Latestமலேசியா

மொஹிடின் அமைச்சரவை குறித்து அம்னோ தலைவர்களில் சிலர் ஏமாற்றம்

கோலாலம்பூர், மார்ச் 12 – பிரதமர் மொஹிடின் யாசினின் புதிய அமைச்சரவையை அம்னோவைச் சேர்ந்த சில தலைவர்கள் குறைகூறியுள்ளனர். மொஹிடினின் அமைச்சரவையில் கட்சியின் பிரநிதிதித்துவம் நியாயமற்ற வகையில் இருப்பதாக பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினரான அஸிலினா ஒத்மான் கூறினார்.

பங்காளித்துவ கூட்டணி உணர்வை மதிக்கும் வகையில் அம்னோவுக்கு அமைச்சரவையில் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லையென அவர் சொன்னார். பெரிக்காத்தான் நேசனலில் 28 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தும் பிரதமரும், இரண்டு மூத்த அமைச்சர்களும் பெர்சத்து பிரிபூமி கட்சியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அதே வேளையில் 35 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்னோவுக்கு ஒரு மூத்த அமைச்சர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயம் என அஸிலினா கேள்வி எழுப்பினார். குடும்பம் , மகளிர் சமுக மேம்பாடு, விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்புக்கள் அம்னோவுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அஸாலினா தெரிவித்தார்.

மொஹிடின் அமைச்சரவை பெரிக்காத்தான் உணர்வை பிரதிபலிக்கவில்லை என்ற தமது ஆதங்கத்தை ஜோகூர்பாரு அம்னோ தலைவர் ஷாரிர் சமாட் வெளியிட்டார். தேசிய முன்னணி, பெர்சத்து மற்றும் பாஸ் கட்சி ஆகியவற்றை முழுமையாக பிரதிபலிப்பதாக புதிய அமைச்சரவை இருந்திருக்க வேண்டும். பேரரசரால் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படும்வரை மொஹிடின் இந்த உணர்வை கொண்டிருந்தார். ஆனால் அமைச்சரவை நியமித்தபோது அந்த உணர்வை அவர் வெளிப்படுத்தவில்லை என ஷாரிர் கூறினார்.

சபா அம்னோ தலைவர் புங் மொக்தாருக்கு நீதிமன்ற வழக்கு இருப்பதால் அவர் அமைச்சரவையில் நியமிக்கப்படவில்லை. ஆனால் கிமானிஸ் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முகமட் அலாமின் துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!