Latestமலேசியா

திவ்யநாயகியின் காணொளியை பதிவிட்டவரை குற்றஞ்சாட்ட முடியும்; பயனீட்டார் உரிமை குழு கூறுகிறது

கோலாலம்பூர்,மே 23- உண்மைக்கு புறம்பான காணொளியை முகநூலில் பதிவேற்றம் செய்து அதனால் ஏற்பட்ட வேதனையில் 20 வயது திவ்யநாயகி தூக்கில் தொங்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் அல்லது நபர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்ட முடியும் என பயனீட்டாளர் உரிமை குழுவினர் கூறியுள்ளனர். இந்த நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் மற்றும் 1998ஆம் ஆண்டின் தொடர்பு , பல்லூடக சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்ட முடியும்.

தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் வகையில் மன அழுத்தத்தினால் திவ்யநாயகி ராஜேந்திரன் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த “ஜோக்கர் ஒருவன்” முகநூல் பக்கத்தை நடத்திவந்த நபர் மீது குற்றவியல் சட்டத்தின் 306ஆவது விதியின் கீழ் குற்றஞ்சாட்ட முடியும் என மலேசிய இணைய பயனீட்டாளர் சங்கத்தின் சட்ட ஆலோசனகர் ஆர். விக்ரமன் தெரிவித்தார்.
பினாங்கிலுள்ள செவன் இலெவன் கடையில் வேலை செய்து வந்த திவ்யநாயகி தன்னுடன் வேலை செய்துவந்த சக ஊழியருடன் இந்திப் பாடல் டிக்டாக் காணொளியை “ஜோக்கர் ஒருவன்” என்ற முகநூல் கணக்கில் செயல்பட்டு வந்த நபர் அதனை பதிவேற்றம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து திவ்யநாயகியை முகநூலில் பலர் கடுமையான விமர்சனம் செய்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தில் மட்டுமின்றி சமூகத்திலும் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த காணொளி வெளியான பின் அதனை அகற்றும்படி “ஜோக்கர் ஒருவன்” முகநூல் பக்கத்திற்கு தாங்கள் கோரிக்கை விடுத்த போதிலும் அதனை ஏற்பதற்கு அந்த பக்கத்தை நடத்தி வந்த நபர் மறுத்துவிட்டார். மாறாக அந்த டிக் டாக் காணொளி அகற்றப்படுவதாக இருந்தால் திவ்யநாயகி மன்னிப்பு கேட்கும் காணொளியை அனுப்பிவைக்கும்படி “ஜோக்கர் ஒருவன்” பக்கத்தை நடத்தி வந்த நபர் கூறியதாகவும் அவரது மாமா கே.சத்தியசீலன் தெரிவித்தார். ஒரு காணொளி உண்மையானதா என்பதை உறுதிப்படுத்தாமல் அதனை பதிவேற்றம் செய்யும் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க முடியம் என்றும் விக்ரமன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!