பாதிப்பு

புத்ராஜெயா, ஜூன் 19 – நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு இன்று அறுவர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சரவாவில் புதிதாக தொற்று பரவிய இடத்தில் மேலும் ஒருவர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இதன்வழி கோவிட் தொற்றினால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,535ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்தபோது இருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். அவர்களில் ஒரு மலேசியர் மற்றொருவர் நிரந்தர வசிப்பிட தகுதியைக் கொண்ட வெளிநாட்டினர் என சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதர நால்வரும் உள்ளூரில் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளான மலேசியர்களாவர். இவர்களில் ஒருவர் தாபிஸ் பள்ளி மாணவர், மற்றொருவர் பல்கலைக்கழக மாணவராவார். சரவா பிந்துலுவில் கிடோரோங் கோவிட் தொற்றின் புதிய மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை அங்கு அறுவர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இன்னமும் 344 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முழுமையாக குணமடைந்தவர்களில் 70 பேர் இன்று மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர். நாட்டில் கோவிட் தொற்று தொடங்கியது முதல் 8,070 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார். புதிய மரண சம்பவம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மரண எண்ணிக்கை இன்னமும் 121ஆக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!