Latestமலேசியா

டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் – மரணம் தொடர்பில் 9ஆவது சந்தேகப் பேர்வழி தேடப்படுகிறார்

கோலாலம்பூர், ஜூன் 29 – வர்த்தகர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பில் தேடப்பட்ட 26 வயது 8வது சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்தனர். கோலாகுபு பாரு, புக்கிட் செந்தோசாவில் நேற்று இரவு 7.30 மணியளவில் அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் பாட்ஷீல் அகமட் உறுதிப்படுத்தினார்.
இதற்கு முன் அந்த சந்தேகப் பேர்வழியின் புகைப்படத்தையும் ஞாயிற்றுக்கிழமை போலீசார் வெளியிட்டிருந்தனர். விசாரணைக்காக ஜூலை 5ஆம் தேதிவரை அந்த ஆடவரை தடுத்து வைக்கும் உத்தரவை போலீசார் பெற்றுள்ளனர்.
இதனிடையே டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் மற்றும் மரணம் தொடர்பில் 9ஆவது சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வருகின்றனர். ரவாங், நியூ கிரின்பார்க் என்ற முகவரியைச் சேர்ந்த 28 வயது விக்னேஸ்வரர் தேடப்படுவதாக பாட்ஷீல் தெரிவித்தார். ஆறுமுகம் கடத்தப்பட்டு மரணம் அடைந்த விவகாரம் தொடர்பில் 13ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட டத்தோ பிரமுகர் ஒருவர் உட்பட இதுவரை 8 சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பண்டார் ஸ்ரீ டாமன்சாரா ஜாலான் பெர்சியாரான் பெர்டானாவிலுள்ள விளையாட்டு மைதானத்தில் மெது நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஜூன் 10ஆம் தேதி காலை 10.30 மணியளவில் 55 வயதான ஆறுமுகம் கடத்தப்பட்டு ரவாங் தாமான் கோசாஸில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டுள்ளார். ஆறுமுகத்தை விடுவிப்பதற்கு கடத்தல்காரர்கள் 5 கோடி சிங்கப்பூர் டாலரை பிணைப்பணமாக கேட்டுள்ளனர். எனினும் ஆறுமுகத்தின் குடும்பத்தினர் பிணைப்பணம் எதனையும் கொடுக்கவில்லை. அதன் பின்னர் அவரது சடலம் ரவாங் பெஸ்தாரி ஜெயா அருகே உள்ள புதரில் அழுகிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!