Latestமலேசியா

மகாதீர் பிரதமராக நீடிப்பதே மாமன்னர் விருப்பம்; “மொஹிடின்” கூறும் ஒலிப்பதிவு வெளியானது

கோலாலம்பூர், ஜூன் 11 – பக்காதான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கத்திற்கு பதில் பெரிகாத்தான் நேஷனல் ஆட்சி அமைத்தாலும் துன் மகாதீரே பிரதமராக நீடிக்க மாமன்னர் விரும்புகிறார் என பெர்சத்து உச்சமன்றக் கூட்டத்தில் “மொஹிடின் யாசின்” கூறுவதாக உள்ள ஒலிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 23ஆம் திகதி நடந்த கூட்டத்தில் பிரதமர் மொஹிடின் யாசின் போன்று உள்ள குரல் அவ்வாறு பேசியிருப்பது அப்பதிவில் உள்ளது. அப்பதிவு துன் மகாதீருக்கு ஆதரவான முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர் அரசாங்கம் மாறினாலும் துன் மகாதீர் பதவி விலக வேண்டியதில்லை என்றும் அதனை தலைமை நீதிபதி உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாமன்னருக்கு அன்வாரை பிடிக்கவில்லை என்றும் அக்குரல் சொல்வது போன்று பதிவாகியுள்ளது. தாமும் PKR துணைத்தலைவர் அஸ்மின் அலி உட்பட அறுவர் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மாமன்னரைச் சந்தித்து புதிய அரசாங்கம் அமைவதற்கு துன் மகாதீருக்கு 133 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதை நிருபிக்கும் சத்திய பிரமாண வாக்குமூல கடிதங்களை சமர்பிக்க விருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த பதிவில் உள்ள குரல் உண்மையில் மொஹிடின் யாசினுடையதா என்பது இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
பிப்ரவரி 24ஆம் திகதி பக்காதான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் மொஹிடின் குரல் போன்று உள்ள ஒலிப்பதிவு ஒன்று வெளியானது. அதில் அம்னோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கவர அவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதுபற்றி மொஹிடின் இதுவரை கருத்துரைக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!